Friday, April 14, 2017

இருட்டடி

எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த  ஒரு சாதாரண கிராமம்.  எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது.

ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து  நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு.

ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம்.  பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும்,  பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று.

பள்ளிக்கூட நாட்களில்  பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது.

 ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம்.  சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம்.

குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும்,  வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள்.  மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான்  அதிகம் மினக்கெடுவார்கள்.

பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு.

இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு.

ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள்  மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன்.

அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான்.  அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான்.  "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும்  அசூசையும் கலந்த  உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான்.

நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது,  எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட  பெரிய சவால் மாதிரி இருந்தது.  பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது.  சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன்.

குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்;  எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன்.

பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.

அநேகமான பெரிய பொடியங்கள் படிப்பிலும் அல்லது பெட்டை பாக்கிறதிலையும் மினக்கெடுவாங்கள் என்பதால் இதில் இரண்டிலும் அதிகம் ஈடுபாடு காட்டாத, நேர்மை, நியாயம், புரட்சி, தத்துவம் என்று எந்த நேரமும் பெரிய தடிமனான புத்தகங்களைப் படித்து, விளங்காத தமிழில் அகிலம், பிரபஞ்சம்  என்ற வாயோயாமல் தத்துவம் கதைக்கும் சொக்கியை கேட்டால் உடனடியாகச் சம்மதிப்பான் என்று நினைத்தேன்.

சொக்கிக்கு பதினேழு வயதுதான் என்றாலும் ஆள் வாதநாராயணி மரம் மாதிரி நல்ல வளர்த்தி. மெலிஞ்ச தேகம்.  முள்ளுப் பண்டி மாதிரி தலையும் தாடி, மீசையும் வளர்ந்திருக்கும். அவன் உலக சோசலிச இயக்கத்தினது நான்காம் அகிலத்தின் லியோன் ட்ரொட்ஸ்கியின் தீவிர பக்தனாக இருந்தபடியால் அவனுக்கு ட்ரொட்ஸ்கி என்று பட்டப்பெயர் வைத்தோம். அது எங்கள்  பல்லுக்கையே கொழுவிக்கொண்டு நிண்டு, வாய்க்குள்ள பூராததால் சொக்கி என்று மருவி விட்டது. அடிதடியில பெரிதாக ஈடுபாடு காட்டாவிட்டாலும், சமூக சிந்தனை கூடினவன். பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி போட அவன் போதுமென்று நினைத்தேன்.

அடுத்ததாக பெட்டைக் குயிலனை திகைக்க வைக்கக் கூடியமாதிரி அதிவேகமாக இயங்கி, இடக்கு முடக்கான இடத்தில மோட்டு அடிபோடக்கூடியவனும், அதிகம் விளக்கம் கேளாமல் சொன்னதைச் செய்யத் தோதாய் இருக்கக் கூடியவனுமான உசார் மடையன் கட்டையனைத் தேர்ந்தெடுத்தேன். கட்டையன் கருங்காலி நிறமும் வலிமையுமானவன். எங்களுடன் எப்பவும் கூடித் திரிய விரும்புகிறவன். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். இருந்துவிட்டு எப்போதாவது ஞாபகம் வந்தால் மாத்திரமே பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்ப்பான். அநேகமான நேரம் தோட்டம், துரவு என்று உழுவான் மாதிரி உழுதுகொண்டு திரிவதும், விளையாடுவதும்தான் அவனது தினப்படி உத்தியோகம்.

மூன்றாவதாகப் பனங்கூடலுக்குக் கிட்டடியில் உள்ள புக்கையரை பிடிக்கலாம் என்று தோன்றியது. புக்கையருக்கு என்னைவிட ஒருவயது குறைவு என்றாலும் நல்ல தோற்றம். விளையாடும்போது அடிக்கடி அளாப்பல் வேலைகள் செய்து சண்டையில் ஈடுபடுபவன் என்பதால் பிரயோசனப்படுவான் என்று நினைத்தேன். புக்கையரின் தகப்பனார் 'அன்' விகுதியில் பேர் வந்தால் 'அவன்/இவன்' என்று மற்றவர்கள் சொல்லக்கூடும் என்பதால் கவனமாகப் பிள்ளைக்கு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தவர். செல்லப் பெயரிலும் 'அன்' விகுதி வரக்கூடாது என்று தானே நல்ல மரியாதையான வீட்டுப் பெயரையும் வைத்திருந்தார். நாங்களும் புக்கையரின் தகப்பனாருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பட்டப்பெயரிலும் 'அன்' வராமல் பார்த்து வைத்த பெயர்தான் புக்கையர்.  அளாப்பிக் குழப்பும்போதுகூட கோபம் வந்தால் நாங்கள் "டேய் புக்கை" என்றுதான் கூப்பிடுவோம்.

உடனடியாகவே  தெரிவுசெய்த ஓவ்வொருவரினதும் வீடுகளுக்கும் போய் அவர்களைத் தனித்தனியே ரகசியமாக அழைத்து வெட்டையில் நடந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லி, பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி கொடுப்பதற்கு விடாப்பிடியாகச் சம்மதம் வாங்கிவிட்டேன். சொக்கி பல குறுக்குக்கேள்விகள் கேட்டாலும் நடந்தது  மிகவும் பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்ததும் ஒரு சமூகக் குற்றத்தை ஒழிக்கவேண்டும், ஒரு மோசமான சமூகவிரோதியைத் தண்டிக்கவேண்டும் என்பதற்காக என்னைவிட ஆவேசமாக இருட்டடி கொடுப்பதுதான் சரி என்ற முனைப்பில் நின்றான். அவன் படிக்கும் தடிமனான புத்தகங்களில் இப்படியான விடயங்களை எப்படிக் கையாளாலாம்  என்று அகிலக்காரர்களின் மத்திய குழுவினர் முன்னரே தீர்மானம் போட்டிருந்தார்களா என்று கேட்க நினைத்தாலும் அது அன்றையநாளின் முக்கிய நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

இருட்டடித் தாக்குதல் பற்றிய விரிவான  விளக்கத்திற்கு மூவரையும் பிற்பகல் மூன்று மணியளவில் குருவியன் வெட்டைக்கு   வரச்சொல்லிவிட்டு, மத்தியானச் சாப்பாட்டுக்கு அம்மா தேடத் தொடங்க முதலே வீட்டுக்குப் போனேன். சாப்பிடும்போதே ஏதோ பெரிய காரியம் ஒன்றைச் சாதிக்கப்போவதாக மனம் மிகவும் சந்தோஷப்பட்டது. மயிர்க்கூச்செறியும் மின்னல்வேகத் தாக்குதலை சிறு பிசகும் இல்லாமல் காரியமாற்ற ஒழுங்கான திட்டம் தேவை என்பதால் நண்பர்களைச் சந்திக்கும் தருணம் மட்டும் பொறுமைகாக்க முடியவில்லை. முற்றத்திற்குப் போவதும், வீட்டுக்குள் வருவதுமாக மனதுக்குள் பல கோணங்களில் இருட்டடித் தாக்குதலை ஒத்திகை பார்த்தேன். எதுவும் திருப்தியானதாக இருக்கவில்லை. ஆனால் நல்லா செவிள் பறக்க சப்பல் அடி கொடுக்கவேண்டும் என்ற உந்துதல் கூடிக்கொண்டுவந்தது.

முன்னைய வீரதீரச் செயல்களை நினைவுபடுத்த முயன்றேன். பெரிதாகத் தன்னும் சொல்லிக்கொள்ளுமளவில் ஒன்றும் இருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் அண்ணன், தம்பியோடு அடிபாடுகள் இருந்தாலும், வெளியில் நல்லபிள்ளையாகவே அநேகமாக இருந்திருக்கின்றேன்.  விளையாடும்போது இடையிடையே எதிர்க் 'கன்னை'யாருடனும் விளையாட்டு ருசியில் சில்லறைச் சண்டைகள் பிடித்திருந்தாலும், அவை ஒருநாளும் மோசமான சண்டைகளாக மாறியதில்லை.

இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது பருப்பனுடன் அங்கிரி போட்டதால் வகுப்பில் நாங்கள் இரு கோஸ்டிகளாக இருந்தோம். ஒரு கோஸ்டிக்கு நானும், மற்றக் கோஸ்டிக்கு பருப்பனும் தலைவர்கள். வகுப்பிலும் மைதானத்திலும் வாய்த் தர்க்கங்களிலும், பட்டம் தெளித்தலிலும்தான் எங்கள் கோஸ்டிகள் முறுகுப்பட்டுத் திரிந்தன. ஆளுக்காள் கை வைத்தால் தலைமை வாத்தி செகிடு கிழிய அறைந்துவிடுவார் என்ற பயத்தில் முட்டுப்பட்டதில்லை.

எங்கள் கோஸ்டிகளின் முறுகல் முற்றிய நேரத்தில்தான் ஊர்த்திருவிழா வந்தது. சப்பறத் திருவிழா இரவில் கோயில் பின்வீதியில்  சப்பறம் போனதன் பிற்பாடு போட்டுப் பிடிப்பதென்று பருப்பனும் நானும் சம்மதித்திருந்தோம். பருப்பன் என்னைவிடப் பலசாலி மாதிரி எனக்குத்தோன்றியது. அதனால் அவன் எதிர்பார்க்காதமாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தபோது, அப்போதுதான் வீட்டில் 'வயறிங்' வேலை செய்து மிஞ்சியிருந்த வயர் துண்டுகளில் இரண்டைச் சுத்திக் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டு கோயிலடிக்குப் போனேன்.

சப்பறத்திற்குப் பின்னால் பொருமிப் புடைத்த காற்சட்டைப் பொக்கற்றுகளுடன் போய்க்கொண்டிருந்தபோது பருப்பனும் அவன் கோஸ்டியினரும் சில அடிகள் பின்னாலேயே வந்துகொண்டிருந்தனர். சப்பறம் மேற்கு வீதியிலிருந்து வடக்கு வீதிக்குத் திரும்ப நாங்கள் இருதரப்பினரும் பின்தங்கிவிட்டோம்.  போட்டுப் பிடிப்பதில் முந்துபவன்தான் வெல்வான் என்பதால் பருப்பன் எதிர்பாராத வேளையில் பொக்கற்றுக்குளிருந்த வயரை சடாரென்று எடுத்துச் சுழற்றியபோது, திடீரென எங்கிருந்தோ வந்த பெரிய பொடியன் ஒருவன் எங்கள் இருவரையும் காதில பிடித்து "சின்ன முளையான்களாக இருக்கிற நீங்கள் கோயில் திருவிழாவில் சண்டைபிடிக்கப் போறியளோ?" என்று கேட்டு புறங்கையால் பளீரென கன்னத்தில் இருவருக்கும் மாறி மாறி அறைந்தான். வயர் வைத்திருந்த காரணத்தால் எனக்குப் பல அடிகள் விழுந்து கன்னம் விண்விண் என்று வலித்தது.  பருப்பனும் நானும் "ஐயோ அம்மா" என்று அலறிக் கத்தியவாறே எங்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம். "இனி எங்கையாவது சண்டை பிடிக்கிறது கண்டனெண்டால் அந்த இடத்தில கை காலை ஒடிச்சு கரண்ட் கம்பியில தோரணம் கட்டிவிடுவன் " என்று வெருட்டி எங்களை ஓடித்தப்புமாறு சொன்னதும், நாங்கள் குதிகால் குண்டியில்பட கன்னத்தைப் பிடித்தவாறே ஓடி வீட்டுக்குப் போனதும் இப்பத்தான் நடந்தமாதிரி இன்னமும் உணர்வில் உள்ளது.

மூன்று மணிக்கு முந்தியே சைக்கிளை எடுத்துக்கொண்டு குருவியன் வெட்டைக்கு வேகமாகப் பறந்தேன். சொல்லி வைத்த மாதிரி நண்பர்கள் மூவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். வெட்டையின் ஒரத்தில் பனைமர நிழலின் கீழ் வழமையாக இருந்து கதைக்கும் பனங்குத்தியில் குந்தியவாறே  இருட்டடி கொடுக்கும் திட்டத்தை விபரிக்கத் தொடங்கினேன்.  பின்னேரம் விளையாட்டு முடிந்தபின்னர், வீட்டுக்குப் போவது மாதிரிப் போய் இருள் கூடியதும் திரும்பவும் குருவியன் வெட்டையில் சந்திக்கவேண்டும் என்றேன். கல்லுரோட்டில் இருந்து பனங்கூடலுக்குள்ளால் பிரியும் ஒற்றையடிப்பாதை வெட்டைக்கு வர சுமார் நூறு யாருக்கு முன்னால் வில்லு மாதிரி வளையும் இடம்தான் தோதான இடம் என்று அந்த இடத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொன்னேன். அந்த வளைவான பாதைக்கு கிட்டவாக பல பனைமரங்கள் நெருங்கி நிற்பதால், கரிய இருளில் பனைமரத்தோடு இருட்டாக இருட்டாக நின்று தாக்குதலைச் செய்யலாம் என்று சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். கட்டையன் தன்னிடம் இருக்கின்ற மம்பட்டிப் பிடிக் கொட்டனைக் கொண்டுவரவா என்று கேட்டபோது, கொட்டன், பொல்லுகளால் அடித்தால் பெட்டைக் குயிலன் சிலநேரம் பொட்டென்று போனாலும் போய்விடுவான் என்ற பயத்தில் வேண்டாம் என்று சொன்னேன். நாங்கள் நாலு ஆம்பிளையள் அவனைக் கையாலையும் காலாலையும் உழக்கினாலே சவிள் அடி சம்பல் இடியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பெட்டைக் குயிலன் விட்ட சேட்டைக்கு அவனுக்கு நல்ல பூசை கொடுக்கவேண்டும் என்பதால், கட்டையனை பெட்டைக் குயிலனின் கவிட்டைக் குறி தப்பாமல் நாலு எத்து எத்தி அடிபட்ட ட்றக் மாதிரிச் சப்பிளிக்கிறதுதான் முக்கியம் என்று சொன்னேன்.   பெட்டைக் குயிலனுக்கு தான் கொழுப்பு முத்திச் செய்த வேலையாலதான் அடிவிழுகுது என்று தெரிந்தாலும் ஆர் அடிக்கிறது என்று தெரியக்கூடாது. எங்களில ஒருத்தனையும் அவன் மட்டுக்கட்டக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். அதாலை அடிபோடும்போது ஒரு சொல்லுத்தன்னும் கதைக்காமல் நாங்கள் உசாராக இருக்கவேண்டும் என்று சொன்னேன்.

