ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!

எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால்,  சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார்.

விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை. Humans are explorers என்று சொன்னாலும் பிள்ளைகளுக்கு தெரியாத இடங்கள் எல்லாம் போய் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் கிடையாது.  வீட்டில் இருந்து பிளேஸ்ரேசனின் games விளையாடவும், cousins உடன் சேர்ந்து வெட்டியாகப் பொழுதைப் போக்கவும்தான் நாட்டம் அவர்களுக்கு. ஆனால் கனடாவுக்கு போவதென்றால் மட்டும் அங்கிருக்கும் cousins உடன் கும்மாளம் அடிக்கலாம் என்று எப்போதும் முன்னுக்கு நிற்பார்கள்! சம்மரில் விமான ரிக்கற் ஏறும் விலைக்கு அடிக்கடி அதிகம் செலவழித்து கனடா போகவும் மனம் ஒப்பவில்லை.

ஒருவார விடுமுறை என்பதால் நல்ல வெய்யில் கொளுத்தும் மால்ராவுக்குப் போகலாமா, சுவிற்சலாந்துக்கு காரில் போய்ச்சுற்றலாமா, உள்ளூர் வேல்ஸில் போய் செம்மறியாடு, மாட்டு மந்தைகளையும், பச்சைப்புல்வெளிகளையும் பொடிநடையில் பார்க்கலாமா என்றெல்லாம் விவாதித்து,  எகிறும் செலவையும், கடும்வெய்யில் அல்லது கடும் மழை வந்து குழப்பும் என்ற தயக்கத்திலும் நாலு நாட்கள் ஒல்லாந்து தேசம் மட்டும் போய் ஆம்ஸ்டர்டாம் நகருக்குள்ளால் ஓடும் கால்வாய்களையும், ரொட்டர்டாமுக்கு அண்மையிலுள்ள காற்றாலைகளையும் பார்த்து வரலாம் என்று தீர்மானித்தோம். பிள்ளைகளுடன் போவதால் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்குப் பகுதி விலக்கப்பட்ட வலயத்திற்குள் வந்துவிட்டது. ஆனாலும் பகலிலாவது ஒரு தடவை தனியே போய் எட்டிப்பார்க்கலாம் என்று மனம் குறுகுறுத்தது!

முதல்நாள் பிரகாசமான வெயில். ஆனால் சுட்டெரிக்கும் அளவிற்கு வெப்பம் இருக்கவில்லை. கால்வாய்களினூடான சுற்றுக்கு ரிக்கற்றை வாங்கிவிட்டு நேரம் வரும்வரை கால்வாய்கள் நிறைந்துள்ள தெருக்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிந்தோம். எமது படகுக்கான நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே வரிசைக்குப்போனால் எமக்கு முன்னர் ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினர் மாத்திரமே நின்றிருந்தனர். வந்த படகொன்றில் ரிக்கற்றைக் காட்டி ஏறி நகரின் அழகான பகுதிகளூடாக பயணித்துக்கொண்டிருந்தோம்.




இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் நாஜிகளிடம் பிடிபடாமல் ஒளிந்திருந்த ஆன் ஃப்ராங் எனும் பதினான்கு வயது யூதச் சிறுமியின் டயறி எனும் நூலை 90 களில் படித்திருந்தேன். அவர் ஒளிந்திருந்த வீட்டினை தற்போது காட்சியகமாக்கியுள்ளனர். அதைப் பார்ப்பதும் எமது itinerary இல் இருந்தது. அதனருகே படகு வந்தபோது எமது ரிக்கற்றைக் காட்டி அங்கு வெளியேறி மீண்டும் பிற்பகலில் படகுப்பயணத்தைத் தொடரலாமா என்று கேட்டேன். ரிக்கற்றை வாங்கிப் பார்த்த படகோட்டி நாங்கள் பிழையான படகில் உள்ளதாகச் சொல்லி, எங்களை ஏறிய இடத்தில் திரும்பவும் விட்டுவிடுவதாகச் சொன்னார். அவர் சரியாக ரிக்கற்றைக் கவனிக்கவில்லை என்பதால் தன்னில்தான் தவறு என்று எங்களைத் தொடர்ந்தும் படகில் இருக்க அனுமதித்தார். அவரின் நல்லெண்ணத்தில் அந்த கால்வாய்ச் சுற்றுப் பயணம் எமக்கு இலவசமாகக் கிடைத்தது!

நாம் வாங்கிய ரிக்கற் சற்று விலைகூடிய கால்வாய்ச் சுற்றுலாவுக்கானது. எனவே மீண்டும் ரிக்கற் வாங்கிய இடத்திற்குப்போய் நாம் சுற்றித் திரிந்ததால் படகைத் தவறவிட்டுவிட்டோம்; அடுத்த படகில் இடம் இருந்தால் போகமுடியுமா என்று கவுண்டரில் இருந்த அழகான டச்சுப் பெண்ணிடம் கேட்டேன். இல்லை என்று கதைக்க ஆரம்பிக்கும்போதே, நாம் செலுத்திய விலை அதிகம் என்பதால் தயவு பண்ணுங்கள் என்று அப்பாவி வேடம் போட்டு அவளின் மனத்தை மாற்றி அடுத்த படகுப் பயணத்திற்கு அனுமதி வாங்கினேன். முன்னர் போன கால்வாய்களினூடாகப் போகாமல் நகரின் மிகவும் அழகான பகுதிகளினூடாக படகோட்டியின் நேர்முக வர்ணனையுடன் படகுச் சவாரி நன்றாகவே அமைந்தது. கொடுத்த பணத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியில் பயணம் திருப்தியாகவும் இருந்தது.

