உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும்!





கொரொனோ வைரஸ் (வாய்க்குள் நுழையாத விஞ்ஞானப் பெயர் 2019-nCoV) கடந்த டிசம்பர் மாதம் மத்திய சீன ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் வூஹான் நகரில் உள்ள உள்ளூர் கடலுணவு/இறைச்சி சந்தைகளில் விற்கப்பட்ட (கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட) விலங்குகளில் இருந்தே பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றது. இன்றைய நாள்வரை 636 பேருக்குமேல் மரணித்தும், 36,000 பேருக்கு மேல் தொற்றுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.
எனினும் அதன் தொற்றுவீதம் எப்படி இருக்கும், எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் கொரோனா வைரஸ் உருவான சீனாவிடமோ உலக சுகாதார சபை (WHO) யினடமோ இதுவரை இல்லை.
சீனாவில் பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று இருந்த தாயிடம் இருந்து கருப்பைக்குள் இருக்கும்போதே பரவியதா அல்லது குழந்தை பிறந்த பின்னர் பரவியதா என்பதும் தெரியவில்லை. இவையெல்லாம் எவரையுமே பீதியூட்டக்கூடிய செய்திகள். மனித குலத்திற்கே சவாலான சோதனையான காலகட்டம்!
இப்படியான நெருக்கடி மிகுந்த வேளைகளை ஒரு சிலர் தமது சுயவிளம்பரங்களுக்கும், தமது பண்பாட்டு, இன, மத மொழி அடையாளங்களை பெருமைப்படுத்துகின்றோம் என்று நினைத்து சிறுமைப்படுத்துவதற்கும், அதற்கும் மேலால் பீதிக்குள்ளான மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
எதையும் எப்படியும் எழுதவும், பரப்பவும் வசதியுள்ள பரபரப்பு மிகுந்த சமூகவலை ஊடகங்கள் சுண்டுவிரலில் இருப்பது இப்படியான புரட்டுக்களை கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட அதிவேகமாக பரப்ப உதவுகின்றது.
எதையும் வாசித்தபின் அல்லது காணொளிகளைப் பார்த்தபின் பொறுமையாக அதன் உண்மைத்தன்மை அறிந்தபின் forward செய்யாமல் ‘என்கடன் பகிர்ந்து மகிழ்வதே’ என்று உடனடியாகவே மற்றவர்களுக்கு அனுப்பும் மந்தைக்கூட்டங்கள் இருக்கும்வரை புரளிகள் வைரலாவதையும் தடுக்கமுடியாது!
கொரோனோ வைரஸ் பற்றிய புரளிகள் சில:
  • இணையத்தில் உலவும் சதிக்கோட்பாளர்கள் கொரோனா வைரஸ் வூஹானில் இரகசியாமாக (!) உள்ள உயிரியல் ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியே பரவியதாகச் சொல்வது. இதனை அமெரிக்க வெளியுறவுத் துறை மறுதலித்து மலினச் செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டுள்ளது.
  • இலண்டன் Mitcham பகுதியில் சீன உணவகத்தில் வாத்து வறையும் குழைசோறும் சாப்பிட்ட தமிழர் ஒருவர் மரணம் என்று பெயர், ஊர், வயதெல்லாம் சொல்லி வாட்ஸப்பில் உலவவிட்டது. அது உண்மையா என்று அங்கலாய்த்தவர்களும் இறந்தவரின் பிள்ளைகளுக்காக வருந்தியோரும் பலர்!
  • கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உடலில் சாணத்தைப் பூசி கோமியத்தைக் குடிக்கவேண்டும் என்று இந்தியாவில் இந்து மகாசபை தலைவர் கருத்துச் சொன்னது.
  • இலங்கையில் பிக்கு ஒருவர் 2600 வருடங்களுக்கு முன்னரே புத்தபகவான் கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்தமையால் பாம்பு, குதிரை, வௌவால், பன்றி உள்ளிட்ட மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் என்று உளறியது.
  • அகத்தியர் ஓலைச்சுவடிகளில்/சங்கப்பாடல்களில் அப்பவே கொரோனா வைரஸின் வருகையைப் பற்றி குறிக்கப்பட்டது என்று எவரோ நையாண்டியாக எழுத அதை தலையில் தூக்கிக்கொண்டாடி அப்பவே தமிழர்கள் முக்காலமும் தெரிந்தவர்கள் என்று பிதற்றும் பித்துக்குளிகள்
  • கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத சூரணங்கள், குளிகைகள் விற்பனைக்கு உள்ளன என்று இலங்கையில் போலி விளம்பரங்கள் செய்யப்படுவது
  • இன்னும் பல....