அரை மணித்தியாலமாக பல்வேறு உத்திகளையும் அலசிய பின்னர் திட்டத்தை இவ்வாறாகச் செய்யலாம் என்று நாலுபேரும் உடன்பட்டோம்.  கல்லுரோட்டுப் பக்கத்தால் வரும் பாதை வளைவதற்கு முன்னால் சொக்கியும், புக்கையரும் பாதையின் இருபக்கமும் உள்ள பனை மரங்களின் பின்னால் சத்தம் சலாரில்லாமல் ஒளித்திருக்கவேண்டும். வளைவில் இருந்து வெட்டைப் பக்கமாக வரும் பாதையின் இரு பக்கத்தில் கட்டையனும் நானும் பனைகளுக்கு பின்னால்  பதுங்கியிருக்கவேண்டும். பெட்டைக் குயிலன் வளைவில் வர அவனுக்கு பின் பக்கமாக நிற்கும் புக்கையர் முதலில் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கும்பத்தில் பாய்ந்து அவனை நிலத்தில் தடாலடியாக விழுத்தவேண்டும்.  பெட்டைக் குயிலன் நிலைகுலைந்த கணத்தில் சொக்கி ஓடிவந்து அவனின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து இறுக்கி பூட்டுப்போட்டு, அவனைத் திமிறாமல் பார்க்கவேண்டும்.  நிலத்தில பெட்டைக் குயிலன் விழுந்து கிடக்கிற நேரத்தில கட்டையன் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கவிட்டைக் காலால் பதம் பார்க்கவேண்டும். நான் பெட்டைக் குயிலனின் நெஞ்சிலையும் முகத்திலையும் ஓங்கிக் குத்தி அவனின் சொண்டை உடைத்து, பல்லை நொருக்கி, சொத்தையையும் வீங்கச் செய்யவேண்டும். இதெல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கவேண்டும். அதிரடியான இருட்டடியை முடித்துக்கொண்டு, வேறு ஆட்கள் வரமுன்னர் நாங்கள் நாலுபேரும் பிரிந்து ஓடி முங்கியன் தோட்டத்து தண்ணித்தொட்டியடியில சந்திக்கவேண்டும். சிக்கல்கள், குழறுபடிகள் எதுவும் வராத மிகவும் தெளிவான திட்டத்தை போட்டதில் மனதில் பெருமிதம் குடிகொண்டது.

நேரம் நிறைய இருந்ததால் தாக்குதல் ஒத்திகை பார்க்க முங்கியன் தோட்டத்திற்கு கல்லுரோட்டில் ஏறி, கிழக்குப் பக்கமாகத் திரும்பும் எருக்கலை, பாவட்டை, ஆமணக்குகளால் நிறைந்த பத்தைகளைக் கூறுபோடும் ஒற்றையடிப் பாதையூடாகப் போனோம்.  முங்கியன் தோட்டம் குத்தினால் ஏற்பேத்தும் கறள்பிடித்த முள்ளுக்கம்பிகளாலும், பட்ட இடத்தைக் குத்திக் கிழிக்கும் முள்ளுகளைக் கொண்ட கிளுவைகளாலும், மூரி மட்டைகளால்  அடைக்கப்பட்ட வேலியாலும் திறமாக அறுக்கை செய்யப்பட்ட பெரியதோட்டமாக இருந்தாலும், நாங்கள் களவாகப் போய்ப் புழங்க இடையிடையே பொட்டுக்களை பிரிச்சு வைத்திருந்தோம்.  பிரிச்ச பொட்டு ஒன்றுக்குள்ளால் உள்ளே புகுந்து, தோட்டவேலியோடு  பத்தையாக வளர்ந்திருந்த நாயுருவி, கூப்பிட்டுகுத்தி, காவிளாய்ச் செடிகளை விலத்தி பெரிய வாய்க்கால் பாதையூடாக தண்ணித்தொட்டியடிக்குப் போனோம்.

முங்கியன் தோட்டத்தில் அழுக்கணவன் பூச்சிகள் பிடிச்சு கீழ்ப்பக்கமாக இலை சுருட்டிக் கிடந்த மிளகாய்க் கண்டுகளுக்கு கள்ளுமுட்டித் தலையோடு காவல் செய்யும் வெருளியைக் கண்டதும், அதை பெட்டைக் குயிலனாகப் பாவித்து அடிபோடுகின்ற ஒத்திகையைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது.  வெருளிக்கு முதுகு கிடையாததால் வாய்க்கால் மணலில் நான் நிற்க புக்கையர் எனக்குப் பின்பக்கமாக ஓடிவந்து என்னைக் கீழே விழுத்துவது முதலாவது ஒத்திகையாக இருந்தது. நான் கீழே விழாமல் இருக்க அகட்டிய கால்களை இறுக்கமாக நிலத்தில் ஊண்டியபடி நின்றேன். புக்கையர் வேகமாக ஓடிவந்து ஒரு பண்டிக்குட்டி மாதிரி எனது முதுகில் ஏறியபோது, அவனது பாரம் தாங்கமுடியாமல் முகம் குப்புற வாய்க்கால் மணலில் விழுந்தேன். வாயெல்லாம் வாய்க்கால் மண் போய்விட்டது. ஏதோ பழைய கறளை வைத்து புக்கையர் என்னை வேண்டுமென்றே விழுத்திவிட்டான் என்று சரியான கோபம் வந்தாலும், ஒத்திகை ஒழுங்காக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன்.

அடுத்ததாக கட்டையனை கவிட்டைப் பொத்தி அடிக்க தயாராகச் சொன்னேன். அவனும் அதிவேகமாக எனது இடுப்புப் பிரதேசத்தை நோக்கிக் காலை வளைத்து சுழற்றமுனைந்தான். அவனைச் சரமாரியாக வாய்க்குவந்தபடி தூஷணத்தால் அர்ச்சித்து திட்டியபடி வெருளியின் கவிட்டுக்கு உதைக்கச் சொன்னேன். கட்டையன் வலுவேகமாக ஓடிப்போய் வெருளிக்கு ஒரு உதைவிட்டான். அந்த உதையில் வெருளியின் தலையாக இருந்து கள்ளுமுட்டி நிலத்தில் விழுந்து சிதிலமாக உடைந்து சிதறியது.  விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்லிய பின்னர் கேட்கின்ற கேள்விக்கு விக்கிரமாதித்தன் விடை தெரிந்தும் சொல்லாமல்  மெளனம் சாதித்தால் அவன் தலையும் வெருளியின் முட்டித்தலை மாதிரி சுக்குநூறாக இப்படித்தான் வெடித்திருக்கும் என்று பட்டது.

கைகளை முறுக்கிப் பூட்டுப் போடுவது தனக்கு வடிவாகச் செய்யத் தெரியும் என்றும், தான் வீட்டில் தமையன்மாரை அடிக்கடி பூட்டுப்போட்டு மடக்கிறானென்று சொக்கி சொன்னதால் பூட்டுப்போடும் ஒத்திகை தேவையில்லை என்று விட்டுவிட்டோம்.  நானும் என் பங்குக்கு எனக்கு இடக்கைக் பழக்கம் என்பதால், என்ரை கை ஓங்குவதை எதிராளி பார்க்கமுன்னரே கன்னத்திலும், தோள்மூட்டிலும் உரமான குத்துவிட்டு கொழுக்கட்டை மாதிரி வீங்கச் செய்யமுடியும் என்று சொன்னேன். ஏற்கனவே முன்னர் ஒருக்கால் த்றீ, நோட், ஃபோர் காட்ஸ் விளையாடும்போது அளாப்பியதால் புக்கையருக்குக் குடுத்த குடுவையை ஞாபகப்படுத்த, புக்கையரும் நான் கள்ள இடிகள் நல்லாப் போடுவதில் மன்னன் என்று ஒத்துக்கொண்டான்.

நாலு பேரும் சேர்ந்து பெட்டைக் குயிலனுக்கு கும்முற கும்மலில அவன் பிழியப்பட்ட சக்கையாகத்தான் போகிறான் என்ற திருப்தி எல்லோர் முகத்திலும் இழையோடியது.

ஒத்திகை வேகமாக முடிந்ததால் திரும்பவும் குருவியன் வெட்டைக்குப் போய் உதைபந்து விளையாடிவிட்டு வெய்யில் தாண்டு இருட்டுப்படும் கருக்கல் நேரத்தில் எல்லோரும் கலைந்து வீட்டுக்குப் போனோம்.  அம்மா மேச்சலுக்குப் போட்டு வந்த பசுமாட்டில் பாலைக் கறந்து காய்ச்சி ஈயப்பேணியில் விட்டு ஆத்தியபடி இருந்தா.  உலகத்தில என்னதான் நடந்தாலும், ஆறு மணிக்கு அம்மா பால் காய்ச்சுவதும், அதை நானும் அண்ணன், தம்பியும் குடிப்பதும் நடந்துதான் ஆகவேண்டும். தப்பித் தவறி பிந்திப் போனால் அம்மாவின் ஏச்சுப் பேச்சுக்குத் தப்பமுடியாது. எனவே, நல்ல பிள்ளைமாதிரி மேலைக் காலைக் கழுவி, ஆத்தி மிதமான சூட்டிலிருக்கும் பாலை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, காற்சட்டைக்கு மேல் சாரத்தையும் கட்டிகொண்டு சேர்ட்டும் இல்லாமல் பட்டிக்கு வந்த ஆடு மாதிரி பவ்வியமாக இருந்தேன்.  அம்மா இரவுச்சாப்பாடு செய்வதற்கு தட்டுமூடல், நீத்துப் பெட்டிகளை தேடுவதில் பிராக்காக இருந்தநேரம்,  டக்கென்று சைக்கிளை எடுத்து வேகமாக உருட்டிக் கேற்றைத் தாண்டியதும் பாய்ந்தேறி பெடலை உழக்கிக் கொண்டு குருவியன் வெட்டைக்குப் பறந்தேன். தப்பித் தவறிச் சுணங்கிப் போனால் மற்றவர்கள் திட்டத்தை மாற்றிக் குழப்பக்கூடும் என்பதால் முதலில் நானே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

குருவியன் வெட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இலந்தை மரத்தோடு அண்டிய அன்னமுன்னா, அணிஞ்சில் பத்தைக்குள் சைக்கிளை வெளியே தெரியாமல் மறைத்துவிட்டு மற்றவர்களுக்காக காத்திருந்தேன்.  மூவரும் ஒருவர் பின் ஒருவராக நேரம் சுணங்கமுன்னரே வந்து சேர்ந்தனர். புக்கையரும் சொக்கியும் இருட்டில் தெரியாத நிறத்தில் உடுப்புக்களைப் போட்டுத் தயாராக வந்திருந்தார்கள். ஆனால் கட்டையன் வழமையான வெள்ளைச் சேர்ட்டுடன் வந்திருந்தான். இருட்டில வெள்ளைச் சேர்ட் வெளிச்சமாகத் தெரியும் என்று யோசிக்காமல் மொக்கன் மாதிரி வந்திருக்கின்றான் என்று உள்ளே கோபப்பட்டாலும், கன கச்சிதமாக திட்டம் போடாதது என்ரை கவனக்குறைவு என்பதால் அவனை சேர்ட்டைக் கழற்றச் சொன்னேன். கட்டையன் சேர்ட்டைக் கழற்றி சாரத்துக்குள் வைத்து சாரத்தை மடித்துக்கட்டி மந்திபோல இளித்தான்.  ஏற்கனவே போட்ட திட்டத்தை மீண்டும் ஒருமுறை சுருக்கமாகச் சரிபார்த்துக்கொண்டோம்.  ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் எப்ப செய்யவேண்டும் என்பதில் ஒரு குழப்பமும் இருக்கவில்லை.

 நன்றாக இருட்டுப்பட்டாலும் முன்னிலவுக் காலமாக இருந்ததால் நிலவு வெளிச்சத்தில் குருவியன் வெட்டை  குளித்துக்கொண்டிருந்தது.  நிலவொளியில் வெட்டையில் நிற்பது அதனூடாகப் போய் வருபவர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் நாங்கள் முன்னரே தீர்மானித்த பனங்கூடல் ஒற்றையடிப் பாதையின் வளைவுக்கு வேகமாக ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசாது நடந்தோம்.  எமது குதிகால்கள் நிலத்தில் படும் ஓசையும், நெஞ்சு படபடக்கும் ஓசையும் மட்டுமே கேட்டன.  யாரோ எங்களுக்குப் பின்னால் தொடர்ந்து வருவது போன்ற உணர்வு வர அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டோம்.  ஆனால் அப்படி ஒருவரும் எங்களைத் தொடரவில்லை. அடிபாட்டுக்குப் போகும்போது எல்லாப் புலன்களும் கூர்மையாக ஏற்படும் பதட்டத்தால் வரும் மனப்பிரமை என்று நினைத்தேன். மூச்சை சீராக உள்ளிழுத்து பதட்டத்தைத் தணிக்கமுயன்றேன்.

 பனை மரங்கள் செறிவாக இருந்தமையாலும் பல பனைகள் கள்ளுவடிக்கத் தேர்ந்தவையாக இருந்ததாலும் பனங்கூடலுக்குள் நிலவொளி இருக்கவில்லை. புக்கையரும் சொக்கியும் வளைவைத் தாண்டி பனை மரங்களுக்குப் பின்னால் நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டையன் எனக்கு எதிர்ப்புறமாக ஒரு பனைக்குப் பின்னால் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டான்.  நான் நின்ற பக்கத்தில் பாதை வளைவுக்கு பக்கத்தில் ஒரு பனம்பாத்தி போட்டிருந்தார்கள்.  அதனைச் சுத்தி நிறையக் காவோலைகள் கருக்குமட்டைகளோடு இருந்தன.  கொக்காரை, பன்னாடைகளையும் கூட பனம்பாத்தியின் மேல்பக்கம் அடுக்கிவைத்திருந்தார்கள். கால்களுக்கிடையில் உமல்கொட்டைகள் இடறினாலும் பதுங்கி இருக்க வசதியாக இருந்ததால் பனம்பாத்தியோடு நான் ஒதுங்கினேன்.

 இருண்டுவிட்டதால் பின்னேரக் கள்ளுக்குப் போய்விட்டு ஆடி ஆடிப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு சைக்கிள்களைத் தவிர பனங்கூடல் மயான அமைதியாக இருந்தது.  ஊரடங்கிவிட்டதால் கல்லுரோடும் வெறிச்சோடித்தான் இருந்தது.  நாங்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்ச நேரத்தில் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பெட்டைக் குயிலன் கல்லுரோட்டிலிருந்து பிரியும் ஒற்றையடிப் பாதையில் பனங்கூடலுக்குள் இறங்குவது  நிலவு வெளிச்சத்தில் அவனது நெளிந்த நடையில் தெரிந்தது.  அடுத்த கணமே அவனை அடிச்சுத் துவைக்கவேண்டும் என்ற திகில் நிறைந்த ஆவல் உடலெல்லாம் பெருகி, கைகளும், கால்களும் தினவெடுத்தன.  படபடவென இடிக்கும் இதயத்தோடு அவன் பாதை வளையும் இடத்திற்கு வரும்வரை தயாராகக் காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களாகத் மாறி, இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரித்தன.  இந்த அனுபவம் இதுவரை உணர்ந்திருந்தாத புதிய அனுபவமாக இருந்தது.

