சோத்து சுந்தரி....

நானாக யோசிக்கவில்லை...




அம்மாவும் அப்பாவும் ஊட்டி ஊட்டி வளர்த்து எனக்கு இலண்டனுக்கு வருமுன்னரே உடம்பு கொஞ்சம் ஊதித்தான் இருந்திச்சு. இதில அடிக்கடி நொட்டைத்தீன் சாப்பிட்டு வயிறும் வைச்சிருந்தால் சொல்லவே வேணும்! இப்ப கொஞ்ச நாளா காலில நகம் வெட்டலாம் எண்டு குனிஞ்சு நகம்வெட்டியால் வெட்ட வெளிக்கிட்டால் நெஞ்சுக்கும் முழங்காலுக்கும் இடையில ஏதோ பெரிசாக ஒண்டு (பிழையாக யோசிக்காதேயுங்கோ) நிக்குது எண்டு பாத்தால், அது எந்த வஞ்சனையுமில்லாமல் வளந்து முட்டுக்காய் இளநீ மாதிரிக் கிடக்கும் வயிறுதான்.

இவர் இப்ப பிள்ளைபெற வேண்டாம் எண்டு கவனமாக இருந்தும் ஏதாவது பிசகிச் சிலவேளை வயித்தில பூச்சி, புழு ஏதாச்சும் வந்திட்டுதோ எண்ட பயத்தில சோதிச்சுப் பார்த்தால் கடவுளேயெண்டு அப்படி ஒண்டுமில்லை. பிள்ளத்தாச்சியாக இல்லாமல் பெரிய வயித்தோட நிண்டால் தெரிஞ்சவை ஒண்டில் விடுப்புக் கேட்பாளவை இல்லாட்டி பின்னால நிண்டு நெளிப்பாளவை. அதோட இதை இப்படியே விட்டால் என்ரை செருப்பு, சப்பாத்தை நானாகவே போடமுடியாமல் போயிடும் எண்டு பயம் வேற வந்திட்டுது. இப்ப அக்கா எண்டு கூப்பிடுறவையும் நாளைக்கு குண்டக்கா, குண்டம்மா எண்டு சொல்லவெளிக்கிட்டால் ஒண்டும் சொல்லேலாமல் வெருளிச் சிரிப்புடன் பேசாமல் போகவேண்டிவந்துவிடுமே எண்ட கவலையும் தொத்திக்கொண்டது. அதைப்போல வேற மானக்கேடு ஏதும் இருக்கே இந்த உலகத்தில.

உடம்பு பெருத்த கவலையை மறக்க இவர் தமிழ்க்கடையில எனக்கெண்டு ஆசையா வாங்கிக் கொண்டு பிரிட்ஜில் வைச்சிருந்த அல்வாவில் ஒரு துண்டை வெட்டி வாயில் கடித்துக்கொண்டே வீட்டில வாடகைக்குக் குடியிருந்து யூனிவேசியிட்டியில படிக்கும் இவற்றை சொந்தக்காரப் பொடியனட்டை கதைச்சுப் பாப்பம் எண்டு அவனின்ரை அறைப்பக்கம் போனன். பொடியன் பாக்கிறதுக்கு வத்தலும் தொத்தலுமாக காஞ்ச பயித்தங்காய மாதிரி இருப்பான். எப்ப பாத்தாலும் படிப்பு எண்டு காலில சில்லுக் கட்டின மாதிரி ஓடிக்கொண்டிருப்பான், இல்லாட்டி கொம்பியூட்டரை வைத்து "டொக்..டொக்..டொக் எண்டு நடுச்சாமத்தில கூட தட்டிக் கொண்டிருப்பான். சில நேரம் நித்திரை குழம்பிச் சினம் வந்தாலும், பொடியனுக்கு யூனிவேசியிட்டியல கனக்கப் படிக்கக் குடுக்கிறாங்களாக்கும் எண்டு பொறுத்திடுவன். என்னை எப்ப கண்டாலும் ஒண்டில தலையை அண்ணாந்து சீலிங்கைப் பாத்துக் கதைப்பான், இல்லாட்டி தலையைக் கொஞ்சம் குனிஞ்சு கீழ்க்கண்ணால்தான் பாத்துத்தான் கதைப்பான். என்ரை தடிச்ச தோற்றத்தை பாக்கிறதுக்கு விருப்பமில்லையாக்கும் எண்டு மனதில கவலை வந்தாலும், படிக்கிற பொடியன் பெம்பிளையளையோடு பவ்வியமாகப் பழகிறானாக்கும் எண்டு மனதைச் சமாதானப்படுத்திவிடுவன்.

