அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும்
Incidents in the Life of a Slave Girl - நாவல்
Django Unchained - திரைப்படம்
எனக்கு Quentin Tarantino இன் படங்களைப் பார்ப்பது மிகவும் அலாதியான விடயம். அவரது Pulp Fiction படத்தை தியேட்டரிலும், VHS tape இல், DVD இல், இறுதியாக BlueRay இல் கூட வாங்கி பதினைந்து தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன் என்றால் எனது பித்து எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்!
எனவே போன வருடம் Quentin Tarantino இன் Django Unchained படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எப்படியும் அதனைப் பார்த்தேவிடுவது என்று தீர்மானித்துவிட்டிருந்தேன். படத்தின் கதை வேறு கறுப்பின அடிமையைக் கதாநாயகனாகக் காட்டும் வித்தியாசமான cowboys கள் வரும் வெஸ்டர்ன் படம் என்பதால் கூடுதல் ஆர்வம் தொற்றியிருந்தது.
அமெரிக்காவின் கறுப்பின அடிமைகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல் படத்தை இரசிக்க முடியாது என்று புரிந்ததால், கறுப்பின அடிமைகளைப் பற்றிய நாவல் ஒன்றைப் படிக்கலாம் என்று Kindle இல் தேடியபோது அடிமையாக இருந்த பெண்ணால் எழுதப்பட்ட "அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்" (Incidents in the Life of a Slave Girl) எனும் நாவல் அதிகம் பிரபல்யமாக இருந்தது. எனவே படம் வருவதற்கு முன்னர் படித்திடவேண்டும் என்று நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.
இற்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் தென்பகுதியில் அடிமையாக்கப்பட்டு இருந்த பெண் Linda Brent எனும் புனைபெயரில் அவரது வாழ்வில் நடந்த விடயங்களை வைத்து ஒரு சுயசரிதம் போன்று நாவலை உருவாக்கியிருந்தார். இது 1850-60 களில் பத்திரிகை ஒன்றில் தொடராக வந்து பின்னர் நாவலாக பதிப்பிக்கப்பட்டிருந்தது.
ஓரளவு வசதிபடைத்த அடிமையாக இருந்தவர்களின் குடும்பத்தில் பிறந்த லிண்டா ஆறு வயதில் தாயார் மரணிக்கும்வரை அடிமை என்ற துன்புறுத்தல்கள் எதுவுமின்றி சகோதரர்களுடன் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தார். ஒரு அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அவ்வடிமையின் எஜமானியின் சொத்து எனும் சட்டத்திற்கு ஏற்ப, தாயாரின் மரணத்திற்குப் பின்னர் லிண்டா வெள்ளை எஜமானி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அந்த வெள்ளை எஜமானி ஓரளவு நல்லவராக இருந்தபடியால் லிண்டாவிற்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார். துரதிஸ்டவசமாக எஜமானி சிறிது காலத்தின் பின்னர் இறந்தபோது லிண்டாவை இன்னொரு உறவினருக்கு எழுதிக் கொடுத்திருந்தார். அதாவது அடிமைகளாக இருந்தவர்கள் மனிதர்களாக நடாத்தப்படாமல் வெறும் சொத்துக்களாகவே 150 வருடங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டிருதனர்.
புதிய எஜமானர்களான வைத்தியரும் அவரது மனைவியும் சிறுமியாக இருந்த லிண்டாவை மிகவும் மோசமாக துன்புறுத்தியதும், லிண்டா பருவம் எய்திய பின்னர், எஜமான வைத்தியர் அச்சிறுமியுடன் பாலியல் உறவுக்கு முயற்சிப்பதும், அதிலிருந்து தப்பிக்க லிண்டா போராடுவதும் கதையில் விலாவாரியாகச் சொல்லப்பட்டுள்ளது. எஜமானரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பிக்க லிண்டா இன்னுமொரு கல்யாணம் ஆகாத வெள்ளையின இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தி அவன் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகின்றாள். இதனால் கோபமுற்ற வைத்தியர் லிண்டாவை பருத்தித் தோட்டப் புறத்திற்கு அனுப்புகின்றார். தனது குழந்தைகள் நல்ல முறையில் நடாத்தப்படவில்லை என்பதனால், ஒருநாள் லிண்டா தலைமறைவாகின்றார். ஆயினும் அமெரிக்காவின் வடபகுதிக்கு தப்பிச் செல்லமுடியாமல் அவரது பேத்தியாரின் வீட்டின் ஒரு குழியில் 7 வருடங்கள் பிடிபடாமல் மறைந்து வாழ்கின்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட துன்பங்களும், அவர் மறைந்ததால், குழந்தைகளை சிறையில் போட்டு வாட்டுவதும், பிற கறுப்பின அடிமைகள் மீது கசையடி, கொடூர நாய்களை ஏவிவிடுதல் போன்ற மோசமான நடவடிக்கைகளும் கதையில் சொல்லப்பட்டுள்ளன.