 பெட்டைக் குயிலன் பாதை வளையும் இடத்திற்கு  சரியாக வந்தபோது அவிட்டுவிட்ட நாம்பன் போல தடதடவென்று வேகமாக ஓடிவந்த புக்கையர் பெட்டைக்குயிலன் முதுகு மீது முழுப் பலத்தோடு பாய்ந்து விழுந்தான்.  பாதையின் வளைவில் பெட்டைக் குயிலனுக்கு மேல் புக்கையர் புளிச் சாக்குமூட்டை மாதிரிக் கிடந்தது தெரிந்தது.  உடனடியாகவே சொக்கி மற்றப் பக்கத்தாலும், நானும், கட்டையனும் எங்கள் பக்கத்தாலும் அவர்கள் கிடந்த இடத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினோம்.  எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பெட்டைக் குயிலன் ஒருகணம் ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வெலவெலத்துப் போனாலும், அடுத்த கணமே கலவரத்துடன் பெருங்குரலில் குரவெடுத்து " ஐயோ, ஐயோ அடிக்கிறாங்கள், காப்பாத்துங்கோ" என்று  ஒரு குட்டைபிடித்த நாயைப் போல ஊளையிடத் தொடங்கினான்.  அடுத்த நொடியில் சொக்கி விழுந்த கிடந்த பெட்டைக் குயிலனின் திமிறும் கைகளை நிதானித்து மடக்கிப் பிடித்து பின்வளமாகப் பூட்டைப்போட்டுப் அழுத்தமாக இழுத்து நிமிர்த்தினான். பெட்டைக் குயிலனின் குழறலும் கத்தலும் இன்னும் அதிகமாகி ஒரு விசித்திரமான விலங்கொலியாக காதை அறைந்தது. சொக்கியின் அழுங்குப் பிடிக்குள் ஈரச்சாக்குக்குள் அகப்பட்ட எலி மாதிரி வெடவெடுத்து நடுங்கிக் கொண்டும், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கத்திக்கொண்டு நிற்கும் பெட்டைக் குயிலனைச் சுத்தி நான், கட்டையன், புக்கையர் மூவரும் நின்றோம்.

  போட்ட திட்டப்படி நான் பெட்டைக் குயிலனின் மூஞ்சையையும் நெஞ்சாங்கூட்டையையும்  நொருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.  கட்டையன் அவன்ரை கவிட்டைக் கந்தலாக்கியிருக்கவேண்டும்.  ஆனால் குலைப்பன் காய்ச்சல் வந்தவன் மாதிரி உடம்பெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டு, எந்த எதிர்ப்பும் காட்டாமல் கெஞ்சி மண்டாடி அழுதுகொண்டிருந்தவனின் கண்களைப் பார்த்தபோது எனது நிலை தளர்ந்தது. குத்துவதற்கு உரப்பாக ஓங்கின கை அந்தரத்தில் உறைந்துபோய் பின்னர் அறுபட்டு உயிரற்ற சடம்போல் தளர்ந்து கீழே பதிந்தது.  நான் அடிக்காமல் நிற்பதைப் பார்த்த கட்டையனும், புக்கையரும் கூட செய்வதறியாது நின்றார்கள்.  செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, தன்னை விட்டுவிடும்படி இறைஞ்சிக்கொண்டிருக்கும் பெட்டைக் குயிலனைப் பார்த்து எனது மனம் இளகிச் சுருங்கிவிட்டதால் அவனுக்கு அடிக்க மனம் வரவில்லை.  சரிக்குச் சரி என்று யாரியாக சண்டைக்கு நிற்பவனுக்கு அடிக்கலாம். ஆனால் சரணாகதி அடைந்து ஒடுங்கி நிற்பவனுக்கு அடிப்பது எப்படி நீதியாகும் என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

 பெட்டைக் குயிலனை பூட்டுப்போட்டுப் பின்பக்கத்தால் அமத்திப் பிடித்துக்கொண்டிந்த சொக்கி, திட்டமெல்லாம் சறுக்குவதை உணர்ந்து, கதறும் பெட்டைக் குயிலனை இன்னும் இறுக்கி, முழங்காலால் அவனது காலிடுக்குக்குள் மிண்டித் தள்ளியவாறு "பேப் பூனாவளே! பனியங்கள் மாதிரி மிலாந்திக்கொண்டு நிக்காமல் ஆக்கள் வரமுந்தி அடியுங்கோடா.. இப்ப இவனைச் சும்மா விட்டால் நாளைக்கு எங்கள் எல்லாருக்குமெல்லே சேத்து வைச்சுக் கம்பியடிக்கப்போறான்" என்று ஆத்திரத்தோடு உறுமினான்.

 பெட்டைக் குயிலன் எதிர்ப்புக் காட்டாமல் கெஞ்சுவது ஒரு தற்காப்புக்கான தந்திரமாக இருக்கும் என்று மனதைச் சுதாகரித்துத் திடப்படுத்தி, அவன் காலமையில் குழவியனுக்கு செய்ததை நினைவுக்கு கொண்டுவந்து, தளம்பல் எதுவுமில்லாமல்  அவனை அடிப்பதற்கு என்னை மீளவும் தயார்படுத்த முயன்றேன். பெட்டைக் குயிலனின் அந்தப் பரிதாபமான பார்வையைச் சந்திக்கக் கூடாதென்று மனம் குறுகியது. அப்படிப் பார்த்தாலும் அவனது பார்வையை உள்வாங்காது எதிர்கொண்டு வெறித்துப் நோக்க வேண்டும்.  இது ஒரு பெரும் சவாலாகவே பட்டது. ஆரம்பத்தில் ஏராளமாக இருந்த மனோதிடம் சொல்லாமல் கொள்ளாமல் காலை வாரிவிட்டது. அடிக்கவேண்டும் என்ற வெறி துப்பரவாக வடிந்துவிட்டது. பலப் பரீட்டை விஷப் பரீட்சையாக மாறிக்கொண்டிருந்தது. சொக்கி "அடியுங்கோடா.. அடியுங்கோடா" என்று கத்தியபோதும் நான் அடிக்காமல் மீண்டும் பின்வாங்குவதைப் பார்த்த புக்கையரும் ஒன்றும் பேசாமல் நின்றான்.  வினாடிகள் ஓடிக்கொண்டிருந்தன.

 பனங்கூடலுக்கு அண்டிய வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. ஆக்கள் வரப்போகின்றார்கள் என்று புரிந்தது. கட்டையன் என்ன நினைத்தானோ, ஏது நினைத்தானோ தெரியவில்லை. திடீரென்று சாரத்தின் மடிப்பைக் குலைத்து உள்ளேயிருந்த சேர்ட்டை எடுத்து தனது கண்கள் வெளியே தெரியாதவாறு தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டினான்.  தோட்ட வேலை செய்து உரமேறிப்போன கட்டையனது விம்மிப் புடைத்த நெஞ்சிலிருந்து குத்தீட்டிகளாக விசை கொண்ட கைகள்  வேகமாக வெளிக்கிளம்பி, சொக்கியின் பிடியிலிருந்த பெட்டைக் குயிலனை தாறுமாறாகத் தாக்கத் தொடங்கின.  அவனது இரண்டு கைகளும், கால்களும்  சுற்றிச் சுழன்று மிகுந்த நுட்பத்துடனும், லாகவமாகவும் இயங்கின.  ஓலமிட்டுக் கொண்டிருந்த பெட்டைக் குயிலனது உடம்பு கட்டையனது பயங்கரமான அடிகளாலும், உதைகளாலும் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருந்தது.  கட்டையனுக்கேயுரிய கைவந்த வித்துவத்தை நான் கண்களை இமைக்காமலும் வாயைப் பிளந்தவாறும் பார்த்துக்கொண்டு நின்றேன்.

பெட்டைக் குயிலனது அலறல் உச்சத்தைத்  தொடவும், சத்தத்தைக் கேட்டு ஓடி வரும் ஆட்களின் காலடிச் சத்தம் கேட்கத் தொடங்கவும் நாங்கள் நாலு பேரும் பனைகளுக்கிடையே பிரிந்து முங்கியன் தோட்டத்தை நோக்கி ஓடத் தொடங்கினோம். மற்றையவர்களின் முகங்களில் வெற்றி முறுவல்கள் பூத்திருந்தபோதும், அடிபிடிக்கு உதவாத சொத்தையன் என்ற அவமானத்தில் நான் அமிழ்ந்துகொண்டிருந்தேன்.

- முற்றும் -

Saturday, April 01, 2017

சோத்து சுந்தரி....

நானாக யோசிக்கவில்லை...

அம்மாவும் அப்பாவும் ஊட்டி ஊட்டி வளர்த்து எனக்கு இலண்டனுக்கு வருமுன்னரே உடம்பு கொஞ்சம் ஊதித்தான் இருந்திச்சு. இதில அடிக்கடி நொட்டைத்தீன் சாப்பிட்டு வயிறும் வைச்சிருந்தால் சொல்லவே வேணும்! இப்ப கொஞ்ச நாளா காலில நகம் வெட்டலாம் எண்டு குனிஞ்சு நகம்வெட்டியால் வெட்ட வெளிக்கிட்டால் நெஞ்சுக்கும் முழங்காலுக்கும் இடையில ஏதோ பெரிசாக ஒண்டு (பிழையாக யோசிக்காதேயுங்கோ) நிக்குது எண்டு பாத்தால், அது எந்த வஞ்சனையுமில்லாமல் வளந்து முட்டுக்காய் இளநீ மாதிரிக் கிடக்கும் வயிறுதான்.

இவர் இப்ப பிள்ளைபெற வேண்டாம் எண்டு கவனமாக இருந்தும் ஏதாவது பிசகிச் சிலவேளை வயித்தில பூச்சி, புழு ஏதாச்சும் வந்திட்டுதோ எண்ட பயத்தில சோதிச்சுப் பார்த்தால் கடவுளேயெண்டு அப்படி ஒண்டுமில்லை. பிள்ளத்தாச்சியாக இல்லாமல் பெரிய வயித்தோட நிண்டால் தெரிஞ்சவை ஒண்டில் விடுப்புக் கேட்பாளவை இல்லாட்டி பின்னால நிண்டு நெளிப்பாளவை. அதோட இதை இப்படியே விட்டால் என்ரை செருப்பு, சப்பாத்தை நானாகவே போடமுடியாமல் போயிடும் எண்டு பயம் வேற வந்திட்டுது. இப்ப அக்கா எண்டு கூப்பிடுறவையும் நாளைக்கு குண்டக்கா, குண்டம்மா எண்டு சொல்லவெளிக்கிட்டால் ஒண்டும் சொல்லேலாமல் வெருளிச் சிரிப்புடன் பேசாமல் போகவேண்டிவந்துவிடுமே எண்ட கவலையும் தொத்திக்கொண்டது. அதைப்போல வேற மானக்கேடு ஏதும் இருக்கே இந்த உலகத்தில.

உடம்பு பெருத்த கவலையை மறக்க இவர் தமிழ்க்கடையில எனக்கெண்டு ஆசையா வாங்கிக் கொண்டு பிரிட்ஜில் வைச்சிருந்த அல்வாவில் ஒரு துண்டை வெட்டி வாயில் கடித்துக்கொண்டே வீட்டில வாடகைக்குக் குடியிருந்து யூனிவேசியிட்டியில படிக்கும் இவற்றை சொந்தக்காரப் பொடியனட்டை கதைச்சுப் பாப்பம் எண்டு அவனின்ரை அறைப்பக்கம் போனன். பொடியன் பாக்கிறதுக்கு வத்தலும் தொத்தலுமாக காஞ்ச பயித்தங்காய மாதிரி இருப்பான். எப்ப பாத்தாலும் படிப்பு எண்டு காலில சில்லுக் கட்டின மாதிரி ஓடிக்கொண்டிருப்பான், இல்லாட்டி கொம்பியூட்டரை வைத்து "டொக்..டொக்..டொக் எண்டு நடுச்சாமத்தில கூட தட்டிக் கொண்டிருப்பான். சில நேரம் நித்திரை குழம்பிச் சினம் வந்தாலும், பொடியனுக்கு யூனிவேசியிட்டியல கனக்கப் படிக்கக் குடுக்கிறாங்களாக்கும் எண்டு பொறுத்திடுவன். என்னை எப்ப கண்டாலும் ஒண்டில தலையை அண்ணாந்து சீலிங்கைப் பாத்துக் கதைப்பான், இல்லாட்டி தலையைக் கொஞ்சம் குனிஞ்சு கீழ்க்கண்ணால்தான் பாத்துத்தான் கதைப்பான். என்ரை தடிச்ச தோற்றத்தை பாக்கிறதுக்கு விருப்பமில்லையாக்கும் எண்டு மனதில கவலை வந்தாலும், படிக்கிற பொடியன் பெம்பிளையளையோடு பவ்வியமாகப் பழகிறானாக்கும் எண்டு மனதைச் சமாதானப்படுத்திவிடுவன்.

தட்டின கதவைத் திறந்தவனைப் பார்த்தால் ஏதோ முக்கியமான சோதினைக்கு படிச்சுக்கொண்டிருந்தவன் மாதிரி இருந்தது. எண்டாலும் பணிவோடை தலையைக் சாதுவாகக் குனிஞ்சு என்ரை கவலையான முகத்தைப் கீழ்க்கண்ணால பார்த்துக்கொண்டு

"அக்கா, எதுவும் பிரச்சினையே? உதவி எதுவும் வேண்டுமெண்டால் யோசிக்காமல் சொல்லுங்கோ" எண்டான்.

உடம்பு வைச்ச கவலையை இளம் பொடியனிட்ட சொல்ல கொஞ்சம் கூச்சமும் தயக்கமும் வந்ததால் எங்கை, எப்படித் தொடங்கலாம் எண்டு யோசிக்க ஒரு சொல்லும் வாயில இருந்து வரேயில்லை. பொடியன் ஏதும் வித்தியாசமாக நினைச்சாலும் எண்ட பயம் வேறு வந்தவுடன் டக்கெண்டு உடம்பு வைச்சுக்கொண்டு போவதால் வந்த மனக்கவலையைச் சொல்லி, "கெதியாகத் தேகம் மெலிய ஏதாவது மருந்து இருக்கோ எண்டு கேட்க வந்தன்" எண்டன்.

பொடியன் வழமையான விட்டத்தை இல்லாட்டி நிலத்தைப் பாக்கிற பார்வையை விட்டிட்டு ஒருக்கால் மேலும் கீழும் என்னைத் தன் பார்வையால் அளந்தான். கொஞ்சம் உடம்பு கூசிக் காதில் குளிர்ந்தது.. பொடியன் ஆய்வுகூடத்தில இருக்கிற பெருத்த எலியைப் பார்ப்பது மாதிரி பார்வையை மாத்தி

"உடம்பு மெலிய மருந்துகள் இருந்தால் காசு வைச்சிருக்கிற எல்லாரும் கஸ்டப்படாமல் உலக அழகுராணிகள் மாதிரியெல்லே வந்திருப்பினம். இதெல்லாம் ஈஸியான விஷயம் இல்லை. நிறையப் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் வேணும்" என்றான்.

"விடியக் காலமை வெறும் வயித்தில இளஞ்சூட்டுத் தண்ணியில தேனைக் கலந்து குடிச்சால் கொழுப்புக் கரைஞ்சு உடம்பு மெலியும் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன். அது சரிவராதோ?" எண்டு கேட்டன்.