இந்தப் புரளிகளினால் பீதியடைந்து பலநாடுகளில் சீனர்களைப் பார்த்தாலே மற்றவர்கள் ஓடுகின்றார்கள். பிரித்தானியாவில்கூட சீனர்களின் China Town பகுதி உணவகங்களிக்கும், வியாபார நிலையங்களுக்கும் மக்கள் செல்வது குறைவடைகின்றது.
பாடசாலைகளில் சீன மாணவர்களுடன் சேராமல் இருக்குமாறு பிற இனத்தினர் தமது பிள்ளைகளுக்கு சொல்வதாகவும் தகவல் உள்ளது.
உலகமே குழப்பத்தில் இருக்கின்றபோது, அதனை இன்னமும் சிக்கலாக்க இணையமும் சமூகவலைத் தளங்களும் புரளிக்கொள்ளிகளால் நிறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்காது என்று தட்டிக் கழிக்கலாமா?
இல்லை. எப்போதும் முன்னெச்சரிக்கையுடனும் நிதானமுடனும் இருக்கவேண்டும்.
  • அரசாங்கங்கள் கூறும் விடயங்களை செவிமடுக்கவேண்டும்.
  • பொறுப்புணர்வு உள்ள பத்திரிகைகள், BBC போன்ற உலக ஒலி/ஒளிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் செய்திகள், தகவல்களை மாத்திரம் நம்பவேண்டும்.
  • இணையத்தில் உலவும் செய்திகளுக்கு source என்னவென்று சரிபார்க்கவேண்டும்.
  • நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்ளாமல் விடவேண்டும். அவற்றைக் கூடியவரை forward பண்ணாமல் இருக்கவேண்டும்!


கொரோனா வைரஸ் என்பது சாதாரண தடிமன் வைரஸ் போன்றதுதான். அதனால் தடிமன், காய்ச்சல் போன்ற சாதாரண குணங்குறிகள் கொரோனா வைரஸால் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு இருக்கலாம். சிலவேளை தொற்றியிருந்தாலும் குணங்குறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நுரையீரல், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மரணித்துள்ளனர்.
திடகாத்திரமானவர்கள் தொற்றுக்கு ஆளாகினாலும் மரணிப்பார்கள் என்றில்லை. தொற்றுக்கு ஆளாகியவர்களினதும் இறந்தவர்களினதும் விகித்தைப் பார்த்தாலே இது விளங்கும்.
கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் epidemic (குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரம் பரவுதல்) ஆகவே உலக சுகாதார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் 99 வீதத்திற்கு மேல் சீனாவில் என்பதால் epidemic ஆக உள்ளது.
சீனாவுக்கு வெளியே அதிக நாடுகளில் பெருமளவு பேருக்கு தொற்று ஏற்படும்போது pandemic (பிரதேச வேறுபாடுகள் இன்றி பல நாடுகளுக்கும் பரவுதல்) ஆக அறிவிக்கப்படலாம்.
தொற்றும் வீதத்தைக் கட்டுப்படுத்தவே பயணக கட்டுப்பாடுகளை வூஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் சீனா அமுல்படுத்தியுள்ளது.
ஒரு குடும்பதைச் சேர்ந்த ஒருவர் மட்டும்தான் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை அத்தியாவசியமான பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்தும், வெளிநாடுகளுக்கான விமானப்பயணங்களை நிறுத்தியும் மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும் தொற்றுவீதம் கட்டுக்குள் இன்னமும் வரவில்லை.
வைரஸுக்கு மருந்து இல்லை என்பதும் vaccine (தடுப்பூசி) மூலம் மாத்திரமே புதிதாகப் பரவுவதை தடுக்கலாம் என்பதும் அடிப்படை மருத்துவ அறிவு உள்ளவர்களுக்கு தெரிந்த விடயம்.
கொரோனா வைரஸின் genetic sequence ஐ சீனா வெளியிட்ட இரு வாரங்களுக்குள்ளேயே இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவத் துறையினர் vaccine candidate ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுபோலவே Oxford பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் vaccines ஐ துரிதமாகக் கண்டுபிடிக்க ஓட்டம் நடக்கின்றது. இவை அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி humans trials க்கு வர பல மாதங்கள் எடுக்கலாம்.
தற்போது தாய்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு HIV எயிட்ஸையும் fluஐயும் கட்டுப்படுத்தும் மருந்துகளை high doses இல் கொடுத்தபோது பத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர் என்பதும் நம்பிக்கைதரும் செய்தி.
இந்த நம்பிக்கைக்கீற்றுகள் இருப்பதனால் எத்தனையோ சவால்களைச் சந்தித்த மனிதகுலம் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்தும் விரைவில் மீண்டுவரும் என்று உறுதியாக நம்பலாம்!
அதுவரை மிகவும் எளிமையான விடயங்களையே நாம் கடைப்பிடித்தாலே போதுமானது.
  • தும்மும்போதும் இருமும்போதும் வாயை கூடியவரை மூடியிருத்தல் அல்லது முழங்கையால்/ paper tissues ஆல் மூக்கையும், வாயையும் மூடுதல்.
  • Paper tissues ஐ குப்பைத்தொட்டிக்குள் உடனடியாகவே போட்டு மூடுதல்.
  • கைகளையும், முகத்தையும் அடிக்கடி கழுவுதல். முடிந்தால் தொற்றுநீக்கி சவர்க்காரம் பாவித்தல்.
  • தடிமன், இருமல் உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீற்றராவது இடைவெளி வைத்திருத்தல்.


Comments

பிரசித்த பதிவுகள்