இரண்டாவது நாள் ஜூலை 31. ஆடி அமாவாசை என்று அக்கா மெசஞ்சரில் தகவல் முன்னதாகவே அனுப்பியிருந்தார். எனவே, காலை உணவிற்கு பிள்ளைகளை இணையோடு அனுப்பிவிட்டு ஆறுதலாக குளித்து முழுகிப் போகத் தீர்மானித்தேன். சாமி, விரதம் என்று நம்பிக்கைகள் இல்லையென்பதால் திவசம் எல்லாம் கொடுப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதை மறுப்பதில்லையாகையால் அம்மாவுக்காக சித்திரைப் பெளர்ணமியிலும், அவரது திதி நாளான வைகாசி பெளர்ணமி அன்றும், அப்பாவுக்காக அவரது திதியன்றும், ஆடி அமாவாசையிலும் விரதம் இருப்பதும் மச்சம் சாப்பிடாமல் இருப்பதும் வழமை. எங்களூர் விரதப்படி தோய்ந்த பின்னர் ஒரு கப் சூடான தேநீர் அல்லது கோப்பி குடிக்கலாம். அதற்குப் பின்னர் நீர்க்கடன் செலுத்தி, உணவு படைத்த பின்னர்தான் சாப்பிடலாம். இடையில் எதுவும் குடிக்காமலும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும்.

கோப்பி குடிக்கலாம் என்று கீழே போனால் அங்கு ஹொட்டேல் பணியாளர்கள் ஆணும் பெண்ணும் இருவராக இணையுடன் ஃபோனைப் பார்த்தவாறு மிகவும் சீரியஸாக உரையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இணை பதற்றமாக கதைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முன்னால் இருந்த பிள்ளைகளின் முகத்தில் பதற்றத்திற்கான எதுவித அறிகுறிகளும் இல்லை. அவர்கள் இருவரும் வெளியிடங்களையும் தங்கள் வீடுபோன்று பாதுகாப்பான இடம் என்று பொருட்களை கவனமாகப் பார்ப்பதில்லை என்பதால் மூத்தவனைப் பார்த்து ‘உனது ஃபோன் தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அம்மாவின் handbag தான் களவுபோய்விட்டது. அதற்குள் அவரது ஃபோனும் இருந்ததால் அது எங்குள்ளது என்று எனது ஃபோனில் உள்ள Life360 app மூலம் track பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்’ என்று சாதாரணமாகச் சொன்னான். நிலைமையின் விபரீதம் உடனடியாகவே புரிந்தது.

...

விடுமுறைக்கு ஆம்ஸ்டர்டாம் போவது பற்றி வேலையிடத்தில் உரையாடியபோது உடன் பணிபுரியும் மலையாளி தான் முன்னர் ஆம்ஸ்டர்டாமில் வேலை செய்ததாகச் சொன்னான். அங்கு பிக்பொக்கற் திருடர்கள் அதிகம் என்பதால், wallet , phone போன்றவற்றை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னான். நெருக்கடி மிகுந்த இலண்டனிலும் திருடர்கள் அதிகம் என்பதால் wallet , phone எப்பவும் எனது ஜீன்ஸின் முன் பொக்கற்களிலேயே வைத்திருப்பேன். எப்பவும் timer interrupt மாதிரி கை தானாகவே ஒரு சீரான இடைவெளியில் பொக்கற்றுகளைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும். அத்துடன் எவரையும் உடலில் உரசுமாறு பயணிப்பதில்லை என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் இணையையும் பிள்ளைகளையும் கூடியவரை பெறுமதியானவற்றைக் காவவேண்டாம் என்றும் கூட்டத்தில் கவனமாகவும் இருக்கச்சொல்லி இருந்தேன். நாங்கள் ஆம்ஸ்டர்டாம் சென்றல் ரயில் நிலையத்திற்கு அண்மையாக சற்று விலையான Double Tree Hilton ஹொட்டேலை தங்ககமாக ஏற்பாடு செய்ததால் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தது.
.
இந்த இடத்தில் ஒருவரை ஒருவர் கவனிக்கும் GPS location tracking apps ஐப் பற்றியும் சொல்லவேண்டும். முன்னர் வேலையிடத்து நண்பன் ஒருவன் Life360 app குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் எங்கு நிற்கின்றார்கள் என்று பார்த்துக்கொள்ளவும், phone தொலைந்தால் கண்டுபிடிக்கவும் உதவும் என்று சொல்லியிருந்தான். அவனது நண்பனின் மனைவியின் ஃபோன் கடற்கரையில் தொலைந்தபோது Life360 app இன் உதவியுடன் track பண்ணி அருகில் இருந்த ஹொட்டேல் reception இல் யாரோ நல்லவர் கொடுத்திருந்ததால் இலகுவாக மீட்ட கதையைச் சொல்லியிருந்தான்.

அன்றே  Life360 app ஐ மூத்தவனினதும், இணையினதும், என்னுடைய ஐபோன்களில் டவுன்லோட் செய்து ஆளையாள் எங்கேயிருக்கின்றார்கள் என்று இடையிடையே கவனித்துக்கொள்வதுண்டு. மேலும் இந்த app battery life ஐயும் காட்டும். மூன்று நான்கு நாட்கள் போய் வந்த இடங்களையும், மாதாமாதம் பணம் செலுத்தினால் இன்னும் பல தகவல்களையும் தரும். ஆனாலும் இது ஒரு Big Brother கண்காணிப்பு போல சிலருக்கு படலாம். மேலதிகமாக Find iPhone app இல் எல்லா iOS devices களையும் track பண்ணுவதுண்டு. இந்த இரு அப்ஸின்  tracking accuracy இல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆயினும் mobile data ஐ off செய்துவிட்டால் Life360 app மூலம் கண்காணிக்கமுடியாது என்பது ஒரு குறைபாடே. சில நேரம் மூத்தவன் mobile data ஐ off செய்து கண்காணிக்க முடியாதவாறு செய்துமுள்ளான். Mobile data ஐ off பண்ணிலால் இளையவன் பாவிக்கும் data support இல்லாத Nokia brick phone க்கு மாற்றிவிடுவேன் என்று அவனை எச்சரித்திருந்தேன்.
.