பொடியன் "உதெல்லாம் வாசிக்க நல்லா இருக்கும், ஆனா உடம்பு குறையாது. மெலியவேணுமெண்டால் இரண்டு விசயத்தில கட்டுப்பாடா இருக்கோணும். ஒண்டு, சாப்பாட்டை முக்கியமா சோத்தை நல்லாக் குறைச்சுச் சாப்பிட வேணும். பிறகு நல்லதா ஒரு ஜிம்மில சேந்து ஓடுறது, நீந்திறது மாதிரியான கார்டியோ எக்ஸசைஸ் செய்யவேணும். இது இரண்டையும் ரெகுலராகச் செய்தால் உடம்பு தானாக வத்திவிடும்" என்றான்.

இது இரண்டும் ஈஸியான வழியள் மாதிரி இல்லையே எண்டு கேக்க நினைச்சாலும், அறிவுரை சொல்றாக்களை அதிகம் கேள்விகேட்டால் அவைக்கு பிடிக்காமல் போய்விடலாம் எண்டதால் நன்றி சொல்லி வந்திட்டன்.

சரி முதல்ல சாப்பாட்டைக் குறைப்பதில் தொடங்குவோம் எண்டு இவர் வேலையால வந்தவுடன

"இனி வீட்டில காலைச் சாப்பாடு, ராத்திரிச் சாப்பாடு எல்லாம் சமைக்கேலாது, மத்தியானம் மட்டும்தான் சமையல்" எண்டன்.

அவரோ "மனிசன் கஷ்டப்பட்டு வேலைக்குப் போய்வந்தால் சாப்பாடுகூடச் சமைச்சுத் தராமல் என்ன கிழிக்கப் போகின்றாய்?" எண்டு கொதிச்ச எண்ணைச் சட்டியில விழுந்த கடுகு மாதிரி வெடிக்கத் தொடங்கினார்.

"இப்பவே விடிய எழும்பி மனுசனுக்கு ஒரு தேத்தண்ணி வைச்சுத் தாறதுக்குப் பஞ்சி. சமையலும் இல்லாட்டி நல்ல சோக்கா நித்திரை கொண்டு எழும்பி இஞ்சை இருக்கிற வேலையில்லாத பெண்டுகளோட வம்பளந்து கொண்டல்லே இருப்பாய்" எண்டு இன்னமும் சொல்லிக்கொண்டு போக,

ஏன் நான் மெலியிறதுக்கு உழைக்கிற மனுசனைப் பட்டினி போடவேண்டும் எண்டு அழுகிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு "எனக்கு உடம்பு பலூன் கணக்கா ஊதிப் போட்டுதெண்டு மற்றவை நெளிக்கினம். அதுக்குத்தான் சாப்பாட்டைக் குறைப்பம் எண்டு நினைச்சன்.. சரி. இனிமேல் எனக்கில்லாமல் உங்களுக்கு மட்டும்தான் சமையல்" எண்டன்.

தலையைத் திருப்பி ஒரு மாதிரி புதினமாய்ப் பார்த்த இவர் " எல்லாத் தமிழ்ப் பெட்டையளையும் மாதிரி வடிவாத்தானே இருக்கிறாய். பட்டினி கிடந்து இக்கணம் அல்சர் கில்சர் வந்தாலும்" எண்டார்.

"அதெல்லாம் சரிவராது. நான் முடிவெடுத்திட்டன்.. நீங்கள் எனக்கு ஒரு ஜிம்முக்குப் போறதுக்கும் ஏற்பாடு செய்யவேணும்"

"ஜிம் வேறயோ" எண்டு தொடங்கினவர் என்ரை கவலையான முகத்தைப் பாத்ததும் குழைவான பார்வைக்கு மாறி வேற ஒரு வார்த்தையும் சொல்லாமல் 'ஓம்' என்ற மாதிரி தலையாட்டிவிட்டுப் போனார்.

சாப்பாட்டைக் குறைக்கிறதெண்டால் என்ன லேசுப்பட்ட வேலையே? எதுக்கும் படிச்ச பொடியன் வீட்டில வசதியா வீட்டில இருக்கிறதால திரும்பவும் விளக்கங்கள் கேக்கப் போனன்.

பொடியனும் தலையைக் குனியுறதும் மேல திருப்பிறதுமாய்க் கொஞ்ச நேரம் யோசித்தாப் பிறகு

"காலமையில பால்க்கஞ்சி மாதிரி இருக்கும் porridge மட்டும்தான் சாப்பாடவேணும். கனக்கச் சாப்பிடாமல் கட்டுப்பாடோட இருக்கவேணுமெண்டால் கடைகளில் சரைகளில் விற்கும் பக்கற்றை வாங்குங்கோ" எண்டு சொல்லி பொரிட்ஜ் கஞ்சியை எப்படிச் செய்யலாம் எண்டு விளக்கமும் தந்தான்.

"மத்தியானச் சாப்பாட்டை மாத்தவேணுமெண்டில்ல. ஆனா, இப்ப சாப்பிடுறதில இருந்து நாலில் ஒன்றாக் குறைக்க வேணும்" எண்டு சொல்ல மனதிற்குள் இரண்டு கோப்பைச் சோறு அரைக் கோப்பையா மாறுகிறமாதிரி படம் ஓட முகத்தில வேர்த்தது!

"இரவைக்கு சோறு, புட்டு, இடியப்பம், தோசை மாதிரி மாச்சத்து சாப்பிட்டால் அவை கொழுப்பாக மாறி அங்கங்க தேங்கிவிடும். அதனால இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு துண்டு தவிட்டுப் பாண் மட்டும் சாப்பிடவேணும். அதுகளை விரும்பிற கறியோட சாப்பிடலாம். எண்டாலும் கறியின்ற அளவில கட்டுப்பாடு இல்லாட்டி ஒரு பிரயோசனமுமில்ல" எண்டு நல்ல அறிவுரை தந்தான்.

பொடியன் சாப்பாடு விஷயத்தில் மிகவும் விவரமாக இருக்கின்றான் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இந்த சாப்பாட்டுக் காசை மிச்சம் பிடித்து ஒரு நல்ல சாறி அல்லது நகை வாங்கலாம் என்ற எண்ணமும் ஓடியது. மெலிந்த உடலுடன் நல்ல சாறி, நகை போட்டு, ரீவியல நகைக்கடை விளம்பரத்தில வாறவையள் மாதிரி என்னைக் கற்பனை செய்து பார்க்க முகம் சிவந்துவிட்டது. கீழ்க்கண்ணால என்ர சிவந்த முகத்தைப் பாத்த பொடியனும் நிலைமை அந்தரமாகப் போகப்போகின்றதோ என நினைத்து "படிக்கக் கனக்கக் கிடக்கு" என்று அறைக்குள் திரும்பிவிட்டான்.

சோத்தை சாப்பிடாமல் வெறும் சப்பாத்தியை எப்படித்தான் சாப்பிடுறாங்களோ இந்த ஹிந்திக்காரர் எண்டு யோசிச்சுப் பார்த்தன். சரி வேற வழியில்ல என்பதால் இரவைக்கு சப்பாத்தியை எப்படி செய்யிறது எண்டு விளங்காத எல்லாச் சாப்பாட்டையும் செய்யிற சினேகிதி ஒருத்திக்கு போனடிச்சு விவரத்தைக் குறிச்சு வைச்சன்.

மத்தியானச் சாப்பாட்டை மாத்தவேண்டாமெண்டு பொடியன் சொன்னதால், வழமையான கறிகளைச் சமைத்து சோத்தைக் குக்கரில குறைச்சுப் போட்டன். எப்பவும் இரண்டு கோப்பை சோத்தைப் பரப்பி நாலைஞ்சு கறிகளை அள்ளிவிட்டு ஆற அமந்து சாப்பிட்டிவிட்டு இரண்டு மணிக்கு ஒரு "நாப்" எடுத்துப் பழகின எனக்கு இண்டைக்கு அரைக்கோப்பை சோத்தோட கொஞ்சமாக் கறியளையும் பாக்கேக்க விரதத்துக்கு சனிக்குப் படைச்ச மாதிரித் தெரிஞ்சுது. என்ன செய்யிறது.. மேயிற ஆட்டைச் சாப்பிட்ட அனகொண்டா பாம்பு மாதிரி இருக்கிற வயித்தைப் பாத்தால் இனிச் சனிபகவான் மாதிரி குறைச்சுத்தான் சாப்பிடவேணும் எண்டு அடக்கிக்கொண்டு இரண்டாம் தரம் போட்டுச் சாப்பிடலேல்ல. இப்பிடி இரண்டுநாள் போச்சுது. நாலு மணிக்கு வயிறு புகையிறமாதிரி இருக்கேக்கை பச்சைத்தண்ணியக் குடிச்சு புகைச்சலை அடக்கினன். பிரிட்ஜில இருந்த அல்வா என்னைப் பார்த்துச் சிரிச்ச மாதிரி இருந்திச்சு!

வேலையாக வந்த இவர், ஜிம்மில பதிந்ததாச் சொன்னார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரை ஆக்கினைப்படுத்தி "ஸ்போர்ட்ஸ்" கடைக்குப் போய் ஜிம்முக்கு உடுப்புகள் வாங்கினேன். உடம்பு குறையும் எண்டு நம்பிக்கை வந்ததால என்ரை சைசில் இருந்து இரண்டு குறைச்சுத்தான் வாங்கினன். இல்லையெண்டால் மெலிஞ்சாப் பிறகு தொளதொளவெண்டு உடுப்பைப் போட அது இறங்கி மானம் போடுமெல்லே..

அஞ்சாறு மணிக்கு போனால் இஞ்சை இருக்கிற தமிழ்ப்பொடியள் ஆரும் கண்டாலும் எண்டபடியால் ஜிம்முக்கு நாலு மணியளவில அடுத்தநாள் போனன். போய்ப் புதுசா வாங்கின உடுப்பைக் கஸ்டப்பட்டு ஒருமாதிரிப் போட்டுமுடிக்க உடம்மை இறுக்கின இறுக்கில ஜிம்மில ஓடாமலேயே உடம்பு வத்திவிடும் மாதிரி இருந்தது. கண்ணாடியில பாத்தால் எக்ஸசைஸ் செய்யாமலேயே வீட்டுக்கு போகவேண்டி வந்திடும் என்பதால் மனதைத் தைரியப்படுத்தி எக்ஸசைஸ் ரூமுக்குள்ள போனன். போய்ப்பாத்த அடுத்த நிமிசமே தலை லேசாச் சுத்திச்சுது. திரும்பின எல்லாப் பக்கத்திலயும் ஒரே எக்ஸசைஸ் மெசினா இருக்குது. எனக்கு வீட்டில இருக்கிற எக்ஸசைஸ் சைக்கிளை விட்டால் ஒண்டையும் தெரியாது.

சரி,, முதல்ல எக்ஸசைஸ் சைக்கிளில் ஓடுவம் எண்டு அதில ஏறிப் பத்து நிமிஷம் சில்லுகளை உருட்டினன். வேகமாக ஓடினால் மூச்சிரைக்கும் என்பதால் மெதுவாகவே சைக்கிள் ஓடினேன். பக்கத்தில இருந்த “டிரெட் மில்” இல ஒருத்தன் நாய் கலைச்சா ஓடுறது மாதிரி ஓடுறதைப் பார்த்தால் தெம்பும் தைரியமும் கூடவே பயமும் வந்தது. சரி, அவனை மாதிரி ஓடாவிட்டாலும், நானும் ஏறி ஓடிப் பாத்திட்டுத்தான் வீட்டை போறது எண்டு ஏறி ஓட வெளிக்கிட்டேன். அவசரத்தில வேகத்தைச் சரியாப் பாக்காம ஓட வெளிக்கிட்டதால் கால் சிக்குப்பட்டு விழப்போறன் எண்டு பயந்துகொண்டே ஓடிக்கொண்டிருந்தன். இரண்டு நிமிஷத்தில் எனக்கே தெரியாமல் மூச்சு இரைக்கத் தொடங்க, வாயால சத்தம் வேற வரத்தொடங்கீட்டுது. அங்கால நிண்டவன் என்ரை முனகலை ரசிக்கிறமாதிரி இருக்கு. எனக்கு ஆராவது வந்து இந்த இழவு மெசினை நிப்பாட்ட உதவினால்க் காணும் எண்ட நிலை. எண்டாலும் தொடர்ந்து இன்னும் இரண்டொரு நிமிஷங்கள் ஓடிக்கொண்டிருந்தேன். கண்கள் கிறுகிறுக்க ஏதோ சிவப்பாய்த் தெரிய அதைக் கையால் அமத்திப் பிடிக்க மெசின் டப்பெண்டு நிண்டிடுத்து. நான் மயங்கி விழாத குறை. எதுவும் நடக்காத மாதிரி மூச்சை இறுக்கிப் பிடித்து, மெதுவாக நடந்து கொண்டு வந்த தண்ணியை மடக் மடக் எண்டு குடித்து முடித்தேன். கனக்கத் தண்ணி குடித்ததால் வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருமாப் போல இருந்திச்சு. 'இண்டைக்கு இவ்வளவு எக்ஸசைஸும் காணும்' என்று மனதிற்குள் சொல்லியவாறே வீட்டுக்கு வெளிக்கிட்டன்.

வீட்டை வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்துவிட்டு இரவுச் சாப்பாட்டு அலுவலைப் பார்ப்பம் எண்டு படுத்தால் கண்ணுறங்கினதே தெரியாமல் நித்திரை வந்துவிட்டது. எழும்பிப் பார்த்தால் மணி நடுச்சாமம் 12:30 எண்டு காட்டுது. இவர் கட்டிலில நித்திரை. அட மனுசன் இரவுச் சாப்பாடும் இல்லாமல் பட்டினியாப் படுக்கிறாரே எண்டு கவலை வந்தது. கிச்சினுக்குப் போவம் எண்ட கட்டிலால இறங்கினால் காலைத் தூக்கி அங்கால இங்கால வைக்க ஏலாமக் கிடக்கு, ஆரோ இரும்பு கம்பியால காலில அடிச்ச மாதிரி சுள்சுள்ளெண்டு குத்திக் குத்தி வலிச்சுது. ஒருமாதிரி பல்லைக் கடிச்சுக் கொண்டு ஆடி அசைந்து கிச்சினுக்குள்ள போய் தண்ணியைக் குடிச்சன். திரும்பி பிரிட்ஜைத் திறந்தால் பாதி சாப்பிட்ட மட்டன் பிரியாணிப் பார்சல் உள்ளே இருந்தது. மனுசன் வேலையால வந்து என்னை எழுப்பாமல் வெளியால போய்ச் சாப்பாடு எடுத்திருக்கிறார் எண்டு தெரிஞ்சது. வேலைக் களைப்பில வந்த மனுசனைக் கவனிக்காதது என்ரை பிழைதானே எண்டு மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு படுக்கப் போகலாம் என்று திரும்பினால், வயிறு புகையிறமாதிரி இருந்திச்சு.