7 வருட தலைமறைவு வாழ்வு நிரந்தரமானால் குழந்தைகளும் அடிமையாகிவிடுவார்கள் என்பதால், free states என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் வட பகுதிக்கு தப்பி வருகின்றார். எனினும் நியூ யோர்க் போன்ற சுதந்திர மாநிலங்களிலும் கறுப்பினத்தவர் மேல் பேதம் காட்டப்படுவதும், தப்பி ஓடிய அடிமைகளைத் திரும்ப பிடித்து ஒப்படைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் சுதந்திர மாநிலங்களிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டதும், ஒருவாறு குழந்தைகளை சுதந்திர மாநிலங்களுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு கல்வி வழங்கப் பட்ட கஷ்டங்களும், நல்லிதயம் படைத்த ஆங்கில சீமாட்டி ஒருவரின் உதவியோடு இறுதியில் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதுமாகக் கதை முடிகின்றது. இறுதிவரை தனது சுதந்திரத்தைப் பணம் கொடுத்து வாங்க மறுத்த லிண்டா, தப்பியோடிய அடிமைகளைப் பிடித்து ஒப்படைக்கும் சட்டம் (the Fugitive Slave Act) காரணமாக வேறு வழியின்றி ஆங்கிலச் சீமாட்டியால் 300 டொலர்களுக்கு வாங்கப்பட்டு அவர் மூலம் தனதும் பிள்ளைகளினதும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.
கறுப்பின அடிமை ஆண்கள் எதுவித கூலியுமின்றி பருத்தித் தோட்டங்களில் வேலை வாங்கப்படுவதும், மோசமாக தாக்கப்படுவதும், அடிமைப் பெண்கள் வெள்ளை எஜமானர்களின் பாலியல் இச்சைகளுக்கு தொடர்ந்து பலியாவதும், விருப்பமற்ற உடலுறவால் உருவாகும் குழந்தைகள் வெள்ளை நிறத் தோலோடு இருந்தாலும் நீக்ரோ என்று அடிமையாக விற்கப்படுவதும் அமெரிக்காவின் இருண்ட வரலாற்றுப் பக்கங்களைக் காட்டியது.
0000
இந்த நாவல் படித்து முடியும் தறுவாயில் Django Unchained திரைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. எனவே போன ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள சினிமாவில் படம் பார்க்கப் போயிருந்தேன். ஆச்சரியமற்ற வகையில் திரையரங்கு அதிகம் கறுப்பினத்தவர்களால் நிரம்பியிருந்தது. அடக்குமுறைக்கு உள்ளான இனத்தில் இருப்பதால் எப்போதும் கறுப்பினத்தவர்களோடு என்னை அடையாளம் காட்டுவதும் அவர்களுடன் நட்புப் பாராட்டுவதும் வழமை. அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு படித்திருந்ததால் இன்னும் கூடுதல் நட்புப் பாராட்ட வேண்டி அருகில் இருந்த பெண்கள் மீது சிநேகிதமான புன்னகையை உதிர்த்தவாறே படத்தைப் பார்க்க உட்கார்ந்தேன்.
Quentin Tarantin இன் படங்கள் அதிகம் வன்முறை நிறைந்தது. எனினும் இரத்தம் பீய்ச்சி அடிப்பது யதார்த்தத்தை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்படுவதால் நகைச்சுவை போன்றும் தோற்றமளிக்கும். Django Unchained திரைப்படம் கறுப்பின அடிமைகள் மீதான மோசமான ஒடுக்குமுறைகளைக் காட்டினாலும், கதையில் யதார்த்தத்திற்குப் புறம்பாக ஒரு கறுப்பினத்தவர், அதிலும் தப்பியோடிய அடிமை, சன்மான வேட்டைக்காரனாக (bounty hunter) ஆக காட்டப்பட்டுள்ளார்.
Jamie Foxx அடிமை ஜாங்கோவாக நடித்திருக்கின்றார். அமெரிக்காவில் தென்பகுதியிலுள்ள Texas பகுதியினூடாக கடுங்குளிர் நேரத்தில் அவரும் வேறு சில அடிமைகளும் கால் விலங்குகள் இட்டு அழைத்துச் செல்லப்படுகையில் முன்னாள் பல்வைத்தியராக இருந்து ஜேர்மன் சன்மான வேட்டைக்காரர் ஒருவரால் சிலரை அடையாளம் காட்டும் தேவைக்காக சங்கிலிப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். இந்த விடுவிப்பும் மிக வன்முறையான கொலைகளால் நிரம்பிய காட்சிதான்.