என்னை ஹோட்டல் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு எனது ஃபோனிலிருந்தும் உடனடியாக இணையின் ஐபோன் எங்கு இருக்கின்றது என்று Life360 app ஐத் திறந்து பார்த்தால் அதன் GPS புள்ளி ஹொட்டேலில் இருந்து ஒன்றிரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் வாகனமொன்றின் வேகத்தில் விரைவாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. வேகத்தைப் பார்த்தால் இணையின் ஹாண்ட்பாக் காரில் அல்லது மோட்டார் பைக்கில் வந்த ஒருவரால்தான் அபகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியது. ஹாண்ட்பாக் அவ்வளவு விரைவில் கனதூரம் போய்க்கொண்டிருப்பதால், எடுத்தவர் தவறுதலாக எடுத்திருக்கமாட்டார்; இடம் வலம் தெரியாத ஆம்ஸ்டர்டாம் நகரில் அது திரும்பவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று மனம் துணுக்குற்று ஏற்கனவே வரண்டிருந்த தொண்டை மேலும் உலர்ந்தது.

ஹொட்டேல் பணியாளர்கள் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளதாயும் அவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எங்களை ஆசுவாசப்படுத்தினார்கள். எங்களை சமாதானப்படுத்த சில ஆறுதல் வார்த்தைகளோடு ஏதாவது குடிக்கின்றீர்களா என்று தொழில்முறைப் பரிவுடன் கேட்டார்கள். இணையின் ஃபோன் GPS புள்ளி நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு போலிஸ் விரைந்து வரவில்லையே என்று மனம் அந்தரித்தது.

“எப்படி தோளில் எப்பவும் தொங்கும் ஹாண்ட்பாக் களவு போனது?” என்று இணையிடம் கேட்டேன். பிள்ளைகள் இருவரும் மேசையில் காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் அவர்களை மேசையில் இருந்த ஹாண்ட்பாக்கைச் பார்க்கச் சொல்லிவிட்டு தான் உணவை எடுக்கச் சென்றதாகவும் சொன்னார். திரும்பிவந்து பார்த்தபோது ஹாண்ட்பாக்கைக் காணவில்லை. அதை யார் எடுத்தார்கள் என்றும் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றார்.

இளையவன் தங்களுக்கு அருகில் இன்னொருவர் உணவு உண்டுகொண்டு இருந்ததாகவும், அவர் எடுத்திருக்கலாம் எனவும் சொன்னான். பார்த்தாயா என்று கேட்டதற்கு தோள்களைக் குலுக்கி இல்லை என்றான். மூத்தவன் முன்னுக்கு இருந்தாலும் அவன் எப்போதும் ஃபோனையே  நோண்டிக்கொண்டிருந்திருப்பான். அக்கம்பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்திருக்கமாட்டான் என்பதால் நான் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. பிள்ளைகள் இருவர் முகத்திலும் தாங்கள் ஹாண்ட்பாக் களவுபோனதற்கு பொறுப்பில்லை என்ற எண்ணம் தெளிவாகத் தெரிந்தது. அவர்களிடம் மேலும் கேட்பதற்கு எதுவுமில்லை என்பதால் இணையிடம் “உன்னுடைய பொருட்களை நீதானே பார்க்கவேண்டும். பிள்ளைகளை நம்பி பொது இடத்தில் விடலாமா?” என்று முறைத்தேன். இணையின் ஃபோன் GPS புள்ளி அப்போது பெரிய வீதியொன்றில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

ஹொட்டேல் பணியாளர்கள் இருவரும் போலிஸ் receptionக்கு எந்த நேரத்திலும் வருவார்கள் என்று அங்கு அழைத்துச் சென்றார்கள். காலை உணவருந்திக்கொண்டிருக்கும் மற்றைய விருந்தினர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்று எங்களை receptionக்கு அனுப்புகின்றார்கள் எனத் தோன்றியது. நாங்கள் receptionக்கு போன சில வினாடிகளிலேயே போலீசார் அங்கே வந்தனர். எல்லா அவநம்பிக்கைகளும் உருகிவழிந்து ஹாண்ட்பாக் கிடைக்க வழி பிறந்த உணர்வு ஏற்பட்டது. உடனடியாகவே போலீசாரிடம் நடந்தவற்றை சுருக்கமாக ஹோட்டல் பணியாளர்கள் டச்சில் சொல்லி, எனது ஃபோனில் இணையின் ஃபோன் GPS புள்ளி நகர்வதைக் காட்டினர். நான் உடனடியாகவே தாமதிக்காமல் பறிகொடுத்த உணர்வையும் பதற்றத்தையும் ஒருசேர முகத்தில் காட்டி “இப்போதே போனால் ஹாண்ட்பாக்கை திரும்பவும் எடுத்துவிடலாம்” என்று பரபரத்தேன். களவு எடுத்தவன் ஃபோனை switch off பண்ணினால் தொடர்ந்தும் track பண்ணமுடியாது என்ற அவசரம் என்னிடம் இருந்தது.

வந்த இரு போலிசாரில் ஒருவன் நடுவயதினனாக சீனியராகவும், இளவயதினன் மற்றவனின் சொல்லைக்கேட்டு நடக்கும் ஜூனியராகவும் பட்டது. நடுவயதினன் எடுத்த எடுப்பிலேயே “ஹாண்ட்பாக்கில் பாஸ்போர்ட் இருந்ததா?” என்று கேட்டான். எப்போதும் போலிஸுக்கு உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டுமாகையால் “அவை பத்திரமாக ரூம் லொக்கரில் இருக்கின்றன; ஆனால் கிரெடிட் கார்ட்ஸ், ஐபோன், மற்றும் சில பெறுமதியானவை ஹாண்ட்பாக்கில் இருந்தன” என்று இணையும் நானும் சேர்ந்தே பதிலளித்தோம். உரையாடலை மேலும் நீட்டாமல் முகத்தில் பதட்டத்தைக் மேலும் காட்டி “இப்பவே போகமுடியுமா?” என்று திரையில் நகரும் GPS புள்ளியைக் சுட்டிக்காட்டிக் கேட்டேன். இப்படியான களவுகளை அதிகம் பார்த்தாலும், ஹாண்ட்பாக்கை track பண்ணக்கூடிய live crime ஆக இருந்ததால் போலிஸாருக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இளைய போலிஸ் காரைச் செலுத்த நான் பின்சீற்றிலும் நடுவயதுப் போலிஸ் முன்சீற்றிலுமாக ஹாண்ட்பாக்கையும் அதை எடுத்தவரையும் பிடிக்கவெளிக்கிட்டோம்.  Life360 app இல் எப்படி track பண்ணுவது என்று விரைவாக விளங்கப்படுத்தி எனது ஃபோனை நடுவயதினனிடம் கொடுத்தேன். அவனுக்கு Life360 app பரிச்சயமில்லாமல் இருந்தது அவன் track பண்ணச் சிரமப்படுவதில் புரிந்தது. மீண்டும் சில அடிப்படை zoom control களைக் காட்டி எனதும் இணையின் ஃபோன்களின் GPS locations ஐத் திரையில் கொண்டுவந்து நம்பிக்கையூட்டினேன்.  ஹாண்ட்பாக் பிரதான வீதியைவிட்டு உள்வீதிகளில் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த இடத்திற்குச் செல்ல இன்னும் பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றும் திரையில் காட்டியது.