இண்டைக்கு ஜிம்மில ஓடின ஓட்டத்துக்கு இந்த பாதிப் பிரியாணி ஒண்டும் உடம்பைக்கூட்டாது எண்டு மூளை சொன்னதும் ஒரு செக்கனும் யோசிக்காமால் உடனேயே பிரியாணியை சூடுகூடக் காட்டாமல் சாப்பிடத் தொடங்கிவிட்டேன். சாப்பிடும்போதே, பொடியன் சொன்ன மாதிரி நாளையிலிருந்து சாப்பாட்டில கட்டுப்பாடா இருக்கவேணும். ஜிம்முக்கு போகவேணும் எண்டு சபதம் எடுத்துக்கொண்டன். சாப்பிட்டுவிட்டு மீண்டும் தண்ணியைக் குடிச்சாப் பிறகு வயித்தை தொட்டு பாத்தால் வயித்துக்குள்ள சோத்தோட ஆட்டுக்குட்டி இருக்கிற மாதிரி ஒரு பிரமை ..அப்படியே குமுறிக் குமுறி அழுகையா வந்திச்சுது.

அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும்

Incidents in the Life of a Slave Girl - நாவல்

Django Unchained - திரைப்படம்எனக்கு Quentin Tarantino இன் படங்களைப் பார்ப்பது மிகவும் அலாதியான விடயம். அவரது Pulp Fiction படத்தை தியேட்டரிலும், VHS tape இல், DVD இல், இறுதியாக BlueRay இல் கூட வாங்கி பதினைந்து தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன் என்றால் எனது பித்து எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்!

எனவே போன வருடம் Quentin Tarantino இன் Django Unchained படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எப்படியும் அதனைப் பார்த்தேவிடுவது என்று தீர்மானித்துவிட்டிருந்தேன். படத்தின் கதை வேறு கறுப்பின அடிமையைக் கதாநாயகனாகக் காட்டும் வித்தியாசமான cowboys கள் வரும் வெஸ்டர்ன் படம் என்பதால் கூடுதல் ஆர்வம் தொற்றியிருந்தது.

அமெரிக்காவின் கறுப்பின அடிமைகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல் படத்தை இரசிக்க முடியாது என்று புரிந்ததால், கறுப்பின அடிமைகளைப் பற்றிய நாவல் ஒன்றைப் படிக்கலாம் என்று Kindle இல் தேடியபோது அடிமையாக இருந்த பெண்ணால் எழுதப்பட்ட "அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்" (Incidents in the Life of a Slave Girl) எனும் நாவல் அதிகம் பிரபல்யமாக இருந்தது. எனவே படம் வருவதற்கு முன்னர் படித்திடவேண்டும் என்று நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

இற்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் தென்பகுதியில் அடிமையாக்கப்பட்டு இருந்த பெண் Linda Brent எனும் புனைபெயரில் அவரது வாழ்வில் நடந்த விடயங்களை வைத்து ஒரு சுயசரிதம் போன்று நாவலை உருவாக்கியிருந்தார். இது 1850-60 களில் பத்திரிகை ஒன்றில் தொடராக வந்து பின்னர் நாவலாக பதிப்பிக்கப்பட்டிருந்தது.

ஓரளவு வசதிபடைத்த அடிமையாக இருந்தவர்களின் குடும்பத்தில் பிறந்த லிண்டா ஆறு வயதில் தாயார் மரணிக்கும்வரை அடிமை என்ற துன்புறுத்தல்கள் எதுவுமின்றி சகோதரர்களுடன் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தார். ஒரு அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அவ்வடிமையின் எஜமானியின் சொத்து எனும் சட்டத்திற்கு ஏற்ப, தாயாரின் மரணத்திற்குப் பின்னர் லிண்டா வெள்ளை எஜமானி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அந்த வெள்ளை எஜமானி ஓரளவு நல்லவராக இருந்தபடியால் லிண்டாவிற்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார். துரதிஸ்டவசமாக எஜமானி சிறிது காலத்தின் பின்னர் இறந்தபோது லிண்டாவை இன்னொரு உறவினருக்கு எழுதிக் கொடுத்திருந்தார். அதாவது அடிமைகளாக இருந்தவர்கள் மனிதர்களாக நடாத்தப்படாமல் வெறும் சொத்துக்களாகவே 150 வருடங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டிருதனர்.

புதிய எஜமானர்களான வைத்தியரும் அவரது மனைவியும் சிறுமியாக இருந்த லிண்டாவை மிகவும் மோசமாக துன்புறுத்தியதும், லிண்டா பருவம் எய்திய பின்னர், எஜமான வைத்தியர் அச்சிறுமியுடன் பாலியல் உறவுக்கு முயற்சிப்பதும், அதிலிருந்து தப்பிக்க லிண்டா போராடுவதும் கதையில் விலாவாரியாகச் சொல்லப்பட்டுள்ளது. எஜமானரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பிக்க லிண்டா இன்னுமொரு கல்யாணம் ஆகாத வெள்ளையின இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தி அவன் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகின்றாள். இதனால் கோபமுற்ற வைத்தியர் லிண்டாவை பருத்தித் தோட்டப் புறத்திற்கு அனுப்புகின்றார். தனது குழந்தைகள் நல்ல முறையில் நடாத்தப்படவில்லை என்பதனால், ஒருநாள் லிண்டா தலைமறைவாகின்றார். ஆயினும் அமெரிக்காவின் வடபகுதிக்கு தப்பிச் செல்லமுடியாமல் அவரது பேத்தியாரின் வீட்டின் ஒரு குழியில் 7 வருடங்கள் பிடிபடாமல் மறைந்து வாழ்கின்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட துன்பங்களும், அவர் மறைந்ததால், குழந்தைகளை சிறையில் போட்டு வாட்டுவதும், பிற கறுப்பின அடிமைகள் மீது கசையடி, கொடூர நாய்களை ஏவிவிடுதல் போன்ற மோசமான நடவடிக்கைகளும் கதையில் சொல்லப்பட்டுள்ளன.

7 வருட தலைமறைவு வாழ்வு நிரந்தரமானால் குழந்தைகளும் அடிமையாகிவிடுவார்கள் என்பதால், free states என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் வட பகுதிக்கு தப்பி வருகின்றார். எனினும் நியூ யோர்க் போன்ற சுதந்திர மாநிலங்களிலும் கறுப்பினத்தவர் மேல் பேதம் காட்டப்படுவதும், தப்பி ஓடிய அடிமைகளைத் திரும்ப பிடித்து ஒப்படைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் சுதந்திர மாநிலங்களிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டதும், ஒருவாறு குழந்தைகளை சுதந்திர மாநிலங்களுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு கல்வி வழங்கப் பட்ட கஷ்டங்களும், நல்லிதயம் படைத்த ஆங்கில சீமாட்டி ஒருவரின் உதவியோடு இறுதியில் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதுமாகக் கதை முடிகின்றது. இறுதிவரை தனது சுதந்திரத்தைப் பணம் கொடுத்து வாங்க மறுத்த லிண்டா, தப்பியோடிய அடிமைகளைப் பிடித்து ஒப்படைக்கும் சட்டம் (the Fugitive Slave Act) காரணமாக வேறு வழியின்றி ஆங்கிலச் சீமாட்டியால் 300 டொலர்களுக்கு வாங்கப்பட்டு அவர் மூலம் தனதும் பிள்ளைகளினதும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.

கறுப்பின அடிமை ஆண்கள் எதுவித கூலியுமின்றி பருத்தித் தோட்டங்களில் வேலை வாங்கப்படுவதும், மோசமாக தாக்கப்படுவதும், அடிமைப் பெண்கள் வெள்ளை எஜமானர்களின் பாலியல் இச்சைகளுக்கு தொடர்ந்து பலியாவதும், விருப்பமற்ற உடலுறவால் உருவாகும் குழந்தைகள் வெள்ளை நிறத் தோலோடு இருந்தாலும் நீக்ரோ என்று அடிமையாக விற்கப்படுவதும் அமெரிக்காவின் இருண்ட வரலாற்றுப் பக்கங்களைக் காட்டியது.

0000


இந்த நாவல் படித்து முடியும் தறுவாயில் Django Unchained திரைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. எனவே போன ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள சினிமாவில் படம் பார்க்கப் போயிருந்தேன். ஆச்சரியமற்ற வகையில் திரையரங்கு அதிகம் கறுப்பினத்தவர்களால் நிரம்பியிருந்தது. அடக்குமுறைக்கு உள்ளான இனத்தில் இருப்பதால் எப்போதும் கறுப்பினத்தவர்களோடு என்னை அடையாளம் காட்டுவதும் அவர்களுடன் நட்புப் பாராட்டுவதும் வழமை. அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு படித்திருந்ததால் இன்னும் கூடுதல் நட்புப் பாராட்ட வேண்டி அருகில் இருந்த பெண்கள் மீது சிநேகிதமான புன்னகையை உதிர்த்தவாறே படத்தைப் பார்க்க உட்கார்ந்தேன்.

Quentin Tarantin இன் படங்கள் அதிகம் வன்முறை நிறைந்தது. எனினும் இரத்தம் பீய்ச்சி அடிப்பது யதார்த்தத்தை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்படுவதால் நகைச்சுவை போன்றும் தோற்றமளிக்கும். Django Unchained திரைப்படம் கறுப்பின அடிமைகள் மீதான மோசமான ஒடுக்குமுறைகளைக் காட்டினாலும், கதையில் யதார்த்தத்திற்குப் புறம்பாக ஒரு கறுப்பினத்தவர், அதிலும் தப்பியோடிய அடிமை, சன்மான வேட்டைக்காரனாக (bounty hunter) ஆக காட்டப்பட்டுள்ளார்.

Jamie Foxx அடிமை ஜாங்கோவாக நடித்திருக்கின்றார். அமெரிக்காவில் தென்பகுதியிலுள்ள Texas பகுதியினூடாக கடுங்குளிர் நேரத்தில் அவரும் வேறு சில அடிமைகளும் கால் விலங்குகள் இட்டு அழைத்துச் செல்லப்படுகையில் முன்னாள் பல்வைத்தியராக இருந்து ஜேர்மன் சன்மான வேட்டைக்காரர் ஒருவரால் சிலரை அடையாளம் காட்டும் தேவைக்காக சங்கிலிப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். இந்த விடுவிப்பும் மிக வன்முறையான கொலைகளால் நிரம்பிய காட்சிதான்.

மிகவும் துல்லியமாக ஆங்கிலத்தில் உரையாடும் ஜேர்மானிய சன்மான வேட்டைக்காரன் ஜாங்கோவை விடுதலை செய்யும்போது அவர் எங்கு செல்லப் போகின்றார் என்று கேட்க, ஜாங்கோ தனது மனைவியைத் தேடப் போவதாகச் சொல்லுகின்றார். ஜாங்கோவின் மனைவியின் பெயர் ஜேர்மானியப் பெயராக இருந்ததாலும், ஜாங்கோவின் துப்பாக்கி சுடும் திறமையாலும் ஈர்க்கப்பட்ட ஜேர்மானிய சன்மான வேட்டைக்காரர் ஜாங்கோவிற்கு அவரின் மனைவியைக் கண்டுபிடிக்க உதவ ஒரு ஒப்பந்தத்திற்கு வருகின்றார். அதன்படி இருவரும் குளிர்காலத்தில் தேடப்படும் குற்றவாளிகளை வேட்டையாடிப் பணம் சம்பாதிப்பதென்றும், குளிர் முடிந்து கோடை தொடங்கிய பின்னர் ஜாங்கோவின் மனைவையைத் தேடுவதென்றும் முடிவாகின்றது. உறைபனிகளினூடே குதிரைகளில் சவாரி செய்து பல தேடப்படும் குற்றவாளிகளைக் கொன்று நிறையப் பணம் சம்பாதிக்கின்றார்கள். குருதி கொப்பளிக்கும் கொலைகள் நகைச்சுவை இழையோடு படமாக்கப்பட்டிருப்பதால் இரசிக்கக் கூடியதாக இருந்தது.

ஜாங்கோவின் மனைவி அடிமைகள் நிறைந்த மிசிசிப்பிப் பகுதியில் உள்ள பண்ணையொன்றில் இருப்பதாகத் தெரியவர இருவரும் அப்பெரிய பண்ணை நோக்கிப் பயணிக்கின்றார்கள். அப்பண்ணையின் நிறவெறி பிடித்த முதலாளியாக Leonardo DiCaprio திறம்பட நடித்திருக்கின்றார். அவரது வீட்டு அலுவல்களை மேற்பார்வை செய்யும் கைத்தடியூன்றி நடக்கும் முதிர்ந்த கறுப்பினத்தவராக Samuel L Jackson வருகின்றார். ஜேர்மன் வேட்டைக்காரரும் ஜாங்கோவும் பண்ணை முதலாளியின் சிறந்த சண்டைவீரர்களை விலைகொடுத்து வாங்குவது போல நடித்து, ஜாங்கோவின் மனைவியை மீட்டுச் செல்லப் போட்ட திட்டம் கறுப்பின வீட்டு மேற்பார்வையாளரால் கண்டுபிடிக்கப்பட 12000 டொலர்கள் கொடுத்து ஜாங்கோவின் மனைவியை வாங்குகின்றனர். விடைபெறும் தறுவாயில் பண்ணை முதலாளியான Leonardo DiCaprio கைலாகு கொடுக்குமாறு கேட்க அதை மறுக்கும் ஜேர்மானிய வேட்டைக்காரர் அவரைச் சுட்டுக் கொன்று விடுகின்றார். உடனடியாக DiCaprio இன் உதவியாளர் ஜேர்மானியரைச் சுட்டுக்கொலை செய்கின்றார். இந்தக் களேபரத்தில் ஜாங்கோவும் துப்பாக்கையைப் பறித்து சுட ஆரம்பிக்க பல கொலைகள் விழுகின்றன.

ஜாங்கோவின் மனைவியை பண்ணைக்காரர்கள் பிடித்துக் கொண்டதால், ஜாங்கோ சரணடையவேண்டி வருகின்றது. சரணடைந்த ஜாங்கோவை Samuel L Jackson அடிமை வியாபாரிகளுக்கு விற்றுவிடுகின்றார். அடிமை வியாபாரிகளுக்கு தன்னை சன்மான வேட்டைக்காரன் என்று நம்ம வைத்து அவர்களிடன் இருந்து விடுதலை பெற்று, விடுதலை பெறும்போது அவர்களை எல்லாம் சுட்டுவிழுத்தி தனது மனைவியை மீட்க ஜாங்கோ மீண்டும் பண்ணைக்குப் போகின்றார். பண்ணை முதலாளி DiCaprio இன் மரணச்சடங்கில் கலந்துவிட்டு வீடு திரும்பும் வீட்டு மேற்பார்வையாளன் Samuel L Jackson, கறுப்பின பணிப்பெண்கள் இருவர் தவிர்ந்த அனைவரையும் ஜாங்கோ கொல்கின்றார். Samuel L Jackson தனது உயிருக்கு மன்றாடும்போது அவர் முழங்கால்களில் சுட்டு வீட்டை குண்டு வைத்துத் தகர்க்கும்போது ஜாங்கோவின் மனைவி கைதட்டி மகிழ்ச்சியைக் காட்டுகின்றார். அப்போது திரையரங்கிலும் சில கைதட்டல்கள் கேட்டன!

அடிமைத்தனம் நிறைந்த இருண்ட கால கட்டத்தின் அவலங்களைத் தொட்டுக் காட்டும் பல காட்சிகள் நிறைந்ததும், நிறவெறி கொண்ட வெள்ளையினத்தவரின் குரூரத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியதும் மெச்சத்தக்கதே. வழமைபோன்று Quentin Tarantino இன் உரையாடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணிப் பாடல்கள், காட்சியமைப்புக்கள் பிரமிக்கத்தக்கவாறே இந்தப்படத்திலும் வந்துள்ளன. கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவன் cowboy ஆவது நம்பமுடியாது என்றாலும் அதனை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப் பொழுதுபோக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது.