தட்டின கதவைத் திறந்தவனைப் பார்த்தால் ஏதோ முக்கியமான சோதினைக்கு படிச்சுக்கொண்டிருந்தவன் மாதிரி இருந்தது. எண்டாலும் பணிவோடை தலையைக் சாதுவாகக் குனிஞ்சு என்ரை கவலையான முகத்தைப் கீழ்க்கண்ணால பார்த்துக்கொண்டு

"அக்கா, எதுவும் பிரச்சினையே? உதவி எதுவும் வேண்டுமெண்டால் யோசிக்காமல் சொல்லுங்கோ" எண்டான்.

உடம்பு வைச்ச கவலையை இளம் பொடியனிட்ட சொல்ல கொஞ்சம் கூச்சமும் தயக்கமும் வந்ததால் எங்கை, எப்படித் தொடங்கலாம் எண்டு யோசிக்க ஒரு சொல்லும் வாயில இருந்து வரேயில்லை. பொடியன் ஏதும் வித்தியாசமாக நினைச்சாலும் எண்ட பயம் வேறு வந்தவுடன் டக்கெண்டு உடம்பு வைச்சுக்கொண்டு போவதால் வந்த மனக்கவலையைச் சொல்லி, "கெதியாகத் தேகம் மெலிய ஏதாவது மருந்து இருக்கோ எண்டு கேட்க வந்தன்" எண்டன்.

பொடியன் வழமையான விட்டத்தை இல்லாட்டி நிலத்தைப் பாக்கிற பார்வையை விட்டிட்டு ஒருக்கால் மேலும் கீழும் என்னைத் தன் பார்வையால் அளந்தான். கொஞ்சம் உடம்பு கூசிக் காதில் குளிர்ந்தது.. பொடியன் ஆய்வுகூடத்தில இருக்கிற பெருத்த எலியைப் பார்ப்பது மாதிரி பார்வையை மாத்தி

"உடம்பு மெலிய மருந்துகள் இருந்தால் காசு வைச்சிருக்கிற எல்லாரும் கஸ்டப்படாமல் உலக அழகுராணிகள் மாதிரியெல்லே வந்திருப்பினம். இதெல்லாம் ஈஸியான விஷயம் இல்லை. நிறையப் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் வேணும்" என்றான்.

"விடியக் காலமை வெறும் வயித்தில இளஞ்சூட்டுத் தண்ணியில தேனைக் கலந்து குடிச்சால் கொழுப்புக் கரைஞ்சு உடம்பு மெலியும் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன். அது சரிவராதோ?" எண்டு கேட்டன்.

பொடியன் "உதெல்லாம் வாசிக்க நல்லா இருக்கும், ஆனா உடம்பு குறையாது. மெலியவேணுமெண்டால் இரண்டு விசயத்தில கட்டுப்பாடா இருக்கோணும். ஒண்டு, சாப்பாட்டை முக்கியமா சோத்தை நல்லாக் குறைச்சுச் சாப்பிட வேணும். பிறகு நல்லதா ஒரு ஜிம்மில சேந்து ஓடுறது, நீந்திறது மாதிரியான கார்டியோ எக்ஸசைஸ் செய்யவேணும். இது இரண்டையும் ரெகுலராகச் செய்தால் உடம்பு தானாக வத்திவிடும்" என்றான்.