போலீஸ்கார் மிக வேகமாக நீலவர்ண flashing lights, sirens உடன் சிவப்புச் சிக்னல்களில்கூட நிறுத்தாமல் போகும்; விரைவில் ஹாண்ட்பாக் திருடனைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற உடல் புல்லரித்தது. ஆனால் போலிஸ்கார் நீல வெளிச்சமோ, siren கூவலோ இல்லாமல் ராக்ஸி போவதுபோல சிவப்புச் சிக்னல்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்து மிதமான வேகத்தில் போனது. போலிஸ்காரர்கள் ஹாண்ட்பாக்கை மீட்டுத் தருவார்களா என்ற சந்தேகம் துளிர்விட்டது. காலையில் இருந்து எதுவுமே குடிக்காதது வேறு தொண்டையையும், நாவையும்  உலர்ந்து வறட்டி குரலும் கரகரத்தது. மெல்லிய குரலில் நடுவயதினனிடம் location update ஆகியிருக்கின்றதா என்று கேட்டேன். அவனும் திரையில் பார்த்து ஹாண்ட்பாக் இப்போது மெதுவாக உள்வீதியில் நகர்கின்றது. எடுத்தவர் சிலவேளை நடையில் போகலாம் என்றும் ஐந்து நிமிடங்களில் இடத்தை அண்மிக்கலாம் என்றும் சொல்லி மேலும் zoom பண்ணிக் காட்டினான். இணையின் ஃபோன் GPS புள்ளி நகரும் தெருவை நோக்கி இளவயதினன் போலிஸ்காரைச் செலுத்தினான்.


ஹொட்டேலில் இருந்து குடியிருப்புக்கு போகும் பாதைத் தடம்

போலிஸ்கார் இப்போது உள்வீதியில் ஒரு தொடர்மாடிக் குடியிருப்புப்பகுதிக்குள் வந்துவிட்டது. வசதிகுறைந்தவர்கள் வாழும் இடம் போலத் தோன்றினாலும், graffiti எதுவும் இல்லாமலும் தெருக்களில் எவரையும் மதிக்காமல் குழப்படிகள் செய்யும் சிறுவர்கள் நிற்காமலும் அமைதியான இடமாக இருந்தது. இலண்டன் குறைடனில் பாதுகாப்பில்லாத குற்றங்கள் மலிந்த இடங்கள் எல்லாம் பழக்கம் என்பதால் ஆம்ஸ்டர்டாம் புறநகர்க்குடியிருப்பு எதுவித அச்சவுணர்வையும் தரவில்லை. இணையின் ஐபோன் GPS புள்ளி இப்போது நகர்வதை முற்றாக நிறுத்திவிட்டது. அதன் இடத்தை சரியாகக் கணிக்கமுடியாததால் போலிஸ்கார் குடியிருப்புப் பகுதி குச்சுவீதிகளினூடாக பலமுறை சுற்றி, நிறுத்தி நிறுத்தி வட்டமிட்டுட்டுக்கொண்டிருந்தனர். இரு GPS புள்ளிகளும் நெருங்குவதும் விலகுவதுமாகப் போக்குக் காட்டின. இரு GPS புள்ளிகளும் 10 மீற்றர் தூர இடைவெளியில் அண்மித்த பின்னர் பொலிஸ்கார் நிறுத்தப்பட்டது. நடுவயதினன் zoom பண்ணப்பண்ண இரு GPS புள்ளிகளும் ஒரேயிடத்தில் நிலைகொள்ளாமல் மாறிக்கொண்டிருந்தன. இணையின் ஐபோன் GPS location இப்போது purple கலரில் இரண்டு மூன்று கட்டடங்களை உள்ளடக்கி பெரியவட்டமாக மாறியது. எனது ஃபோனும் அந்த வட்டத்திற்கு அண்மையாக வந்தாலும் ஓரிடத்தில் நிலைக்கவில்லை. துல்லியமாக இடத்தைக் காட்டமுடியாமல் GPS திணறினாலும் போலிஸார் இறங்கித் தேடுவார்கள் என்று நினைத்து ‘என்ன செய்யலாம்’  என்று அவர்களிடம் கேட்டேன். போலிஸை வழிநடத்துவதோ, அறிவுரை சொல்வதோ அவர்களின் தொழில்சார் அறிவைச் சரியாக மதிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி ஹாண்ட்பாக்கை மீட்பதை பிசகுபடுத்திவிடும் என்று சில வார்த்தைகளிலேயே அளந்து உரையாடிக்கொண்டிருந்தேன். நானே இறங்கித் தேடவேண்டும் என்ற உந்துதலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.


