ஊரும் உலகும்


கரணவாய்


கரணவாய் என்பது யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிராமம். இது கரணவாய் தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு என்று பல பிரிவுகளாக உள்ளது. தெற்கு எல்லையாக உப்புவெளியும், கப்பூதூக் கிராமமும், கிழக்கே கரவெட்டியும், மேற்கே வல்லை வெளி, இமையாணன், உடுப்பிட்டி போன்ற பகுதிகளும், வடக்கே கொற்றாவத்தை, பொலிகண்டி போன்ற இடங்களும் உள்ளன. தெற்கே போகும் வீதி வல்லை வெளியில் இருந்து துன்னாலை நோக்கிப் போகின்றது. இந்த வீதியில்தான் பிரபல்யமான சுருட்டு தயாரிக்கும் மண்டான் என்ற இடமும், உப்பங்களியும் உள்ளன. ஊருக்குக் குறுக்காகச் செல்லும் யாழ் பருத்தித்துறை வீதி (750 பஸ் இலக்கம்) தெற்கு, மத்தி பகுதிகளைப் பிரிக்கின்றது. இந்த வீதியில் உள்ள குஞ்சர்கடை எனும் சந்தியில் இருந்து இரு கிளைவீதிகள் தெற்காக கல்லுவம் நோக்கியும், வடக்காக உடுப்பிட்டி-வதிரி வீதியை நோக்கியும் பிரிகின்றன.

கரணவாய் என்ற பெயர் வர என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. முன்னர் இங்கு வசித்த சைவக் குருமார் பரம்பரை கணக்குப் பார்ப்பவர்கள் என்றும் அதனால் அவர்கள் கர்ண பரம்பரையினர் என்று அழைக்கப்பட்டதால் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு கர்ணவாய் என்று பெயரிட்டனர் என்றும் இதுவே பின்னர் கரணவாய் என்று மாறியது என கதைகள் உள்ளன. அத்தோடு பெயரை மேலும் சிறப்பாக்க கருணையம்பதி என்றும் அழைப்பார்கள்.

தோட்டங்களும், பனங்கூடல்களும், வயல்களும் அதிகமுள்ள கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாக உள்ளார்கள். அத்தோடு ஏறக்குறைய எல்லோருமே சைவர்களாகக்த்தான் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை. வாழ்பவர்கள் சைவர்களாக இருப்பதால் பல சைவக் கோயில்கள் நிறைந்துள்ள இடம். பிள்ளையார், அம்மன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிள்ளையார் கோவில்கள் திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்திபெற்றவை.

திருவிழாக்கள் சில குடும்பத்தாரினது என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் யாழ்ப்பாண சமூகத்திற்குரிய இறுக்கமான சாதிக்கட்டமைப்புக்கள் நிலவுகின்ற ஊராக இருப்பதால் அவை சாதியடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருந்தன. திருவிழாக் காலங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நாதஸ்வர, மேளக் கச்சேரிகளும், சின்ன மேளக் கூட்டுக்களும், பாட்டுக் கச்சேரிகளும் இரவிரவாக நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது கோவில் திருவிழாக்களுக்குப் போய்வந்த நினைவுகள் உள்ளன. எப்போதும் கிழக்கு வீதியில் சனக்கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறுவர்களாகிய நாங்கள் தேர்முட்டியில் அல்லது தீர்த்தக் கேணியில் நின்று விளையாடுவோம். பூசைமுடியும்போது மடப்பள்ளியில் பஞ்சாமிர்தத்தை அடிபட்டு வாங்கி நக்குவதும், இருட்டிய பின்னர் ஆளரவம் குறைந்த மேற்கு வீதியில் எமது எதிர்க் கோஸ்டிகளுடன் மல்லுக் கட்டி சண்டைபிடிப்பதுதான் தொழில்.

தொண்டமனாறு செல்வச்சந்நிதி, வல்லிபுரக் கோயில் திருவிழாக் காலங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து சக்கரைத் தண்ணியும், மோரும் வழங்குவது பெரிய இளைஞர்களின் திருப்பணி. அந்த வயது வரமுதலே ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டதால் அடியார்களுக்குத் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டவில்லை.

கரணவாயின் தென்பகுதியில் இருக்கும் உப்புக்கழி உருவானதற்கும் ஒரு கதை இருக்கின்றது. தற்போது வல்லைவெளியாக இருக்கும் பகுதியில் முன்னர் ஒரு நன்னீர் ஓடை இருந்ததாகவும் அதற்கு வல்லி நதி என்று பெயர் இருந்ததாகவும் கதைகள் உள்ளன. முன்னர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தொண்டைமான் பொருட்களைப் படகு வழியாகக் கொண்டு செல்ல இந்த ஓடையை ஆழ அகலப்படுத்தினானாம். அதனால் கடல்நீர் இந்த ஓடையினூடாக உட்புகுந்தது. நல்ல வெயில் காலத்தில் உவர் நீர் உப்பாக மாறுவதை உப்பு விளைவது என்று சொல்வார்கள். உப்பு ஒரு காலத்தில் பெரும் செல்வத்தைக் கொடுத்ததால் உப்புமால்களில் அவை குவிக்கப்பட்டு பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விளைந்த உப்பை தொண்டமனாறு பகுதிக்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட வீதி (தற்போதைய துன்னாலை-தொண்டமனாறு வீதி) உப்பு ரோட் என்றும் அழைக்கப்படுகின்றது.