இது இரண்டும் ஈஸியான வழியள் மாதிரி இல்லையே எண்டு கேக்க நினைச்சாலும், அறிவுரை சொல்றாக்களை அதிகம் கேள்விகேட்டால் அவைக்கு பிடிக்காமல் போய்விடலாம் எண்டதால் நன்றி சொல்லி வந்திட்டன்.

சரி முதல்ல சாப்பாட்டைக் குறைப்பதில் தொடங்குவோம் எண்டு இவர் வேலையால வந்தவுடன

"இனி வீட்டில காலைச் சாப்பாடு, ராத்திரிச் சாப்பாடு எல்லாம் சமைக்கேலாது, மத்தியானம் மட்டும்தான் சமையல்" எண்டன்.

அவரோ "மனிசன் கஷ்டப்பட்டு வேலைக்குப் போய்வந்தால் சாப்பாடுகூடச் சமைச்சுத் தராமல் என்ன கிழிக்கப் போகின்றாய்?" எண்டு கொதிச்ச எண்ணைச் சட்டியில விழுந்த கடுகு மாதிரி வெடிக்கத் தொடங்கினார்.

"இப்பவே விடிய எழும்பி மனுசனுக்கு ஒரு தேத்தண்ணி வைச்சுத் தாறதுக்குப் பஞ்சி. சமையலும் இல்லாட்டி நல்ல சோக்கா நித்திரை கொண்டு எழும்பி இஞ்சை இருக்கிற வேலையில்லாத பெண்டுகளோட வம்பளந்து கொண்டல்லே இருப்பாய்" எண்டு இன்னமும் சொல்லிக்கொண்டு போக,

ஏன் நான் மெலியிறதுக்கு உழைக்கிற மனுசனைப் பட்டினி போடவேண்டும் எண்டு அழுகிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு "எனக்கு உடம்பு பலூன் கணக்கா ஊதிப் போட்டுதெண்டு மற்றவை நெளிக்கினம். அதுக்குத்தான் சாப்பாட்டைக் குறைப்பம் எண்டு நினைச்சன்.. சரி. இனிமேல் எனக்கில்லாமல் உங்களுக்கு மட்டும்தான் சமையல்" எண்டன்.

தலையைத் திருப்பி ஒரு மாதிரி புதினமாய்ப் பார்த்த இவர் " எல்லாத் தமிழ்ப் பெட்டையளையும் மாதிரி வடிவாத்தானே இருக்கிறாய். பட்டினி கிடந்து இக்கணம் அல்சர் கில்சர் வந்தாலும்" எண்டார்.

"அதெல்லாம் சரிவராது. நான் முடிவெடுத்திட்டன்.. நீங்கள் எனக்கு ஒரு ஜிம்முக்குப் போறதுக்கும் ஏற்பாடு செய்யவேணும்"

"ஜிம் வேறயோ" எண்டு தொடங்கினவர் என்ரை கவலையான முகத்தைப் பாத்ததும் குழைவான பார்வைக்கு மாறி வேற ஒரு வார்த்தையும் சொல்லாமல் 'ஓம்' என்ற மாதிரி தலையாட்டிவிட்டுப் போனார்.

சாப்பாட்டைக் குறைக்கிறதெண்டால் என்ன லேசுப்பட்ட வேலையே? எதுக்கும் படிச்ச பொடியன் வீட்டில வசதியா வீட்டில இருக்கிறதால திரும்பவும் விளக்கங்கள் கேக்கப் போனன்.

பொடியனும் தலையைக் குனியுறதும் மேல திருப்பிறதுமாய்க் கொஞ்ச நேரம் யோசித்தாப் பிறகு

"காலமையில பால்க்கஞ்சி மாதிரி இருக்கும் porridge மட்டும்தான் சாப்பாடவேணும். கனக்கச் சாப்பிடாமல் கட்டுப்பாடோட இருக்கவேணுமெண்டால் கடைகளில் சரைகளில் விற்கும் பக்கற்றை வாங்குங்கோ" எண்டு சொல்லி பொரிட்ஜ் கஞ்சியை எப்படிச் செய்யலாம் எண்டு விளக்கமும் தந்தான்.