போலிஸ்கார் குடியிருப்பு குச்சுவீதிகளில் சுற்றிய தடங்கள்

நடுவயதினன் டச்சில் மற்றவனுடன் ஏதோ சில வினாடிகள் ஃபோனைக் காட்டிக் கதைத்தான். இளவயதினன் கீழ்ப்படிவுள்ள மாணவன்போல் எல்லாவற்றையும் ஆமோதித்தது அவர்கள் ஏதோ திட்டத்தை விவாதிப்பதுபோலப் பட்டது. என்னைக் காருக்குள் இருத்திவிட்டு இறங்கித் தேடப்போகின்றார்களாக்கும் என்று மனது சமாதானப்பட்டது. நடுவயதினன் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து “ஹாண்ட்பாக் நகரவில்லை. அது நகர்ந்தால்தான் இறங்கித்தேடமுடியும்” என்றான். மேலும் “GPS tracking துல்லியம் காணாது. நாங்கள் வீதியினருகே பார்க்கிங்கில் நின்றபோதும் GPS 20 மீற்றருக்கு அப்பால் கட்டடத்தில் நிற்பதுபோலக் காட்டுகின்றது. ஹாண்ட்பாக் வீடுகளுக்குள் இருந்தாலும் எந்தவீடு என்று தெரியாது. எல்லோருடைய வீடுகளையும் சந்தேகப்பட்டு தேடவும்முடியாது. அதற்கு அனுமதியும் இல்லை. எனவே ஹாண்ட்பாக் நகரும் மட்டும் பொறுப்போம்” என்றான். அவன் சொன்னது நியாயமாகப் பட்டாலும் இவ்வளவு அண்மையாக வந்துவிட்டு ஹாண்ட்பாக் இல்லாமல் திரும்பக்கூடாது என அந்தரப்பட்டு “இரண்டு GPS புள்ளிகளும் ஒரேயிடத்தில் வரும்வரை இறங்கி நடந்து பார்க்கலாமா?” என்று கேட்டேன். அதையும் அவர்கள் GPS துல்லியம் காணாது என்று தட்டிக் கழித்து GPS புள்ளி நகர்ந்தால்தான் அல்லது யாரும் சந்தேகமாக நடமாடினால்தான் தாங்கள் இறங்கமுடியும் என்றனர். இணையின் GPS புள்ளி நகராமல் last update: Now என்று தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தது. 5 அல்லது 10 மீற்றருக்குள் நின்றிருந்தும் இறங்கித் தேடமுடியாமல் போலிஸ்காருக்குள் இருந்தது மனதைக் குடைந்தது. காருக்குள்ளேயே இன்னும் 10 நிமிடங்கள் இருந்து நகராமல் purple வட்டத்திற்குள் நிலைத்து நிற்கும் இணையின் ஃபோன் GPS புள்ளியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

சீனியர் போலிஸ்காரர் GPS புள்ளி அசையாததால் இனியும் அங்கு சும்மா நிற்பதில் பிரயோசனமில்லை என்றான். என்னைத் திரும்பவும் ஹொட்டேலில் இறக்கிவிடப்போவதாகச் சொன்னார்கள். எனது நம்பிக்கைகள் எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்தன. ஹாண்ட்பாக் நகர்ந்தால் அவசர நம்பர் 112 க்கு அடித்தால் உடனடியாகப் போலிஸ் வரும். மீண்டும் தேடலாம் என்றார்கள். இவர்கள் இறங்கித் தேடாமலேயே தங்கள் அலுவலை முடிக்கின்றார்கள் என்று உள்ளே கறுவினேன். ஹாண்ட்பாக் மீளக்கிடைக்கும் என்ற நம்பிக்கை வடிந்து உடலும் உள்ளமும்  சோர்ந்தது. எனினும் அந்த இடத்தின் GPS location ஐ உடனடியாக Google map இல் பதிவு செய்தேன். ஹாண்ட்பாக்கை எடுக்கமுடியாத இயலாமையோடு கனத்திருந்த மனத்துடன் இருந்த என்னைச் சுமந்துகொண்டு போலிஸ்கார் மீண்டும் ஹொட்டேலை நோக்கி நகரத் தொடங்கியது.

...

மூத்தவனின் ஃபோனிலுள்ள Life360 app ஊடாக நான் ஹாண்ட்பாக்கை மீட்காமலேயே திரும்புவது இணைக்குத் தெரிந்திருக்கும். எனினும் ஹொட்டேலில் போலிஸ்காரில் இருந்து இறங்கியதும் இணையிடம் சைகையாலேயே ஏமாற்றமான செய்தியைக் கூறினேன். போலிஸ்காரர் கிரெடிற் கார்ட்ஸை உடனேயே நிறுத்துவது நல்லது என்று சொல்லி சில அடிப்படை விபரங்களைக் கேட்டெழுதிக்கொண்டார்கள். எனது ஃபோன் Google map இல் பொலிஸ் ஸ்ரேசன் விலாசத்தைப் பதிந்து அங்கு வந்து விரிவான முறைப்பாடு கொடுக்கச் சொன்னார்கள்.

ஹொட்டேல் ரூமுக்குப் போய் வங்கியில் இருக்கின்ற சொற்பப் பணத்தை முதலில் காப்பாற்றவேண்டும் என்பதால் முதலில் இணையின் வங்கிக்குப் ஃபோன் பண்ணி debit card ஐ நிறுத்தினோம். கிரெடிற் காட்ஸ் கொம்பனிக்கும் கடனட்டைகள் களவு போனதைச் சொல்லி புதிய அட்டைகளை அனுப்புமாறு சொன்னோம்.  

ஹாண்ட்பாக் கிடைக்காவிட்டால் போலிஸ் ஸ்ரேசன் போய் சரியான தகவல்களைக் கொடுக்கவேண்டி வரலாம் என்பதால் என்னென்ன இருந்தன என்ற விபரங்களை இணையை எழுதச் சொன்னேன். Michael Kors (MK) brand இல் ஹாண்ட்பாக், MK purse, MK sunglasses 🕶, iPhone, credit cards, debit card, driving license என்று அத்தியாவசியமானவை எல்லாமே லிஸ்றில் இருந்தன. மொத்தத்தில் சொந்த சரித்திரத்தையே ஃபோனிலும் பேர்ஸிலும், wallet இலும் காவித் திரிகின்றோம். களவுபோகும்போது அல்லது தொலைந்துபோகும்போதுதான் அவை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகின்றது.

