ஐரோப்பிய அந்திம வாழ்வு


நான் பார்த்த இரு உண்மைச் சம்பவங்கள். இரண்டிலுமே முதியவர்கள் ஆங்கிலேயர்தான். 

1. 

முதியோருக்கென பிரத்தியேகமாக உள்ள மருத்துவமனையொன்றில் எனது நண்பனின் தந்தை சிறிதுகாலம் இருக்கவேண்டியேற்பட்டபோது அவரைப் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம். 

எனது நண்பனின் தந்தையின் படுக்கைக்கு அடுத்ததாக இருந்த கட்டிலில் ஒரு ஆங்கிலேய முதியவர் இருந்தார். அவருக்குக் காது கேட்காது, கண் பார்வையும் சற்றுக் குறைவு, நடப்பதற்கும் சிரமம். அவரை எவருமே பார்க்க வருவதில்லையென்று நண்பனின் தந்தை கூறினார். நான் அங்கு நின்றபோது, அந்தக் கிழவர் தனது மாலைச் சாப்பாட்டை ஒருவாறு முடித்துவிட்டு, சற்று எழுந்து நடக்க ஆசைப்பட்டார். அவருக்குக் கட்டிலில் இருந்து கீழே காலை வைக்கவே 3 - 4 நிமிடங்கள் பிடித்தது. மெதுவாக கையைக் கட்டிலில் ஊன்றியவாறே நடக்க எத்தனிக்கத் தாதி வந்து சத்தமாக (காது கேளாதென்றபடியால்) அவரைத் திரும்பவும் கட்டிலில் சென்று படுக்குமாறு கூறினார். கிழவனும் பணிந்து நடப்பதுபோல் பாசாங்குசெய்து, தாதி போனவுடன் மீண்டும் தனது நடை முயற்சியில் ஏடுபட்டார். தாதி மீண்டும் வந்தாள். இப்படியே அவர் நடக்க முயற்சிப்பதும், தாதி வந்து அவரைப் படுக்க வைக்க முயற்சிப்பதுமாகப் நேரம் கழிந்தது. 

கிழவர் அதிகம் ஆசைப்படவில்லை. தனது கட்டிலைச் சுற்றி ஒருதடவை நடந்தால் போதும் என்றுதான் ஆசைப்பட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அவருக்கு உதவிசெய்யத் தோன்றியது. எனவே அவர் அடுத்தமுறை நடக்க எத்தனித்தபோது உதவிக்குச் சென்றேன். தாதி அவசரமாக வந்து எனக்கு நல்ல ஏச்சுத் தந்தாள். முதியவர் விழுந்து உடைந்தால் தங்களுக்குத்தான் பிரச்சினை எனது தாதியின் வாதம். அதிலும் நியாயம் உள்ளதாகப்பட்டது. 

வயது முதிர்ந்த காலத்தில் மேற்குலகில் வசதிகள் இருந்தாலும், தனியே வாழக்கூடாது என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன். 

2. 

இது எதிர் வீட்டில் குடியிருந்த கிழவியைப் பற்றியது. கிழவிக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். தனியாகத்தான் வசித்து வந்தார். பிள்ளைகள் தூர இடங்களில் வசிக்கின்றனர். எப்போதாவது வருவர், வீட்டைச் சுத்தம் செய்வர், திரும்பிப் போய்விடுவர். 

கிழமைநாட்களில் கவுன்சிலில் இருந்து முதியோரைப் பராமரிக்கும் வண்டி வரும், கிழவியை அழைத்துச் சென்று, பிற்பகலில் மீண்டும் கொண்டுவந்து விடும். மாலை நேரங்களில் பராமரிப்பு வேலை செய்யும் கறுப்பினப்பெண் ஒருத்தி வந்து உணவைக் கொடுத்துவிட்டுச் செல்வாள் (இதுவும் கவுன்சிலின் சேவை என்றே நினைக்கிறேன்). 

ஒருதடவை பராமரிப்புப் பெண் வந்து கதவைத் தட்டியும் கிழவி திறக்கவில்லை. கிழவிக்கு ஏதாவது நடைபெற்றிருக்கலாம் என்று நினைத்து அயலாரின் முயற்சியுடன் பொலிஸும், தீயணைப்புப் படையும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பின்கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, கிழவி கீழே இறங்கமுடியாமல் படுக்கயறையிலேயே இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், கிழவியின் வீட்டுத் திறப்பு எப்போதும் மிதியடிக்குக் கிழேயே இருக்கும். பராமரிப்புப் பெண் வந்து இலகுவாகத் திறந்து உணவைப் பரிமாறிவிட்டுப் போய்விடுவாள். 

சில வாரங்களுக்கு முன்னர் திடீரென இரட்டைக் கண்ணாடி பொருத்தும் நிறுவனமொன்றின் வண்டி வந்து கிழவியின் வீட்டுக்கு கண்ணாடிகளை மாற்றின்னர்கள். கிழவி குளிர்காலத்தில் கஸ்டப்படாமலிருக்கப் பிள்ளைகள் இரட்டைக் கண்ணாடி பொருத்துகின்றனர் என்று நான் நினைத்தேன். 

தற்போது வீடு திருத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அயல் வீட்டுக்காரரிடம் கிழவிக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, கிழவி சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பிள்ளைகள் வீட்டை விற்றுப் பணத்தைப் பங்கிடப் போவதாகவும் அயல் வீட்டுக்காரர் கூறினார். தற்போது, தமிழர்களே அதிகம் வந்து வீட்டைப் பார்வையிடுகின்றனர். எப்படியும் ஒரு தமிழ்க்குடும்பம் வந்துவிடுமென்றே நினைக்கிறேன்.

Comments

வருகிறோம், ஆமை வேகத்தில் :-)
sukan said…
//தற்போது, தமிழர்களே அதிகம் வந்து வீட்டைப் பார்வையிடுகின்றனர். எப்படியும் ஒரு தமிழ்க்குடும்பம் வந்துவிடுமென்றே நினைக்கிறேன்.//

கிழவியின் கதி தான் நாளை எங்களுக்கும்.

இதை படித்ததும் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு வயதானவருக்கு ஆறு பிள்ளைகள். கணவர் இறந்து விட்டார். ஆறு மக்களும் ஐரோப்பாவிலும் கனடாவிலும். இளைய மகளிடம் தான் தாய் இருக்க வேண்டும். மூத்த மகனிடம் தான் இருக்க வேண்டும் என்று சண்டை சச்சரவு வந்து இறுதியில் முதியோர் இல்லத்தில் விட முடிவெடுத்தனர். பின்னர் அதுவும் கொளரவப் பிரச்சனை என்று தாயை கைதடிக்கு அனுப்பி ஆறு பிள்ளைகளும் அவவுக்கான செலவை பிரித்து அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.

பிரசித்த பதிவுகள்