"மத்தியானச் சாப்பாட்டை மாத்தவேணுமெண்டில்ல. ஆனா, இப்ப சாப்பிடுறதில இருந்து நாலில் ஒன்றாக் குறைக்க வேணும்" எண்டு சொல்ல மனதிற்குள் இரண்டு கோப்பைச் சோறு அரைக் கோப்பையா மாறுகிறமாதிரி படம் ஓட முகத்தில வேர்த்தது!

"இரவைக்கு சோறு, புட்டு, இடியப்பம், தோசை மாதிரி மாச்சத்து சாப்பிட்டால் அவை கொழுப்பாக மாறி அங்கங்க தேங்கிவிடும். அதனால இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு துண்டு தவிட்டுப் பாண் மட்டும் சாப்பிடவேணும். அதுகளை விரும்பிற கறியோட சாப்பிடலாம். எண்டாலும் கறியின்ற அளவில கட்டுப்பாடு இல்லாட்டி ஒரு பிரயோசனமுமில்ல" எண்டு நல்ல அறிவுரை தந்தான்.

பொடியன் சாப்பாடு விஷயத்தில் மிகவும் விவரமாக இருக்கின்றான் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இந்த சாப்பாட்டுக் காசை மிச்சம் பிடித்து ஒரு நல்ல சாறி அல்லது நகை வாங்கலாம் என்ற எண்ணமும் ஓடியது. மெலிந்த உடலுடன் நல்ல சாறி, நகை போட்டு, ரீவியல நகைக்கடை விளம்பரத்தில வாறவையள் மாதிரி என்னைக் கற்பனை செய்து பார்க்க முகம் சிவந்துவிட்டது. கீழ்க்கண்ணால என்ர சிவந்த முகத்தைப் பாத்த பொடியனும் நிலைமை அந்தரமாகப் போகப்போகின்றதோ என நினைத்து "படிக்கக் கனக்கக் கிடக்கு" என்று அறைக்குள் திரும்பிவிட்டான்.

சோத்தை சாப்பிடாமல் வெறும் சப்பாத்தியை எப்படித்தான் சாப்பிடுறாங்களோ இந்த ஹிந்திக்காரர் எண்டு யோசிச்சுப் பார்த்தன். சரி வேற வழியில்ல என்பதால் இரவைக்கு சப்பாத்தியை எப்படி செய்யிறது எண்டு விளங்காத எல்லாச் சாப்பாட்டையும் செய்யிற சினேகிதி ஒருத்திக்கு போனடிச்சு விவரத்தைக் குறிச்சு வைச்சன்.

மத்தியானச் சாப்பாட்டை மாத்தவேண்டாமெண்டு பொடியன் சொன்னதால், வழமையான கறிகளைச் சமைத்து சோத்தைக் குக்கரில குறைச்சுப் போட்டன். எப்பவும் இரண்டு கோப்பை சோத்தைப் பரப்பி நாலைஞ்சு கறிகளை அள்ளிவிட்டு ஆற அமந்து சாப்பிட்டிவிட்டு இரண்டு மணிக்கு ஒரு "நாப்" எடுத்துப் பழகின எனக்கு இண்டைக்கு அரைக்கோப்பை சோத்தோட கொஞ்சமாக் கறியளையும் பாக்கேக்க விரதத்துக்கு சனிக்குப் படைச்ச மாதிரித் தெரிஞ்சுது. என்ன செய்யிறது.. மேயிற ஆட்டைச் சாப்பிட்ட அனகொண்டா பாம்பு மாதிரி இருக்கிற வயித்தைப் பாத்தால் இனிச் சனிபகவான் மாதிரி குறைச்சுத்தான் சாப்பிடவேணும் எண்டு அடக்கிக்கொண்டு இரண்டாம் தரம் போட்டுச் சாப்பிடலேல்ல. இப்பிடி இரண்டுநாள் போச்சுது. நாலு மணிக்கு வயிறு புகையிறமாதிரி இருக்கேக்கை பச்சைத்தண்ணியக் குடிச்சு புகைச்சலை அடக்கினன். பிரிட்ஜில இருந்த அல்வா என்னைப் பார்த்துச் சிரிச்ச மாதிரி இருந்திச்சு!