Life360 app அப்போதும் இணையின் ஃபோன் location ஐ அது இருந்த இடத்தில் இருந்து மாறாமலேயே காட்டிக்கொண்டிருந்தது. ஆனால் பற்றரி 65% வீதத்திற்கு குறைந்திருந்தது. ஹாண்ட்பாக், ஃபோன் எல்லாவற்றையும் இழந்து ஹொலிடேயில் எஞ்சியிருக்கும் மூன்று நாட்களையும் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் வீணாக்குவதா? என்ற கேள்வி மனதைக் குடைந்தது. இணையின் ஃபோன் வேறு “Last updated now” என்று Life360 app இல் காட்டியது. போலிஸ் ஸ்ரேசனுக்குப் போய் நேரத்தை வீணடிப்பதை விடுத்து மீண்டும் ஹாண்ட்பாக் இருக்கும் இடத்திற்குப் போய்த் தேடப்போகின்றேன் என்று இணையிடம் சொன்னேன். அப்படிப் போவதென்றால் பிள்ளைகளை ஹொட்டேலில் விட்டுவிட்டு தானும் வருகின்றேன் என்றார். நான் தனியே போய் ஏதாவது மோட்டுத்தனமான வேலை செய்தாலும் என்று இணை யோசித்திருக்கலாம் என்பதால் இருவரும் சேர்ந்துபோக சம்மதித்தேன். 

இளையவனிடம் அருகில் இருந்து சாப்பிட்டவன் எப்படி இருப்பான் என்று கேட்டேன். அவன் ஹாண்ட்பாக் எடுத்தவனாக இருந்திருந்தால் முரடனா இல்லையா என்பதை வைத்து அதற்கேற்ப என்னைத் தயார்படுத்தவேண்டும் என்ற முன்னேற்பாடுதான். இளையவன் அருகிலிருந்தவன் சாதாரணமானவன் என்று சொன்னான். அதுவும் தெம்பைக் கொடுத்தது. அதிக நேரம்  வெளியே நிற்கவேண்டி வந்தாலும் என்பதால் பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் ஹொட்டேல் ரூமை விட்டு வெளியே போகக்கூடாது என்று எச்சரித்து, power pack உட்பட தேவையானவற்றை backpack இல் எடுத்துக்கொண்டு ஹாண்ட்பாக் இருக்கும் இடத்தை நோக்கி பஸ் ஒன்றைப் பிடித்துக்கொண்டு போனோம். Google map இருந்தால் உலகில் எந்த மூலைக்கும் பிறரின் தயவின்றி போய்வரக்கூடியதாக உள்ளது மிகவும் வசதியாகப் போய்விட்டது.

Google map இல் பஸ் போகும் தடத்தைக் கவனித்தவாறே எப்படி ஹாண்ட்பாக்கை திரும்ப எடுக்கலாம் என்று மூளை திட்டங்களை வகுக்கத் தொடங்கியது. ஹாண்ட்பாக் நகராமல் இருப்பதால் அது வீட்டுக்குள் இருக்கலாம் அல்லது ஒரு வாகனத்திற்குள் இருக்கலாம். எனவே Life360, Find iPhone அப்ஸைப் பாவித்து அதன் location க்கு மிகவும் அண்மையாகப் போய் இடத்தை உறுதிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உண்டானது. இரண்டுமே ஐபோன்கள். ஒரே நெற்வேர்க் என்பதால், GPS புள்ளிகளை ஒன்றின்மீது ஒன்று குவியச்செய்த பின்னர் call கொடுத்துப்பார்த்து ஹாண்ட்பாக்கின் இடத்தை கட்டாயம் கண்டுபிடிக்கலாம் என்று மனம் கணக்குப்போட்டது. அப்படி உறுதிப்படுத்தியவுடன் அவசர நம்பர் 112 க்கு ஃபோனடித்து போலிஸை வரவழைத்தால் எல்லாம் சுபமாக முடியலாம். ஆனாலும் இதனை முன்னரே செய்யாமல் காருக்குள்ளேயே இருந்த போலிஸ் இப்போது மட்டும் வந்து உதவுவார்களா என்ற சந்தேகமும் கூடவே இருந்தது. எதற்கும் ஹாண்ட்பாக் இருக்குமிடத்திற்கு அண்மையாக போலிஸ் ஸ்ரேசன் இருக்கின்றதா என்று Google map இல் தேடினால் அது 500 மீற்றர் முன்னுக்கு இருந்தது. 

நாம் இறங்கவேண்டிய பஸ் தரிப்பிடம் ஒரு Lidl supermarket க்கு முன்னால் இருந்தது. பஸ் தரிப்பிடத்தை அண்மிக்கும்போதே adrenaline உடலில் ஏறத்தொடங்கி இதயத் துடிப்பு அதிகமாகியது. பஸ்ஸில் இருந்து நாம் இருவரும் இறங்கி Google map ஐப் பார்த்தவாறே ஹாண்ட்பாக் இருக்கும் திசை நோக்கி வீதியில் நடக்க ஆரம்பித்தோம். Supermarket இருந்தும் அதிகளவு ஆள் நடமாட்டம் இல்லாமல் வீதி வெறிச்சோடி இருந்தது. பிரதான வீதியை விட்டிறங்கி குடியிருப்புப்பகுதிக்குள்ளால் குறுக்கறுத்து ஓடும் உள்வீதிக்குள் வந்தோம். முன்னர் போலிஸுடன் வந்து நின்ற 'T' வடிவில் இரு வீதிகள் சந்திக்கும் இடத்திற்கு வந்தாயிற்று. ஹாண்ட்பாக்கின் location மாறாமல் அதே இடத்தைக் காட்டியது. ஏதோ டெலிவரி செய்யும் ஒரு வானைத் தவிர்த்து ஆளரவம் ஏதுமில்லாத பரிச்சயமற்ற குடியிருப்புப் பகுதி சிறிய அச்சவுணர்வைத் தந்தது. அதனை வெளிக்காட்டாமல் இணையினதும் எனதும் GPS புள்ளிகளை ஒருங்கச் செய்யவதில் முனைப்புக்காட்டி  வீதிகள் சந்திக்கும் முனையில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தோம். இரு GPS புள்ளிகளும் குவியும் தறுவாயில் இருந்ததை இணைக்குக் காட்டி சரியான இடத்தில்தான் நிற்கின்றோம் என்று சொன்னேன்.