பட்டம் விடுதல்

முதன்முதலாக எப்போது பட்டம் விட்டதென்று இப்போது ஞாபகத்தில் துப்பரவாக இல்லை. நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே நான் பட்டம் ஏற்றியதுதான் இதற்கான காரணம்! அனேகமாக எல்லாக் குழந்தைகளும் முதலில் ஏற்றிய பட்டம் வாலாக்கொடியாகத்தான் இருக்கும். எங்கள் ஊரில் இதனை நாங்கள் வெளவால் என்று அழைப்போம். இது இடுகுறிப் பெயரா அல்லது காரணப்பெயரா என்று தெரியாது. அதன் தோற்றத்தில் இருந்தே வந்திருக்கலாம் என்று கருதுகின்றேன். ஆனால் வெளவால் பட்டம் என்றால் ஒரு சில மைல்களில் இருப்பவர்களுக்கு என்னவென்று தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. 

எமது பட்டம் ஏற்றும் காலம் மாரியில்தான் ஆரம்பிக்கும். புரட்டாதி ஐப்பசியில் நல்ல மழையைத் தரும் வாடைக்காற்றுக் காலத்தில்தான் எங்கள் பட்டங்கள் பறந்தன. கார்த்திகை, மார்கழியைக் கடந்து தைப்பொங்கல் அன்று உச்சத்தை அடையும். தைப்பொங்கல் அன்று வானம் முழுவதும் பட்டங்களால் நிரப்பப்பட்டிருக்கும் காட்சி இப்போதும் கண்முன்னால் நிற்கின்றது. அதன் பின்னரும் சிலர் தைப்பூசம் வரையும் பட்டம் விடுவதைத் தொடர்வது உண்டு. தைப்பூசம் உத்தியோகப்பற்றற்ற "கொடியிறக்கல்" ஆக இருந்திருக்கலாம்.

நானும் எனது முதலாவது பட்டத்தை வெளவாலில்தான் தொடங்கியிருப்பேன் என்று நினைக்கின்றேன். இது மிகவும் சுலபமாகச் செய்யக்கூடியது. தேவையானவை 1/4 பட்டத்தாள் (ஒரு முழுப்பட்டத்தாளில் நாலு பட்டங்களும், கீலங்களும், கூஞ்சங்களும் செய்யலாம்!), இரண்டு தென்னோலை ஈர்க்குகள் (ஒன்று தடிப்பாகவும் ஒன்று இலகுவில் வளையக்கூடியதாகவும் இருக்கவேண்டும்), ஒட்டுவதற்குக் கூப்பன்மாவில் கிண்டிய பசை! சிலுவைக் குறி வடிவில் ஈர்க்குகளைக் கட்டி நெடுக்குப் பாட்டிலும் குறுக்குப் பாட்டிலும் கீலங்களை ஒட்டவேண்டும். குறுக்கு ஈர்க்கை முறிக்காமல் இருபக்கமும் சீராக வளைத்தால் பட்டம் சரிக்காது. அது ஒன்றுக்குத்தான் நிபுணத்துவம் தேவை. கூஞ்சங்களை இரண்டு பக்கமும் ஒட்டி பசையைக் காயவிட்டால் போதும். பின்னர் பழைய சீலையைக் கிழித்து வாலைக் கட்டி, தையல் நூலால் முச்சையைக் கட்டினால் பட்டம் தயார். தையல் நூல்தான் பட்டம் ஏற்றவும் பாவிப்போம். மெல்லிய காற்றிலும் வெளவாலை முற்றத்தில் கூட ஏற்றிவிடலாம்.

பெரியம்மா வீட்டோடு இருக்கும் ஒழுங்கையில்தான் பட்டம் ஏற்றிப் பழகிய ஞாபகம். ஒழுங்கையின் இடப்பக்கமாக வீடுகளும் வலப்பக்கமாக பெரிய தோட்டமும் இருந்தன. காற்று இடையிடையே பலமாக வீசும்போது பட்டம் ஏற்ற வசதியான இடம். ஆனால் இடப்பக்கம் தந்திக் கம்பிகளும் வலப்பக்கம் மின்சாரக் கம்பிகளும் போனதால் அவற்றுக்குள் பட்டத்தைச் சிக்குப்பட வைக்காமல் ஏற்றுவதில்தான் கெட்டித்தனம் தெரியும். மின்சாரக் கம்பிகளில் சிக்குப்பட்டு அதை மொக்குத்தனமாக எடுக்கவெளிக்கிட்டு முறித்த பட்டங்கள் அதிகம்!

சில நேரங்களில் ஒன்றுவிட்ட பெரியண்ணன் படலம் கொண்டுவருவான். அவனுக்கு பட்டம் பிடிக்கும் வேலையும் பார்க்கவேண்டும். பட்டம் பிடித்துவிடுவதும் இலகுவான வேலையாய் இருந்ததில்லை. நேராக செங்குத்தாகப் பிடிக்கவேண்டும். வாலில் புல்லுகள் சிக்குப்படாமல் நேராக விடவேண்டும். சாதுவாகக் கொஞ்சம் சரித்துப் பிடித்தாலும் பட்டம் ஒருபக்கம் சரித்துக் கொண்டுபோய் கம்பிகளுக்குள் செருகிவிடும் அல்லது வேலிகளில் இடித்துவிடும். பலமுறை ஏச்சுப் பேச்சு எல்லாம் பெரியண்ணனிடம் வாங்கி ஒருவாறு பட்டம் பிடித்துவிடுவதில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் எட்டு கற்றுத் தேர்ந்துவிட்டேன்.

இன்னொரு ஒன்றுவிட்ட அண்ணன் தாசனுக்கு ஒழுங்கையில் பட்டம் விடப்பிடிக்காது. அவனுக்குப் பெரிய வெட்டையான இடம் வேண்டும். அதோடு அவனுக்குப் படலம் மாதிரி எல்லோரும் ஏற்றும் பட்டங்களிலும் பார்க்க பெட்டிப்பட்டம், பிராந்து, கொக்கு மாதிரி வித்தியாசமான பட்டங்கள் ஏற்றுவதில்தான் விருப்பம். அவனுக்கு பெட்டிப்பட்டம் பிடித்துவிட வைரவர் வெட்டைக்குப் போவோம். தாசன் எப்பவும் பட்டத்தைக் கிழக்கால சரித்துப் பிடித்துவிடத்தான் சொல்லுவான். அது வெட்டைக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போய்விழும். அந்த வீட்டினுள் பட்டத்தை விழுத்தவேண்டும் என்பதுதான் தாசனின் குறிக்கோள். அந்தச் சின்ன வயதில் அதன் காரணம் உடனடியாகப் புரியவில்லை. அந்த வீட்டில் உள்ள பெட்டையை தாசன் "பாத்து"க்கொண்டு திரிந்தது பிறகுதான் புரிந்தது.

என்னைவிட 3-4 வயது பெரியவன் செட்டி. அவன்தான் எனக்குத் தெரிந்து பட்டம் ஒட்டிவிற்கும் "தொழிலை" சின்னவயதிலேயே ஆரம்பித்தவன். பள்ளிகூடம், ரியூட்டரி என்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும் பட்டம் ஏற்றும் காலங்களில் இது வருமானம் தரும் ஒரு தொழில்! வெளவால் பட்டமும், தென்னீர்க்கில் கட்டிய ஒருமுழப் பிராந்துப் பட்டமும்தான் அவனுடைய உற்பத்தி. அதிலும் ஒருமுழப் பிராந்துப்பட்டம் விற்பதில்தான் அவன் பிரசித்தி பெற்றிருந்தான். தொழில் மிகவும் சுத்தம். எல்லாப் பிராந்துப் பட்டங்களையும் வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறுவெட்டையில் ஏற்றிக் காட்டித்தான் விற்பான். எல்லாமே முதல் தடவையில் ஒழுங்காக ஏறாது. சிலதுக்குத் தலைப்பாரம் குத்தத் தொடங்கும். அவைக்கு "பெல்லி" கட்டவேண்டும். அலம்பல் குச்சிகளை வைத்துக் கட்டி சமப்படுத்துவதுதான் இலகுவானது. சிலது இடது அல்லது வலப் பக்கமாகச் சரித்துக்கொண்டு போய்விழும். அவற்றின் மொச்சையைத் திருத்தவேண்டும். பட்டம் ஒழுங்காக ஏறிய பின்னர் அதை வாங்கிக்கொண்டு போனவர் எதுவும் பிழையென்று வந்தால் இலவசமாகவும் திருத்திக்கொடுப்பான். விடியக் காலமையில் அவன் வீட்டுக்குப் போய் இருந்து பட்டம் கட்டுவதையும், ஒட்டுவதையும் பார்ப்பதுதான் என்னுடைய வேலை.

தொடர்ந்து பார்த்துப் பார்த்து பழகியதாலும் சில தொட்டாட்டு வேலைகளையும் செய்ததாலும் எனக்கும் பிராந்து கட்டவும், செட்டை, குண்டி வளைக்கவும், ஒட்டவும் பழகிவிட்டது. என்னைப் போலவே எனது நெருங்கிய நண்பன் நொக்கியும் பழகிவிட்டான்.அப்போது நொக்கியும் நானும் பாலர் பாடசாலையில் இருந்தாலும் பட்டம் கட்டி விற்றுக் காசு உழைக்கலாம் என்று முடிவு செய்தோம். செட்டியின் தொழில்தர்மங்களை எமது வியாபார மொடலாகவும், ஆனால் அவனுக்குப் போட்டியாக இல்லாமல் கொஞ்சம் மாறுதலாகவும் செய்யலாம் என்று தொடங்கினோம். ஒன்றரை முழப் பிராந்தை மூங்கிலில்தான் கட்டவேண்டும்; ஈர்க்கில் கட்டினால் சவண்டு வளைந்துவிடும். எனவே பிராந்தை இரட்டைப்பட்டு ஈர்க்குகள் கொண்டு ஒன்றேகால் முழமாகக் கட்டுவது என்றும் , ஊருக்கு வடக்குப் பக்கமாக இருக்கும் பொடியள் பட்டங் கட்டுவதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்ததால் அங்கு கொண்டுபோய் சந்தைப்படுத்துவது என்றும் தீர்மானித்தோம். என்னிடம் பணம் புழங்குவது குறைவு என்பதால் பட்டத்தாளை நொக்கியே வாங்குவான். மற்றைய மூலப்பொருட்களான ஈர்க்கு, பசை, தையல் நூல் எல்லாம் வீட்டிலேயே எடுக்கலாம். வண்டடித்த கூப்பன் மாவை இலவசமாகக் கடைகளில் இருந்தே பெற்றுக்கொண்டோம். பட்டத்தாள் நொக்கி வாங்குவதால் செலவு போக வரும் இலாபத்தில் பெரும்பகுதி (60% என்று நினைக்கின்றேன்) அவனுக்குப் போகும். வடக்குப் பக்கமாக வசித்த நண்பர்களுக்கு பிராந்துப் பட்டத்தையும், விடுப்புப் பார்க்கவரும் குழந்தைகளுக்கு வெளவால் பட்டத்தையும் விற்பதுதான் எமது நோக்கமாக இருந்தது. இதில் வெற்றியும் பெற்றோம்.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது விண்கட்டிப் படலம் ஏற்றுவதில் விருப்பம் வந்தது. படலம் செவ்வகமாக இருந்ததால் அதைக் கட்டுவது இலகுவாக இருந்தது. ஆனாலும் மூலை ஓடாமல் பார்க்கவேண்டும். ஒரு தச்சனுக்கு உரிய கவனத்துடன் ஒவ்வொரு தென்னந்தடியையும் சீராக்கி இணக்கினேன். இந்தத் தென்னந்தடிகளை கிடுகுவேலித் தென்னம் மட்டைகளில் இருந்து வெட்டித்தான் எடுப்பது வழக்கம். தடிகளைச் சீராக்கி சுண்டுவிரலில் வைத்துப் "பலன்ஸ்" பார்த்துக் கட்டுவதுதான் மிகவும் விருப்பமானது. வெள்ளைத்தாளை முதலில் ஒட்டி அதன் மேல் நீலமும் சிவப்புமாக செங்கோண முக்கோணங்களை பல வகையிலும் ஒட்டுவதுதான் சிறப்பு. இதற்காகவே கொப்பிகளில் பட்டங்களின் ஒட்டுக்களை வரைந்து பார்த்து புதுப்புது வடிவங்களைத் தயார் செய்தேன். எதிலும் புதுமை வேண்டும் என்பதுதான் எப்போதுமே எனது கொள்கையாக இருந்துவந்தது!

விண் பூட்டுவதற்கு முதலில் சரியான விசையைத் தயார் செய்யவேண்டும். கமுகம் சிலாகைதான் மிகவும் சிறந்தது. கமுகம் சிலாகையை நன்றாக அழுத்தமாகச் சீவி, சரியாகக் பலன்ஸ் பார்த்து ஓரளவு வளைத்தால் விசை தயார். நடுச்சென்ரரை அடையாளப்படுத்த கத்தியைக் கொஞ்சம் ஆழமாக்கிக் குறிவைத்தால் விசை வளைக்கும்போது முறிந்துவிடும். பல விசைகளை முறித்தே இந்தப்பட்டறிவையும் பெற்றேன். கூவை செய்ய நாங்கள் பெரும்பாலும் பாவிப்பது முள்முருக்கம் தடிதான். நடுவில் கோறையாக இருப்பதால் இலகுவாகக் கூவை செய்யலாம். ஆனாலும் வெடிக்காமல் நல்ல பலமான கூவை வேண்டுமென்றால் கிளுவம்தடிதான் பாவிக்கவேண்டும். சத்தகத்தால் கிளுவம்கூவை செய்வதற்கு நிறையப் பொறுமை வேண்டும். அடுத்தது நார். உரப்பை நார்தான் நன்றாகக் கூவும். அதிலும் யூரியாப் பைதான் எனது தேர்வு. அமோனியாப்பை நார் வித்தியாசமான ஒலியைத் தரும். ஆனால் விரைவில் வெடித்து, விண் அளறத் தொடங்கிவிடும் என்பதால் பெரிதாகப் பாவிப்பதில்லை. பார்சல் ரேப்பையும் நாராகப் பாவிக்கலாம். ஆனால் அது கிடைப்பதரிது. இளம் வடலி மட்டையில் இருந்தும் பனம்நார் பிசுங்கானால் வாட்டலாம். அதிகம் முயன்றும் அதில் தேர்ச்சிபெற முடியவில்லை.