வேலையாக வந்த இவர், ஜிம்மில பதிந்ததாச் சொன்னார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரை ஆக்கினைப்படுத்தி "ஸ்போர்ட்ஸ்" கடைக்குப் போய் ஜிம்முக்கு உடுப்புகள் வாங்கினேன். உடம்பு குறையும் எண்டு நம்பிக்கை வந்ததால என்ரை சைசில் இருந்து இரண்டு குறைச்சுத்தான் வாங்கினன். இல்லையெண்டால் மெலிஞ்சாப் பிறகு தொளதொளவெண்டு உடுப்பைப் போட அது இறங்கி மானம் போடுமெல்லே..

அஞ்சாறு மணிக்கு போனால் இஞ்சை இருக்கிற தமிழ்ப்பொடியள் ஆரும் கண்டாலும் எண்டபடியால் ஜிம்முக்கு நாலு மணியளவில அடுத்தநாள் போனன். போய்ப் புதுசா வாங்கின உடுப்பைக் கஸ்டப்பட்டு ஒருமாதிரிப் போட்டுமுடிக்க உடம்மை இறுக்கின இறுக்கில ஜிம்மில ஓடாமலேயே உடம்பு வத்திவிடும் மாதிரி இருந்தது. கண்ணாடியில பாத்தால் எக்ஸசைஸ் செய்யாமலேயே வீட்டுக்கு போகவேண்டி வந்திடும் என்பதால் மனதைத் தைரியப்படுத்தி எக்ஸசைஸ் ரூமுக்குள்ள போனன். போய்ப்பாத்த அடுத்த நிமிசமே தலை லேசாச் சுத்திச்சுது. திரும்பின எல்லாப் பக்கத்திலயும் ஒரே எக்ஸசைஸ் மெசினா இருக்குது. எனக்கு வீட்டில இருக்கிற எக்ஸசைஸ் சைக்கிளை விட்டால் ஒண்டையும் தெரியாது.

சரி,, முதல்ல எக்ஸசைஸ் சைக்கிளில் ஓடுவம் எண்டு அதில ஏறிப் பத்து நிமிஷம் சில்லுகளை உருட்டினன். வேகமாக ஓடினால் மூச்சிரைக்கும் என்பதால் மெதுவாகவே சைக்கிள் ஓடினேன். பக்கத்தில இருந்த “டிரெட் மில்” இல ஒருத்தன் நாய் கலைச்சா ஓடுறது மாதிரி ஓடுறதைப் பார்த்தால் தெம்பும் தைரியமும் கூடவே பயமும் வந்தது. சரி, அவனை மாதிரி ஓடாவிட்டாலும், நானும் ஏறி ஓடிப் பாத்திட்டுத்தான் வீட்டை போறது எண்டு ஏறி ஓட வெளிக்கிட்டேன். அவசரத்தில வேகத்தைச் சரியாப் பாக்காம ஓட வெளிக்கிட்டதால் கால் சிக்குப்பட்டு விழப்போறன் எண்டு பயந்துகொண்டே ஓடிக்கொண்டிருந்தன். இரண்டு நிமிஷத்தில் எனக்கே தெரியாமல் மூச்சு இரைக்கத் தொடங்க, வாயால சத்தம் வேற வரத்தொடங்கீட்டுது. அங்கால நிண்டவன் என்ரை முனகலை ரசிக்கிறமாதிரி இருக்கு. எனக்கு ஆராவது வந்து இந்த இழவு மெசினை நிப்பாட்ட உதவினால்க் காணும் எண்ட நிலை. எண்டாலும் தொடர்ந்து இன்னும் இரண்டொரு நிமிஷங்கள் ஓடிக்கொண்டிருந்தேன். கண்கள் கிறுகிறுக்க ஏதோ சிவப்பாய்த் தெரிய அதைக் கையால் அமத்திப் பிடிக்க மெசின் டப்பெண்டு நிண்டிடுத்து. நான் மயங்கி விழாத குறை. எதுவும் நடக்காத மாதிரி மூச்சை இறுக்கிப் பிடித்து, மெதுவாக நடந்து கொண்டு வந்த தண்ணியை மடக் மடக் எண்டு குடித்து முடித்தேன். கனக்கத் தண்ணி குடித்ததால் வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருமாப் போல இருந்திச்சு. 'இண்டைக்கு இவ்வளவு எக்ஸசைஸும் காணும்' என்று மனதிற்குள் சொல்லியவாறே வீட்டுக்கு வெளிக்கிட்டன்.