இணையின் ஃபோனின் GPS புள்ளியை துல்லியமாக அறிய Life360 app இல் மேலும் zoom பண்ணினால் அது நாம் நின்றிருந்த முடக்கில் உள்ள மூன்றடுக்குத் தொடர்மாடிக் குடியிருப்பின் மூலையைக் காட்டியது. அந்தக் குடியிருப்பில் உள்ள மூன்று வீடுகளில்தான் ஒன்றில்தான் இருக்கக்கூடும் என்று இணையிடம் கூறியவாறு குடியிருப்பின் வாசலை நோக்கி நடந்தேன். Code entry security உள்ள வீடுகளாக இருந்தன. இப்படியான குடியிருப்பு வீடுகளுக்குள் உள்நுழைய எல்லா வீட்டுக்குமான பட்டன்களை அழுத்தினால் யாராவது ஒருவர் அசட்டையீனமாகக் கதவைத் திறக்கக்கூடும். அல்லது யாராவது உள்ளே போகும்போது சட்டென்று உள்ளே போய்விடலாம். இந்த உத்திகளை இலண்டனில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் முன்னர் பாவித்த அனுபவம் இருந்தததால் கட்டடத்தின் உள்ளே சுலபமாக நுழையலாம் என்ற நம்பிக்கை வந்தது. உள்ளே போனால் கட்டட மூலைப்பக்கமாக இருக்கும் மூன்று வீடுகளுக்கும் முன்னால் நின்று இணையின் ஃபோனுக்குக்கு call எடுத்துப் பார்த்து ring வரும் இடத்தைக்கொண்டு வீட்டை அடையாளம் செய்து போலிஸைக் கூப்பிடலாம் என்ற எண்ணம் வந்தது.

கட்டடத்தின் உள்ளே போகும் முயற்சியைப் பற்றி இணையிடம் கூறலாம் என்று திரும்பியபோது Life360 app இல் இணையின் ஃபோனின் GPS புள்ளி சில மீற்றர்கள் சற்று நகர்ந்து வீதியில் இருப்பதாகக் காட்டியது. சற்றுக் குழப்பம் வந்தது. ஹாண்ட்பாக் தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னாலுள்ள கார்களுக்குள் இருக்கக்கூடுமா என்று மேலும் துல்லியமாக இடத்தைக் கண்டுபிடிக்க Find iPhone app க்கு மாறினேன். அதுவும் கட்டடத்தை ஒட்டி மிகவும் நெருங்கி வீதியோரம் இருப்பதாகவே காட்டியது. ஹாண்ட்பாக் காருக்குள் இருக்கலாம் என்று இணையிடம் சொல்லி கார்க்கண்ணாடியூடாக ஒவ்வொரு கார்களாக உள்ளே பார்த்துக்கொண்டு வந்தோம். எதிலும் ஹாண்ட்பாக் இருப்பதற்கான அறிகுறிகள் தட்டுப்படவில்லை. நாங்கள் நகரும்போது எனது GPS புள்ளி சரியான திசையில் நகர்ந்து இணையின் GPS புள்ளியைத் தாண்டியது. ஹாண்ட்பாக் காரின் bootக்குள் இருக்கக்கூடும் என நினைத்து call பண்ணிப் பார்ப்போமா என்று இணையிடம் கேட்டேன். சிலவேளை வீட்டுக்குள் இருந்தால் எடுத்தவர் ஃபோனை switch off பண்ணினால் அதன் பிறகு track பண்ணமுடியாது என்பதால் முதலில் வீடுகளுக்குள் இல்லை என்பதை உறுதிசெய்யாமல் call எடுக்கவேண்டாம் என்றார். அதுவும் சரியாகப்பட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே திரும்பவும் Life360 app க்கு மாற்றினால் அதில் மூத்தவனின் ஃபோனின் battery life 1% வீதமாகக் காட்டியது. மூத்தவனின் ஃபோனில் தொடர்ச்சியாக Life360 app ஐப் பாவித்ததால் அல்லது அவன் வழமைபோன்று games இல் பிஸியாக இருந்திருக்கலாம் என்பதால் battery வேகமாக இறங்கிவிட்டிருக்கலாம். ஹொட்டேலை விட்டும் வெளிக்கிடும்போது எம்மிடம் இருந்த இரண்டு USB charging cables ஐயும் backpack இல் எடுத்துவந்தது நினைவுக்கு வந்தது. ரூமை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லி தனியேவிட்டுவேறு வந்திருக்கின்றோம். எவ்வளவு நேரம் ஹாண்ட்பாக் தேடுவதில் செலவழிக்கப்போகின்றோம் என்றும் தெரியாது. இதற்குள் மூத்தவனின் ஃபோனின் battery வேறு dead ஆனால் பிள்ளைகளைத் தொடர்புகொள்ளமுடியாமல் போகும். பாதுகாப்பான ஹொட்டேலில் இருந்தாலும் அவர்களும் எம்முடன் கதைக்கமுடியாமல் தவிக்க நேரலாம் என்று சிந்தனைகள் சுழன்றடித்து மூளையைத் தடுமாறச் செய்தன. Battery dead ஆக முன்னர் குறுக்கு வீதியில் நடந்தவாறே அவசர அவசரமாக மூத்தவனுக்குக் call எடுத்தேன். மூத்தவன் வழமையாக answer பண்ணாமல் விடுவதால் இப்போதும் அப்படி நடக்கக்கூடும் என்று பதற்றம் தொற்றிக்கொண்டது. நல்லவேளை இரண்டாவது ரிங்கிலேயே பதிலளித்தான். அவனது ஃபோனின் battery இறங்கியுள்ளதைச் சொல்லி அது dead ஆகுமுன்னர் இருவரும் கீழே reception க்குப் போய் battery ஐ charge செய்யுமாறும் ஃபோனுக்கு அருகிலேயே இருக்குமாறும் வேகமாகச் சொல்லிமுடித்தேன்.