இழைக்கயிறுதான் வால் (வாலா என்று சொல்லுவோம்!). இரட்டைப்பட்டு அல்லது மூன்று பட்டு பாவிப்போம். வாலின் கனத்தைப் பொறுத்துத்தான் பட்டத்தின் செயற்பாடு இருக்கும். வால் நீளமாக இருந்தால் பட்டம் சாதுவான மாணவன் போல அமைதியாக இருக்கும். குறைந்தால் குத்தத் தொடங்கி அறுத்துக்கொண்டு ஓடியும் விடும். ஆகவே அதிகம் கூடாமலும் குறையாமலும் வாலாவை படுபட்டாகச் சரிக்கட்டிவிடுவதில்தான் எங்களின் நிபுணத்துவம் உள்ளது. அத்தோடு மொச்சையை ஆட்டத்தில் விட்டால் பட்டல் ஜாடிக்கொண்டு நிற்கும். விண்ணும் அதற்கு ஏற்றாற்போல் சுருதி கூடிக் குறைந்து கேட்கும். எங்கள் ஊரில் விண் கூவுவதை வைத்தே யாருடைய பட்டம் ஏற்றப்பட்டுள்ளது என்று அறிய முடிந்திருந்தது.

மொச்சை கட்டுவதும் ஒரு கலைதான். எனக்குத் தெரிந்து மூன்றுவகை மொச்சை உள்ளது. இறுக்கமாகக் கட்டினால், அதாவது மேல் இரண்டு மூலைகளில் இருந்து வரும் நூல்கள் நடுப்பகுதிக்குப் மேல் இணைந்தால், பட்டம் அரக்கிக் கொண்டு நிற்கும். கீழ்க்காற்றில் நின்று கெதியாக விழுந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆக இளக்கிக் கட்டினால், இரண்டு மூலைகளில் இருந்து வரும் நூல்கள் நடுப்பகுதிக்கு அதிகம் கீழே சென்று இணைந்தால், பட்டம் அம்மத் தொடங்கிவிடும். அதாவது ஏற்றக்கோணம் 70 பாகைக்கு மேலே வந்து நூல் வண்டி வைத்து தொய்ந்து பட்டம் பொத்தென்று தலைகீழாக விழுந்துவிடும். ஆட்டத்தில் விட்டால்தான் பட்டம் மேல்க்காற்றில் நின்று ஜாடி ஆடும். ஆட்டம் கூடக் கூட நூலில் இழுவைகூடும். பட்டம் கீழ்க்காத்துக்கு வந்துவிடும். கீழ்க்காத்து குறைவாக இருப்பதால் நல்லபிள்ளை மாதிரி மீண்டும் மேலே நிதானமாகப் போகும். போன பின்பு தனது ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும்.

நான் ஒரு ஒன்றேகால் முழப்பட்டத்தை கனகாலமாக வைத்திருந்தேன். ரமேசன் அதன் விண்ணில் ஆசைப்பட்டு பட்டத்தை விலைக்குத் தருமாறு கேட்டான். நானும் பட்டத்தையும் விண்ணோடு சேர்த்து விலைபேசி முடித்து அடுத்தநாள் தருவதாக ஒப்புக்கொண்டேன். விற்பதற்கு முதல் இராக்கொடிக்கு விடவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் என்னிடம் கால் இறாத்தல் பன்னிரண்டு இழை நூல்தான் இருந்தது, அது இராக்கொடிக்குக் காணாது. இன்னும் ஒரு காறாத்தால் நூல் இருந்தால் பட்டம் பனிக்குக் கீழே விழாமல் இருக்கும் என்று எண்ணி, நண்பன் சண்ணிடம் அவனுடைய காறாத்தல் நூலைத் தருமாறு கேட்க அவனும் ஒப்புக்கொண்டான். இரவு ஏழு மணியளவில் நல்ல அமாவாசை இருட்டில் அவனும் நானும் நூல் இளக்கப் போனோம். அவன் பட்டத்தைப் பிடித்து வைத்திருக்க நான் அடிக்கட்டையை அவிட்டு அடுத்த நூற்கட்டையை இணைப்பதுதான் வேலை. 12 இழை நைலோன் நூல் என்பதால் பிரி கழண்டுவிடாமல் இருக்க நுனியில் ஒரு முடிச்சுப் போடவேண்டும். நான் நுனியில் முடிச்சைப் போட்டேன். அப்போது சண் நூலை முடிந்துவிட்டாயா என்று கேட்டான். நானும் அவன் நுனியில் முடிச்சுப் போட்டதைத்தான் கேட்கின்றான் என்று நினைத்து ஓம் என்றேன். அவன் எல்லாம் சரியென்று நினைத்து நூலைப் பட்டென்று கைவிட்டுவிட்டான். நான் நூல் தலைப்பை மட்டும் பிடித்துக்கொண்டு நின்றதால் இறுக்கிக் பிடிக்கமுடியவில்லை. நூல் கைநழுவிப் போக பட்டத்தை நல்ல இருட்டுக்குள் கைவிட்டுவிட்டோம்.

என்ன நடந்தது என்பதை உணர இரண்டு நிமிடங்கள் பிடித்தது. கதைப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. எனக்கு அழுகையும் கோபவும் முட்டியது. ஆனாலும் ஆண்பிள்ளையாச்சே அழமுடியுமா!. நன்றாக இருட்டிவிட்டதால் பட்டம் எங்கே விழுந்திருக்கும் என்றும் தெரியாது. இருட்டில் தோட்டங்களுக்குள் உழக்கவும் முடியாது. எனவே இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் திட்டியபடி பட்டத்தைத் தேடிப் போனோம். வழுக்கல், தேனித் தோட்டங்களைத் தாண்டி பிள்ளையார் கோயிலையும் தாண்டியபோது பட்டத்தின் விண் கூவும் சத்தம் கேட்டது. பட்டம் இன்னும் விழுந்துவிடவில்லை. மேலேதான் நிற்கின்றது என்று புரிந்தது. காறாத்தல் நூலோடு பட்டம் போனதால் நூல் எங்கேயோ பனையில் சிக்கி இருக்கவேண்டும். வழுக்கல் தோட்டத் தலைப்பிலுள்ள பனங்கூடலுக்குள்தான் நூல் சிக்கியிருக்கவேண்டும் என்று யூகித்தோம். என்றாலும் பட்டத்தை எடுக்க விடியக்காலமைதான் வரவேண்டும் என்பதால் இருவரும் அடுத்த நாள் வரலாம் என்று முடிவு செய்துவிட்டு வீடுபோய்ச் சேர்ந்தோம்.

இரவிரவாக நித்திரை வரவில்லை. எப்படியோ உறங்கிப்போனேன். பட்டம் ஜாடிக்கொண்டு நிலாவெளிச்சத்தில் நிற்பதுமாதிரிக் கனவெல்லாம் வந்தது. கண்விழித்து எழுந்தபோது பலாரென்று விடிந்துவிட்டிருந்தது. அவசர அவசரமாக தோட்டங்களுக்குக் குறுக்கால் ஓடியும் நடந்தும் பிள்ளையார் கோயில் பக்கம்போனபோது பட்டத்தைக் காணவில்லை. பட்டம் இரவுப் பனிக்குள் கீழே விழுந்திருக்கவேண்டும். ஒரு கிழவன் பொயிலைத் தோட்டத்திற்குள் நின்று நூல் இழுப்பது தெரிந்தது. நம்பிக்கையோடு போய் விசாரித்தபோது பட்டம் இல்லை என்று சொன்னார். கொஞ்ச நூல்தான் கிடைத்தது. யாரோ அறுவார் விடியமுன்னரே வந்து பட்டத்தை எடுத்து ஒளித்துவிட்டார்கள் என்று தெரிந்தது. பிரியப்பட்ட படலத்தை இழந்துவிட்டது மிகவும் துக்கத்தைக் கொடுத்தது. விலை பேசிய காசும் கிடைக்கவில்லை. அருமந்த விண்ணும் பட்டமும் இல்லையென்று ஆகிவிட்டது.

என்றாலும் மனம் தளரவில்லை.பலகாலமாக கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த ஒன்றரை முழ விண்பிராந்தைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டேன். நல்ல நீளமான பூவரசம் தடியை முள்ளத்தண்டாகவும், மூங்கில்தடிகளை செட்டைக்கும், குண்டிக்கும் இணக்கி, கமுகம் சிலாகையில் விசையும் பூட்டி பிராந்துத் பட்டத்தைத் தயார் செய்து பகலில் ஜாடி ஆடவும், முச்சையைக் கொஞ்சம் இளக்கி இரவில் இராக்கொடியும் விட்டேன்.


ஊரும் உலகும்

கரணவாய்


கரணவாய் என்பது யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிராமம். இது கரணவாய் தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு என்று பல பிரிவுகளாக உள்ளது. தெற்கு எல்லையாக உப்புவெளியும், கப்பூதூக் கிராமமும், கிழக்கே கரவெட்டியும், மேற்கே வல்லை வெளி, இமையாணன், உடுப்பிட்டி போன்ற பகுதிகளும், வடக்கே கொற்றாவத்தை, பொலிகண்டி போன்ற இடங்களும் உள்ளன. தெற்கே போகும் வீதி வல்லை வெளியில் இருந்து துன்னாலை நோக்கிப் போகின்றது. இந்த வீதியில்தான் பிரபல்யமான சுருட்டு தயாரிக்கும் மண்டான் என்ற இடமும், உப்பங்களியும் உள்ளன. ஊருக்குக் குறுக்காகச் செல்லும் யாழ் பருத்தித்துறை வீதி (750 பஸ் இலக்கம்) தெற்கு, மத்தி பகுதிகளைப் பிரிக்கின்றது. இந்த வீதியில் உள்ள குஞ்சர்கடை எனும் சந்தியில் இருந்து இரு கிளைவீதிகள் தெற்காக கல்லுவம் நோக்கியும், வடக்காக உடுப்பிட்டி-வதிரி வீதியை நோக்கியும் பிரிகின்றன.

கரணவாய் என்ற பெயர் வர என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. முன்னர் இங்கு வசித்த சைவக் குருமார் பரம்பரை கணக்குப் பார்ப்பவர்கள் என்றும் அதனால் அவர்கள் கர்ண பரம்பரையினர் என்று அழைக்கப்பட்டதால் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு கர்ணவாய் என்று பெயரிட்டனர் என்றும் இதுவே பின்னர் கரணவாய் என்று மாறியது என கதைகள் உள்ளன. அத்தோடு பெயரை மேலும் சிறப்பாக்க கருணையம்பதி என்றும் அழைப்பார்கள்.

தோட்டங்களும், பனங்கூடல்களும், வயல்களும் அதிகமுள்ள கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாக உள்ளார்கள். அத்தோடு ஏறக்குறைய எல்லோருமே சைவர்களாகக்த்தான் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை. வாழ்பவர்கள் சைவர்களாக இருப்பதால் பல சைவக் கோயில்கள் நிறைந்துள்ள இடம். பிள்ளையார், அம்மன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிள்ளையார் கோவில்கள் திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்திபெற்றவை.

திருவிழாக்கள் சில குடும்பத்தாரினது என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் யாழ்ப்பாண சமூகத்திற்குரிய இறுக்கமான சாதிக்கட்டமைப்புக்கள் நிலவுகின்ற ஊராக இருப்பதால் அவை சாதியடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருந்தன. திருவிழாக் காலங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நாதஸ்வர, மேளக் கச்சேரிகளும், சின்ன மேளக் கூட்டுக்களும், பாட்டுக் கச்சேரிகளும் இரவிரவாக நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது கோவில் திருவிழாக்களுக்குப் போய்வந்த நினைவுகள் உள்ளன. எப்போதும் கிழக்கு வீதியில் சனக்கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறுவர்களாகிய நாங்கள் தேர்முட்டியில் அல்லது தீர்த்தக் கேணியில் நின்று விளையாடுவோம். பூசைமுடியும்போது மடப்பள்ளியில் பஞ்சாமிர்தத்தை அடிபட்டு வாங்கி நக்குவதும், இருட்டிய பின்னர் ஆளரவம் குறைந்த மேற்கு வீதியில் எமது எதிர்க் கோஸ்டிகளுடன் மல்லுக் கட்டி சண்டைபிடிப்பதுதான் தொழில்.

தொண்டமனாறு செல்வச்சந்நிதி, வல்லிபுரக் கோயில் திருவிழாக் காலங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து சக்கரைத் தண்ணியும், மோரும் வழங்குவது பெரிய இளைஞர்களின் திருப்பணி. அந்த வயது வரமுதலே ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டதால் அடியார்களுக்குத் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டவில்லை.

கரணவாயின் தென்பகுதியில் இருக்கும் உப்புக்கழி உருவானதற்கும் ஒரு கதை இருக்கின்றது. தற்போது வல்லைவெளியாக இருக்கும் பகுதியில் முன்னர் ஒரு நன்னீர் ஓடை இருந்ததாகவும் அதற்கு வல்லி நதி என்று பெயர் இருந்ததாகவும் கதைகள் உள்ளன. முன்னர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தொண்டைமான் பொருட்களைப் படகு வழியாகக் கொண்டு செல்ல இந்த ஓடையை ஆழ அகலப்படுத்தினானாம். அதனால் கடல்நீர் இந்த ஓடையினூடாக உட்புகுந்தது. நல்ல வெயில் காலத்தில் உவர் நீர் உப்பாக மாறுவதை உப்பு விளைவது என்று சொல்வார்கள். உப்பு ஒரு காலத்தில் பெரும் செல்வத்தைக் கொடுத்ததால் உப்புமால்களில் அவை குவிக்கப்பட்டு பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விளைந்த உப்பை தொண்டமனாறு பகுதிக்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட வீதி (தற்போதைய துன்னாலை-தொண்டமனாறு வீதி) உப்பு ரோட் என்றும் அழைக்கப்படுகின்றது.

உவர் நீர் உட்புகுந்து நிலத்துக்கடியில் உள்ள நன்னீரை மாசு செய்வதைத் தடுக்க பிற்காலத்தில் செல்வச்சந்நிதி கோயிலின் மேற்குப் புறத்தில் கடல் நீர் தடுப்பு அணை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அணையில் உள்ள கதவுகள் கோடையில் திறக்கப்பட்டால் உப்பங்கழியில் உப்பு விளையும். மாரி காலத்தில் மழை வெள்ளம் அதிகரித்தால் கதவுகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் கடலுக்கு செலுத்தப்படுவதும் உண்டு.

80 களின் நடுப்பகுதியில் இராணுவம் தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தில் வந்து முகாம் இடும்வரை ஒவ்வொரு கோடையிலும் உப்பு விளைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். நானும் சிறு பையனாக இருந்த காலத்தில் அப்பாவுடன் ஒருதடவை சென்று உப்பு அள்ளியிருக்கின்றேன். அன்று உப்பங்கழியில் பெரும் சனக்கூட்டம் திரண்டு நின்று உப்பை அள்ளி உரப்பைகளில் நிறைத்துச் சுமந்து சென்றார்கள். எங்கள் வீட்டிலும் இரண்டு உரப்பைகளில் உப்பு வந்து சேர்ந்தது. இது பல வருடங்களுக்கு உப்பு வாங்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்தது.