உவர் நீர் உட்புகுந்து நிலத்துக்கடியில் உள்ள நன்னீரை மாசு செய்வதைத் தடுக்க பிற்காலத்தில் செல்வச்சந்நிதி கோயிலின் மேற்குப் புறத்தில் கடல் நீர் தடுப்பு அணை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அணையில் உள்ள கதவுகள் கோடையில் திறக்கப்பட்டால் உப்பங்கழியில் உப்பு விளையும். மாரி காலத்தில் மழை வெள்ளம் அதிகரித்தால் கதவுகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் கடலுக்கு செலுத்தப்படுவதும் உண்டு.

80 களின் நடுப்பகுதியில் இராணுவம் தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தில் வந்து முகாம் இடும்வரை ஒவ்வொரு கோடையிலும் உப்பு விளைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். நானும் சிறு பையனாக இருந்த காலத்தில் அப்பாவுடன் ஒருதடவை சென்று உப்பு அள்ளியிருக்கின்றேன். அன்று உப்பங்கழியில் பெரும் சனக்கூட்டம் திரண்டு நின்று உப்பை அள்ளி உரப்பைகளில் நிறைத்துச் சுமந்து சென்றார்கள். எங்கள் வீட்டிலும் இரண்டு உரப்பைகளில் உப்பு வந்து சேர்ந்தது. இது பல வருடங்களுக்கு உப்பு வாங்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்தது.

இராணுவம் கடல் நீர் தடுப்பு அணையின் கதவுகளை நிரந்தரமாக மூடியிருந்ததால் நான் வளரும் பருவத்தில் உப்பு ஒருபோதும் விளையவில்லை. எனினும் 90ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறி விடுதலைப் புலிகள் யாழ் திரும்பிய காலத்தில் கதவுகள் திறக்கப்பட்டு கடல் நீர் உள்ளே விடப்பட்டபோது உப்பு விளைந்தது. அப்போது பிரேமதாஸவுடனான பேச்சுக்கள் முறிந்து சண்டை ஆரம்பமான நாட்கள். உப்பு விளைந்திருந்தாலும் வானத்தில் குண்டுவீச்சு விமானங்கள் (சியாமாசெற்றியாக இருக்கவேண்டும்) அடிக்கடி பறந்து திரிந்து கொண்டிருந்ததால் ஊர்ச்சனம் உப்பு அள்ள தரவைப் பகுதிக்குச் செல்லவில்லை. எனது நண்பன் ஒருவன் (இப்போது கனடாவில் வசிக்கின்றான்) உப்பு அள்ளப் போவோமா என்று கேட்டான். வீட்டை விட்டு வெளியே போவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் நிறைந்த அக்காலத்தில் காற்சட்டை, சேர்ட் போட்டு வெளிக்கிட்டால் எங்காவது தூர இடம் போகின்றேன் என்ற சந்தேகம் வந்து கேள்விகள் வரும். அதைத் தவிர்க்க செம்மண் தூசு படிந்த கலரில் இருந்த சாரம் ஒன்றையும் பழுப்பு சேர்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நண்பனுடன் உப்பு அள்ளப் புறப்பட்டுவிட்டேன்.

உப்பங்கழியில் பாலைக் கொட்டி விட்டது போன்று உப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைய விளைந்திருந்தது. அதன் மேல் தெறிந்த சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசச் செய்தது. எங்கள் இரண்டு பேரைத் தவிர ஒரு சிலரே இடையிடையே அந்தப் பரந்தவெளியில் நின்றிருந்தோம். சரி வந்ததும் வந்தோம். உப்பை விரைவாக அள்ளிக்கொண்டு போகலாம் என்று இறங்கி உப்பைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து உரப்பைகளில் நிறைத்துக்கொள்ள ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் மூன்று நான்கு குண்டுவீச்சு விமானங்கள் பலாலிப் பக்கம் இருந்து வந்து தாழ்வாகப் பறந்து வட்டமடித்து எங்களை நோட்டம் இட்டன. எங்களுக்குப் பயமாக இருந்தாலும் ஓடி ஒளிய ஒரு இடமுமில்லாத வெட்டைவெளி என்பதால் செய்வதறியாது நின்றோம். வட்டமடித்த விமானங்களும் நாங்கள் உப்பை அள்ள வந்தவர்கள்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டது போன்று நாவற்குழிப் பக்கமாகத் திரும்பின. கொண்டு வந்த உரப்பைகள் நிறைந்துவிட்டதாலும் பொம்பர்களைப் பார்த்த கிலியாலும் நாங்கள் தரவையை விட்டு வீதியை நோக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து சேர்ந்தோம். அதன் பின்னர் உப்பு வெளியை இன்று வரை கண்ணால் காணவில்லை.

Comments

பிரசித்த பதிவுகள்