முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...




அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴

இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது.  சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. 

ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. 

தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! 

தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். 

இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது!

அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று  எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும்.

நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! 

நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது.

சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன்.😊

முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. 

இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. 

சிங்களவர்களும், வட இந்தியர்களும்,   ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது!

எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான்.

நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால்  (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்!

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா  குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்!

அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு.  தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும்.

மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும்.

இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு.

கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை.

முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்:

 [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்]

முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்:

 [முதற்பெயர்] [குடும்பப்பெயர்]


ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. 

அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன.

Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம்.  அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம்.

அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது!

இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம்.

ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen);  அவரது குடும்பப்பெயர் (nomen);  அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen).

அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும்.

ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்!

இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது.

ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர்.

எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர்.

இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது.

எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். 

பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது.

பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். 

ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன்.  இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது!

ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன்.

இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! 

ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்!

ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது!

மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். 

எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள்.

தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.




Comments

பிரசித்த பதிவுகள்