மீண்டும் Life360 app ஐப் பார்த்தால் இணையின் ஃபோனின் GPS புள்ளி சந்திமுனையில் இருந்து விலகி மேலும் நகர்ந்து வீதியில் நிற்பதாகக் காட்டியது. உடனே Find iPhone app க்கு மாற்றினால் அதுவும் நகர்ந்ததை உறுதிப்படுத்தியது. நாங்கள் அருகில் நிற்குபோதே திடீரென்று இணையின் ஃபோன் நகர்ந்ததாகக் காட்டியதால் பரபரப்பாகி நான் ஃபோன் கதைக்கும்போது யாராவது வெளியே போய்வந்தார்களா என்று இணையைக் கேட்டேன். ஒருவன் குடியிருப்பு வீட்டுக்குள் போனதாகவும் உள்ளேயிருந்து எவரும் வெளியே வரவில்லை என்றும் சொன்னார். இணையின் ஃபோனின் GPS புள்ளி நகர்ந்ததைக் காட்டி ஹாண்ட்பாக் நிச்சயமாக பார்க்கிங்கிலுள்ள கார் ஒன்றினுள்தான் இருக்கின்றது என்று சொல்லி ஒவ்வொரு காராக முதலிலிருந்து இறுதிவரை தேடுவோம் என்றேன். ஹாண்ட்பாக் உள்ளே இல்லாவிட்டால் கடைசிக் காரில் இருந்து திரும்ப வரும்போது call செய்து பார்த்தால் எந்தக் காருக்குள் இருக்கின்றது என்றாவது தெரியும் என்றேன். 

நிறுத்தத்திலுள்ள கார்களின் முன்பக்கம் நானும் பின்பக்கம் இணையுமாகத் தேடத் தொடங்கினோம். ஐந்தாறு கார்களைத் தாண்டியதும் ஒரு கறுப்புநிற ஹொண்டா காரின் கீழ்ப்புறமாக தார்ச்சூட்டுக்காக படுத்திருக்கும் பூனையின் வால் போல ஏதோ தெரிய என்னவென்று பார்ப்பதற்கிடையில் இணை ஓடிப்போனார்.  அது ஹாண்ட்பாக்கின் strap. இணை கண்ணிமைக்கும் நேரத்தில் “என்ரை ஹாண்ட்பாக்” என்று கூவியவாறே  strap ஐ இழுத்து ஹாண்ட்பாக்கை வெளியே எடுத்தார். ஹாண்ட்பாக் திறக்கப்படாமலேயே காரின் அடியில் வீசப்பட்டிருந்தது. இணை அதனைத் திறந்து எல்லாவற்றையும் சரிபார்த்து அவை எல்லாமே அந்த அந்த இடத்திலேயே இருக்கின்றன என்று சொல்லி ஹாண்ட்பாக்கை தோளில் மாட்டினார். இப்போது ஹாண்ட்பாக் இருக்குமிடத்தில் இருந்துகொண்டது!

நான் ஹாண்ட்பாக் கிடந்த காரைப் படமெடுக்க மினக்கெட "ஒரு நிமிஷமும் இங்கு நிற்கவேண்டாம். உடனேயே போவோம்” என்று அவசரப்படுத்தினார். நானும் “உனக்கு இன்றைக்கு நல்ல லக் அடிச்சிருக்கு! ஏன் என்னை இலண்டனில் கண்ட முதல்நாளிலிருந்தே உனக்கு லக்தான்” என்று கூறியவாறே வெற்றிக் களிப்புடன் பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம்.

...

திரும்ப ஹொட்டேலுக்குப் போய் ரிஷப்சனில் ஹாண்ட்பாக்கைக் காட்டி எப்படி எடுத்தோம் என்று பெண் பணியாளரிடம் சொன்னோம். “நீங்கள் தைரியமாகத்தான் detective வேலை பார்த்திருக்கின்றீர்கள்” என்று சொல்லி CCTV இல் ஹாண்ட்பாக் எடுத்தவரை அடையாளம் கண்டு அதனைப் போலிஸுக்கு சற்றுமுன்னர்தான் தெரிவித்ததாகச் சொன்னாள். அசட்டுத்
துணிச்சலில் திரும்பப் போயிருந்தாலும் பிரபஞ்சம் தற்செயலாக உருவாகி, அதில் இந்தப் பூமியும் மனிதர்களும் தோன்றியதுபோல் எல்லா நிகழ்வுகளுமே ஒரு ஒழுங்கில் விபத்தாக நடந்ததால்தான் ஹாண்ட்பாக் திரும்பக் கிடைத்தது என்றே நினைக்கின்றேன். ஹாண்ட்பாக் எடுத்தவர் போலிஸ்கார் அவர் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு விரைவாக வந்ததால் ஹாண்ட்பாக்கில் tracking device இருப்பதை அறிந்து பயத்தில் காருக்கு அடியில் எறிந்திருக்கலாம். போலிஸ் இறங்கித் தேடாமல் கைவிட்டபின்னர் நாம் தேடிப் போகாவிட்டால் அவர் மீண்டும் ஹாண்ட்பாக்கை எடுத்திருக்கலாம். அதிர்ஸ்டவசமாக இந்த அட்வெஞ்சர் மூன்று மணித்தியாலங்களில் Smartphone technology apps களின் உதவியுடன் முடிந்ததால் வேறு தடங்கல்களின்றி ஹொலிடே சந்தோஷமாகக் கழிந்தது. என்னுடைய பிறந்தநாளை காற்றாலைகளை காண Kinderdijk க்கும் போகமுடிந்தது.



- முற்றும்



Comments

பிரசித்த பதிவுகள்