இராணுவம் கடல் நீர் தடுப்பு அணையின் கதவுகளை நிரந்தரமாக மூடியிருந்ததால் நான் வளரும் பருவத்தில் உப்பு ஒருபோதும் விளையவில்லை. எனினும் 90ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறி விடுதலைப் புலிகள் யாழ் திரும்பிய காலத்தில் கதவுகள் திறக்கப்பட்டு கடல் நீர் உள்ளே விடப்பட்டபோது உப்பு விளைந்தது. அப்போது பிரேமதாஸவுடனான பேச்சுக்கள் முறிந்து சண்டை ஆரம்பமான நாட்கள். உப்பு விளைந்திருந்தாலும் வானத்தில் குண்டுவீச்சு விமானங்கள் (சியாமாசெற்றியாக இருக்கவேண்டும்) அடிக்கடி பறந்து திரிந்து கொண்டிருந்ததால் ஊர்ச்சனம் உப்பு அள்ள தரவைப் பகுதிக்குச் செல்லவில்லை. எனது நண்பன் ஒருவன் (இப்போது கனடாவில் வசிக்கின்றான்) உப்பு அள்ளப் போவோமா என்று கேட்டான். வீட்டை விட்டு வெளியே போவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் நிறைந்த அக்காலத்தில் காற்சட்டை, சேர்ட் போட்டு வெளிக்கிட்டால் எங்காவது தூர இடம் போகின்றேன் என்ற சந்தேகம் வந்து கேள்விகள் வரும். அதைத் தவிர்க்க செம்மண் தூசு படிந்த கலரில் இருந்த சாரம் ஒன்றையும் பழுப்பு சேர்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நண்பனுடன் உப்பு அள்ளப் புறப்பட்டுவிட்டேன்.

உப்பங்கழியில் பாலைக் கொட்டி விட்டது போன்று உப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைய விளைந்திருந்தது. அதன் மேல் தெறிந்த சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசச் செய்தது. எங்கள் இரண்டு பேரைத் தவிர ஒரு சிலரே இடையிடையே அந்தப் பரந்தவெளியில் நின்றிருந்தோம். சரி வந்ததும் வந்தோம். உப்பை விரைவாக அள்ளிக்கொண்டு போகலாம் என்று இறங்கி உப்பைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து உரப்பைகளில் நிறைத்துக்கொள்ள ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் மூன்று நான்கு குண்டுவீச்சு விமானங்கள் பலாலிப் பக்கம் இருந்து வந்து தாழ்வாகப் பறந்து வட்டமடித்து எங்களை நோட்டம் இட்டன. எங்களுக்குப் பயமாக இருந்தாலும் ஓடி ஒளிய ஒரு இடமுமில்லாத வெட்டைவெளி என்பதால் செய்வதறியாது நின்றோம். வட்டமடித்த விமானங்களும் நாங்கள் உப்பை அள்ள வந்தவர்கள்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டது போன்று நாவற்குழிப் பக்கமாகத் திரும்பின. கொண்டு வந்த உரப்பைகள் நிறைந்துவிட்டதாலும் பொம்பர்களைப் பார்த்த கிலியாலும் நாங்கள் தரவையை விட்டு வீதியை நோக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து சேர்ந்தோம். அதன் பின்னர் உப்பு வெளியை இன்று வரை கண்ணால் காணவில்லை.

Sunday, August 12, 2007

பரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து

06 ஜன. வெள்ளி

மீண்டும் ஒரு வெறுமையான நாளாகத்தான் இன்றைய பொழுதும் போனது. இப்படியே தொடருமோ என்ற அச்சம் மனதை வாட்டுகிறது. எதுவுமேயின்றி வீணாகப் பொழுதைக் கழிப்பது வீண்வேலை என்றும் தெரிந்தும் தொடர்ந்தும் அதுதான் நடக்கின்றது. கோயிலுக்குப் போயிருந்தேன். பெண்களைப் பார்க்கத்தான் மனம் அலைபாய்கின்றது. என்றாலும் சிறிது கடவுள் பக்தியும் அங்கு இருப்பதுபோலத்தான் தெரிகின்றது. கடவுள் என்ற உன்னதமானதொன்றை எவ்வாறு பணம் சம்பாதிக்கப் பாவிக்கின்றார்கள் என்பதைத்தான் கோயிலினுள் நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் மனம் சிந்திக்கின்றது. ஐயர் செய்யும் கிரியைகள் கூடச் செயற்கையாகத்தான் தோன்றுகின்றது. பற்றுச் சீட்டின் அளவைக் கொண்டு பக்தியை மதிப்பிடுவது போல இருக்கின்றது. ஒரு பவுண் அர்ச்சனைக்கு வெறும் பூவும் திருநீறு சந்தனமும், ஐந்து பவுணிற்கு கூடுதலாக ஒரு ஆப்பிளும் அளவுகோலாக உள்ளது. மன அமைதியை நாடிச் சென்று மனச் சஞ்சலத்துடன் திரும்பிவந்தேன்.27 பெப். திங்கள்

அதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு எப்போது விடும் என்று புரியவில்லை.


02 மார்ச் வியாழன்

இன்று உடல் நிலை அவ்வளவு ஒத்துழைப்புத் தரவில்லை. தடிமன், காய்ச்சல் வரலாம் போலத் தெரிகின்றது. சிறு வருத்தம் கூடப் பலவீனத்தைத் தருகின்றது. எப்போதும் போல வலி நிவாரணிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. வழமையான ஒரு தலையிடி என்றாலும் கூட இனிப்புச் சாப்பிடும் ஆர்வத்துடன் என் மனம் வலி நிவாரணிகளைத் தேடுகின்றது. இவ்வளவு தூரம் அடிமையாக என்னால் மாறமுடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. சில விடயங்கள் பிழையானது என்று தெரிந்தும் கைவிட முடியாத நிலைமை. கைவிட முடியாத விடயங்களை பிழையில்லாத விடயங்கள் என்று என்னை நானே ஏமாற்றும் தர்க்கங்கள். இதன்மூலம் எப்போதுமே சரியானவனாகக் காண்பிக்க முனையும் முட்டாள்தனமான விவாதங்களை மனதில் நடாத்தியபடி வாழும் ஒரு போலியான வாழ்வு. படிப்புக் கூட அப்படித்தான். கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும் என்பது நன்றாகவே புரிகின்றது. ஆனால் முடியவில்லை. என்றாலும் எனது தகுதியை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் மனது நினைக்கின்றது. ஒன்றுமே இல்லாமல் உள்ளபோது மற்றவர்கள் கெட்டிக்காரன் என்று புகழுவதை விரும்பும் மனம் படைத்துவிட்டேனா? புகழுக்கு ஆசைப்படலாம். ஆனால் புகழைத் தேடிப் போகக் கூடாது. எமது கடின உழைப்புக்குப் புகழ் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் கடின உழைப்புத்தான் என்னிடம் இல்லை!

15 ஜூன் வியாழன்

விடுமுறையை நன்றாக அனுபவிக்க வேண்டும் போலத்தான் உள்ளது. ஆனால் காசும் உழைக்கவேண்டும் அல்லவா. இன்று நித்திரையால் எழும்பி "மரப்பசு" நாவலை வாசித்து முடித்தேன். கதையை வாசிக்கும்போது பாலியல் புத்தகம் படிப்பது போன்றதோர் உணர்வு வந்ததேயொழிய கதையின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை. கீழ்த்தரமான வாசகனாகத்தான் இருக்கிறேன். கதையாசிரியரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று அறிய நான் முயற்சிக்கவேயில்லை. யாரும் கேட்டால் நான் பெரிய புத்தகங்களை வாசித்தேன் என்று பெருமைப்படலாம். வாசித்தவர்களுடம் என்னை ஒப்பிட்டு என்னைப் பெரியவன் என்று பிரமிப்புக் காட்டலாம். இதுதானே நான் விரும்புவது. தமிழ் நவீன இலக்கியங்களைப் படிப்பதில் உண்மையில் என்ன நோக்கத்தை நிறைவேற்றமுடியும்? நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் என்று சொல்லாடல்களை மேற்கொண்டு வக்கிரகங்களை ரசிக்கும் மனதுதானே என்னுடையது.பத்து மணியளவில் வேலைக்குப் புறப்பட்டேன். தூக்கிப் பறிக்கிறதுதானே வேலை. வேண்டுமென்றே கடினமான வேலையாகத் தந்தார்கள். தமிழர்கள்தான் வேலை செய்வது அதிகம். இந்தியாக்காரனிடமும் தமிழனிடமும் வேலை செய்யும்போது சுயகெளரவம், மானம் என்பவற்றைச் சிறிது விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். என்னைப் பற்றிப் பெருமையாக நினைத்தால்தான் இவையெல்லாம் பெரிதாகத் தோன்றும். ஆனால் நான் எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொண்டேன். எதிர்பார்க்காதது நடந்தால்தானே பிரச்சினை. எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது புரியவில்லை. ஆனால் அதிகம் காசு சேர்க்கவேண்டும் என்று மனம் சிந்திக்கின்றது. மூன்று மாதத்தில் வாரம் ஏழு நாட்களும் கிடைக்கும் மணித்தியாலங்களில் கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான் அடுத்த கல்வியாண்டில் காசுப் பற்றாக்குறை இன்றி சமாளிக்கலாம்.

Saturday, July 15, 2006

இழந்து போனவை

விடிகாலை விண்ணில் கிழக்கிலெழும்
விடிவெள்ளியையும்
விருச்சிக விண்மீன் கூட்டங்களையும்
விரும்பிப் பார்க்கவென்று எழுந்ததும்

பூபாளம் பாடும் புள்ளினங்களும்
எங்கள் வீட்டுக் கோழிகளும்
நடாத்தும் இசைக் கச்சேரியைக் கேட்டு
இன்புற்று விடியலை எதிர்கொண்டதும்

மழை பொழியும் கார்த்திகையில்
நிலந்தெரியாத இருளினுள்
இலாம்புடன் அசைந்துவரும்
குழைவண்டில்களை பார்த்து மகிழ்ந்ததும்

மாசி மாதத்து பனிமூட்டத்தினுள்ளே
தூரத்துப் பனைமரத்தினூடு எழுகின்ற
சூரியக் கதிர்களின் வரவுக்காக
வெற்றுடம்புடன் வெடவெடுத்துக் காத்திருந்ததும்

கொட்டும் மழைக்காலத்தில்
திரண்டோடும் வெள்ளத்தினுள்
காகிதக் கப்பல்கள் விட்டுப்
பின்னால் ஓடியதும்

காவிளாய்ச் செடிகள்மீது உட்காரும்
வண்ணத்துப் பூச்சிகளையும் தும்பிகளையும்
நூல்தடம் கொண்டு
விரட்டிப் பிடிக்க அலைந்ததும்

முயல் உடும்பு வேட்டைக்கெனச் சென்று
பற்றைகளையும் தோட்டங்களையும்
உழக்கி அணில்களையும் ஓணான்களையும்
அடித்துக் கொன்றதும்

நீந்தி பழகவென கீரிமலை
வட்டப்பாறை, தொண்டமனாறுபோய்
உப்புநீரின் அடர்த்தியைக்
குடித்து அறிந்ததும்

வயதுக்கு வந்துவிட்டோம்
என்ற உணர்வில்
கடைக்கண் பார்வைக்கும்
ஒரு கீற்றுப் புன்னகைக்கும்
கால்கடுக்கக் காத்திருந்ததும்

தறித்துப் போட்ட பனைக்குற்றிகளிலும்
வீதியோர மதவுகளிலும் குந்தியிருந்து
நாட்டின் அரசியல் முதல்
பருவச்சிட்டுக்கள் வரை
வம்பளந்து மகிழ்ந்ததும்

உக்கிரம் தணிந்த மாலையில்
வல்லை வெளியில் தனிமையையும்
தென்றலையும் தேடி ஒடியதும்

மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்
மறைந்துபோக
நானோ
ஐரோப்பிய முதலாளியின் அடுப்பங்கரையில்
மனிதத்தை இழந்து இயந்திரமானேன்.

Sunday, February 05, 2006

Bachelor Party

கண்கள் மேலே சொருகின
கால்கள் வளைந்து நெளிந்தன
விழ வேண்டும் பின்னர்
எழ வேண்டும் என்றோர்
உன்னுதல்
விழுந்தால் எழுமாட்டாய்
என்றோர் குரல் உள்ளிருந்து.
ஓ! இன்னும் அமிழவில்லை.

இசையின் இரைச்சல் காதுகளில்
சிந்திய உணவுத் துணுக்குகள் கால்களில்
நீந்தினேன் நடன முன்றலை நோக்கி.

எண்ணெய்ப் படலமூடே
சொடுக்கும் கைகளும்
துள்ளிடும் கால்களும்.
மேலெழுந்து கீழிறங்கும்
இடைகளின் நடுவே நான்.

நிலை கொள்ளமுடியவில்லை
இரப்பர் போல் ஈய்ந்தேன்.
சமனம் கொள்ள விரிந்து
வளைந்தன கைகள்.
நெளிந்து வளைந்து
எவர்மேலேயோ சாய்ந்தேன்.

வியர்வைப் பிசுக்குடன்
இளஞ்சூடான மேனியின்
கதகதப்பு தூண்டியது
உணர்வுகளை.

துவண்ட தலையை நிமிர்த்தி
குவித்தேன் கண்களை.
சிலந்தி வலைப் பார்வையில்
தெரிந்தாள் துணியின்றி
துகிலுரி நங்கை.

துவண்டது தலை
மீண்டும்!

Wednesday, November 02, 2005

அழுக்கு

வேலைக் களைப்பும்
வியர்வை நாற்றமும்
கிள்ளும் பசியுமாய்
காத்திருக்கின்றேன்
பேரூந்துக்காய்.

வெயிலில் உருகும்
ஐஸ் கிறீமாக
கரைகின்றன
மணித்துளிகள்

தள்ளி எட்டி
பார்க்கின்றேன்
நீளும் வீதியில்
முடிவிலியைக் காண்கின்றேன்
பேரூந்தைக் காணவில்லை.

அலுப்புடன்
எதிர்வீதியில்
திரும்பியது
பார்வை.

பொன் கேசமும்
நீல விழிகளுமாய்
வெப்பக் காங்கையில்
சுகம் காண
வருகின்றாள்
ஒரு தேவதை.

அழகுப் பதுமை
நெருங்கியபோது
தொலைந்தன விழிகள்
தேடினேன்.......
கண்டுகொண்டேன்!

பிதுங்கிய அவளின்
மார்புகளுக்குள்
புதைந்து கிடந்தன
என்னிரு விழிகள்!

பேரூந்து வராமலேயே
இருக்கட்டும்.

Tuesday, November 01, 2005

காணாமல் போன டயறி

தொலைந்து போயிற்று டயறி
இலாச்சிகள் எல்லாம் தேடினேன்
புத்தகங்களின் நடுவிலும் தேடினேன்
அறைகள், உத்தரம் கூடத் தேடினேன்
கிடைக்கவில்லை இன்னும்.

கல்லூரி நாட்களின் சந்தோஷ துக்கங்கள்
கிளர்ச்சியைத் தந்த பெண்களின் ஞாபகங்கள்
சமறிக் கணக்குகள், தொலைபேசிக் கணக்குகள்
தீர்க்க முடியாத சமன்பாடுகளின் தீர்வுகள்
ஊரில் வளர்த்த கடாய்க் குட்டியின் கதை
கிறுக்கிய கவிதை வரிகள்
எல்லாமே தொலைந்து போயிற்று.

தொலைந்துபோனது எழுத்துக்கள்தான்
தொலையா உணர்வுகள் இன்னும்
என்னுள்!