வீட்டை வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்துவிட்டு இரவுச் சாப்பாட்டு அலுவலைப் பார்ப்பம் எண்டு படுத்தால் கண்ணுறங்கினதே தெரியாமல் நித்திரை வந்துவிட்டது. எழும்பிப் பார்த்தால் மணி நடுச்சாமம் 12:30 எண்டு காட்டுது. இவர் கட்டிலில நித்திரை. அட மனுசன் இரவுச் சாப்பாடும் இல்லாமல் பட்டினியாப் படுக்கிறாரே எண்டு கவலை வந்தது. கிச்சினுக்குப் போவம் எண்ட கட்டிலால இறங்கினால் காலைத் தூக்கி அங்கால இங்கால வைக்க ஏலாமக் கிடக்கு, ஆரோ இரும்பு கம்பியால காலில அடிச்ச மாதிரி சுள்சுள்ளெண்டு குத்திக் குத்தி வலிச்சுது. ஒருமாதிரி பல்லைக் கடிச்சுக் கொண்டு ஆடி அசைந்து கிச்சினுக்குள்ள போய் தண்ணியைக் குடிச்சன். திரும்பி பிரிட்ஜைத் திறந்தால் பாதி சாப்பிட்ட மட்டன் பிரியாணிப் பார்சல் உள்ளே இருந்தது. மனுசன் வேலையால வந்து என்னை எழுப்பாமல் வெளியால போய்ச் சாப்பாடு எடுத்திருக்கிறார் எண்டு தெரிஞ்சது. வேலைக் களைப்பில வந்த மனுசனைக் கவனிக்காதது என்ரை பிழைதானே எண்டு மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு படுக்கப் போகலாம் என்று திரும்பினால், வயிறு புகையிறமாதிரி இருந்திச்சு.

இண்டைக்கு ஜிம்மில ஓடின ஓட்டத்துக்கு இந்த பாதிப் பிரியாணி ஒண்டும் உடம்பைக்கூட்டாது எண்டு மூளை சொன்னதும் ஒரு செக்கனும் யோசிக்காமால் உடனேயே பிரியாணியை சூடுகூடக் காட்டாமல் சாப்பிடத் தொடங்கிவிட்டேன். சாப்பிடும்போதே, பொடியன் சொன்ன மாதிரி நாளையிலிருந்து சாப்பாட்டில கட்டுப்பாடா இருக்கவேணும். ஜிம்முக்கு போகவேணும் எண்டு சபதம் எடுத்துக்கொண்டன். சாப்பிட்டுவிட்டு மீண்டும் தண்ணியைக் குடிச்சாப் பிறகு வயித்தை தொட்டு பாத்தால் வயித்துக்குள்ள சோத்தோட ஆட்டுக்குட்டி இருக்கிற மாதிரி ஒரு பிரமை ..அப்படியே குமுறிக் குமுறி அழுகையா வந்திச்சுது.

Comments

பிரசித்த பதிவுகள்