மிகவும் துல்லியமாக ஆங்கிலத்தில் உரையாடும் ஜேர்மானிய சன்மான வேட்டைக்காரன் ஜாங்கோவை விடுதலை செய்யும்போது அவர் எங்கு செல்லப் போகின்றார் என்று கேட்க, ஜாங்கோ தனது மனைவியைத் தேடப் போவதாகச் சொல்லுகின்றார். ஜாங்கோவின் மனைவியின் பெயர் ஜேர்மானியப் பெயராக இருந்ததாலும், ஜாங்கோவின் துப்பாக்கி சுடும் திறமையாலும் ஈர்க்கப்பட்ட ஜேர்மானிய சன்மான வேட்டைக்காரர் ஜாங்கோவிற்கு அவரின் மனைவியைக் கண்டுபிடிக்க உதவ ஒரு ஒப்பந்தத்திற்கு வருகின்றார். அதன்படி இருவரும் குளிர்காலத்தில் தேடப்படும் குற்றவாளிகளை வேட்டையாடிப் பணம் சம்பாதிப்பதென்றும், குளிர் முடிந்து கோடை தொடங்கிய பின்னர் ஜாங்கோவின் மனைவையைத் தேடுவதென்றும் முடிவாகின்றது. உறைபனிகளினூடே குதிரைகளில் சவாரி செய்து பல தேடப்படும் குற்றவாளிகளைக் கொன்று நிறையப் பணம் சம்பாதிக்கின்றார்கள். குருதி கொப்பளிக்கும் கொலைகள் நகைச்சுவை இழையோடு படமாக்கப்பட்டிருப்பதால் இரசிக்கக் கூடியதாக இருந்தது.
ஜாங்கோவின் மனைவி அடிமைகள் நிறைந்த மிசிசிப்பிப் பகுதியில் உள்ள பண்ணையொன்றில் இருப்பதாகத் தெரியவர இருவரும் அப்பெரிய பண்ணை நோக்கிப் பயணிக்கின்றார்கள். அப்பண்ணையின் நிறவெறி பிடித்த முதலாளியாக Leonardo DiCaprio திறம்பட நடித்திருக்கின்றார். அவரது வீட்டு அலுவல்களை மேற்பார்வை செய்யும் கைத்தடியூன்றி நடக்கும் முதிர்ந்த கறுப்பினத்தவராக Samuel L Jackson வருகின்றார். ஜேர்மன் வேட்டைக்காரரும் ஜாங்கோவும் பண்ணை முதலாளியின் சிறந்த சண்டைவீரர்களை விலைகொடுத்து வாங்குவது போல நடித்து, ஜாங்கோவின் மனைவியை மீட்டுச் செல்லப் போட்ட திட்டம் கறுப்பின வீட்டு மேற்பார்வையாளரால் கண்டுபிடிக்கப்பட 12000 டொலர்கள் கொடுத்து ஜாங்கோவின் மனைவியை வாங்குகின்றனர். விடைபெறும் தறுவாயில் பண்ணை முதலாளியான Leonardo DiCaprio கைலாகு கொடுக்குமாறு கேட்க அதை மறுக்கும் ஜேர்மானிய வேட்டைக்காரர் அவரைச் சுட்டுக் கொன்று விடுகின்றார். உடனடியாக DiCaprio இன் உதவியாளர் ஜேர்மானியரைச் சுட்டுக்கொலை செய்கின்றார். இந்தக் களேபரத்தில் ஜாங்கோவும் துப்பாக்கையைப் பறித்து சுட ஆரம்பிக்க பல கொலைகள் விழுகின்றன.
ஜாங்கோவின் மனைவியை பண்ணைக்காரர்கள் பிடித்துக் கொண்டதால், ஜாங்கோ சரணடையவேண்டி வருகின்றது. சரணடைந்த ஜாங்கோவை Samuel L Jackson அடிமை வியாபாரிகளுக்கு விற்றுவிடுகின்றார். அடிமை வியாபாரிகளுக்கு தன்னை சன்மான வேட்டைக்காரன் என்று நம்ம வைத்து அவர்களிடன் இருந்து விடுதலை பெற்று, விடுதலை பெறும்போது அவர்களை எல்லாம் சுட்டுவிழுத்தி தனது மனைவியை மீட்க ஜாங்கோ மீண்டும் பண்ணைக்குப் போகின்றார். பண்ணை முதலாளி DiCaprio இன் மரணச்சடங்கில் கலந்துவிட்டு வீடு திரும்பும் வீட்டு மேற்பார்வையாளன் Samuel L Jackson, கறுப்பின பணிப்பெண்கள் இருவர் தவிர்ந்த அனைவரையும் ஜாங்கோ கொல்கின்றார். Samuel L Jackson தனது உயிருக்கு மன்றாடும்போது அவர் முழங்கால்களில் சுட்டு வீட்டை குண்டு வைத்துத் தகர்க்கும்போது ஜாங்கோவின் மனைவி கைதட்டி மகிழ்ச்சியைக் காட்டுகின்றார். அப்போது திரையரங்கிலும் சில கைதட்டல்கள் கேட்டன!
அடிமைத்தனம் நிறைந்த இருண்ட கால கட்டத்தின் அவலங்களைத் தொட்டுக் காட்டும் பல காட்சிகள் நிறைந்ததும், நிறவெறி கொண்ட வெள்ளையினத்தவரின் குரூரத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியதும் மெச்சத்தக்கதே. வழமைபோன்று Quentin Tarantino இன் உரையாடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணிப் பாடல்கள், காட்சியமைப்புக்கள் பிரமிக்கத்தக்கவாறே இந்தப்படத்திலும் வந்துள்ளன. கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவன் cowboy ஆவது நம்பமுடியாது என்றாலும் அதனை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப் பொழுதுபோக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது.
Comments