பரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து



06 ஜன. வெள்ளி
மீண்டும் ஒரு வெறுமையான நாளாகத்தான் இன்றைய பொழுதும் போனது. இப்படியே தொடருமோ என்ற அச்சம் மனதை வாட்டுகிறது. எதுவுமேயின்றி வீணாகப் பொழுதைக் கழிப்பது வீண்வேலை என்றும் தெரிந்தும் தொடர்ந்தும் அதுதான் நடக்கின்றது. 

கோயிலுக்குப் போயிருந்தேன். பெண்களைப் பார்க்கத்தான் மனம் அலைபாய்கின்றது. என்றாலும் சிறிது கடவுள் பக்தியும் அங்கு இருப்பதுபோலத்தான் தெரிகின்றது. கடவுள் என்ற உன்னதமானதொன்றை எவ்வாறு பணம் சம்பாதிக்கப் பாவிக்கின்றார்கள் என்பதைத்தான் கோயிலினுள் நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் மனம் சிந்திக்கின்றது. ஐயர் செய்யும் கிரியைகள் கூடச் செயற்கையாகத்தான் தோன்றுகின்றது. பற்றுச் சீட்டின் அளவைக் கொண்டு பக்தியை மதிப்பிடுவது போல இருக்கின்றது. ஒரு பவுண் அர்ச்சனைக்கு வெறும் பூவும் திருநீறு சந்தனமும், ஐந்து பவுணிற்கு கூடுதலாக ஒரு ஆப்பிளும் அளவுகோலாக உள்ளது. மன அமைதியை நாடிச் சென்று மனச் சஞ்சலத்துடன் திரும்பிவந்தேன். 


27 பெப். திங்கள் அதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு எப்போது விடும் என்று புரியவில்லை. 

02 மார்ச் வியாழன் இன்று உடல் நிலை அவ்வளவு ஒத்துழைப்புத் தரவில்லை. தடிமன், காய்ச்சல் வரலாம் போலத் தெரிகின்றது. சிறு வருத்தம் கூடப் பலவீனத்தைத் தருகின்றது. எப்போதும் போல வலி நிவாரணிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. வழமையான ஒரு தலையிடி என்றாலும் கூட இனிப்புச் சாப்பிடும் ஆர்வத்துடன் என் மனம் வலி நிவாரணிகளைத் தேடுகின்றது. இவ்வளவு தூரம் அடிமையாக என்னால் மாறமுடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. சில விடயங்கள் பிழையானது என்று தெரிந்தும் கைவிட முடியாத நிலைமை. கைவிட முடியாத விடயங்களை பிழையில்லாத விடயங்கள் என்று என்னை நானே ஏமாற்றும் தர்க்கங்கள். இதன்மூலம் எப்போதுமே சரியானவனாகக் காண்பிக்க முனையும் முட்டாள்தனமான விவாதங்களை மனதில் நடாத்தியபடி வாழும் ஒரு போலியான வாழ்வு. படிப்புக் கூட அப்படித்தான். கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும் என்பது நன்றாகவே புரிகின்றது. ஆனால் முடியவில்லை. என்றாலும் எனது தகுதியை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் மனது நினைக்கின்றது. ஒன்றுமே இல்லாமல் உள்ளபோது மற்றவர்கள் கெட்டிக்காரன் என்று புகழுவதை விரும்பும் மனம் படைத்துவிட்டேனா? புகழுக்கு ஆசைப்படலாம். ஆனால் புகழைத் தேடிப் போகக் கூடாது. எமது கடின உழைப்புக்குப் புகழ் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் கடின உழைப்புத்தான் என்னிடம் இல்லை! 

15 ஜூன் வியாழன் விடுமுறையை நன்றாக அனுபவிக்க வேண்டும் போலத்தான் உள்ளது. ஆனால் காசும் உழைக்கவேண்டும் அல்லவா. இன்று நித்திரையால் எழும்பி "மரப்பசு" நாவலை வாசித்து முடித்தேன். கதையை வாசிக்கும்போது பாலியல் புத்தகம் படிப்பது போன்றதோர் உணர்வு வந்ததேயொழிய கதையின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை. கீழ்த்தரமான வாசகனாகத்தான் இருக்கிறேன். கதையாசிரியரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று அறிய நான் முயற்சிக்கவேயில்லை. யாரும் கேட்டால் நான் பெரிய புத்தகங்களை வாசித்தேன் என்று பெருமைப்படலாம். வாசித்தவர்களுடம் என்னை ஒப்பிட்டு என்னைப் பெரியவன் என்று பிரமிப்புக் காட்டலாம். இதுதானே நான் விரும்புவது. தமிழ் நவீன இலக்கியங்களைப் படிப்பதில் உண்மையில் என்ன நோக்கத்தை நிறைவேற்றமுடியும்? நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் என்று சொல்லாடல்களை மேற்கொண்டு வக்கிரகங்களை ரசிக்கும் மனதுதானே என்னுடையது.பத்து மணியளவில் வேலைக்குப் புறப்பட்டேன். தூக்கிப் பறிக்கிறதுதானே வேலை. வேண்டுமென்றே கடினமான வேலையாகத் தந்தார்கள். தமிழர்கள்தான் வேலை செய்வது அதிகம். இந்தியாக்காரனிடமும் தமிழனிடமும் வேலை செய்யும்போது சுயகெளரவம், மானம் என்பவற்றைச் சிறிது விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். என்னைப் பற்றிப் பெருமையாக நினைத்தால்தான் இவையெல்லாம் பெரிதாகத் தோன்றும். ஆனால் நான் எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொண்டேன். எதிர்பார்க்காதது நடந்தால்தானே பிரச்சினை. எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது புரியவில்லை. ஆனால் அதிகம் காசு சேர்க்கவேண்டும் என்று மனம் சிந்திக்கின்றது. மூன்று மாதத்தில் வாரம் ஏழு நாட்களும் கிடைக்கும் மணித்தியாலங்களில் கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான் அடுத்த கல்வியாண்டில் காசுப் பற்றாக்குறை இன்றி சமாளிக்கலாம்.

Comments

தலையிடியை போக்க மூச்சுப்பயிற்சி முயலுங்கள்.
கோவில்- பெண்
மரப்பசு- பாலியல் எண்ணம் எல்லாம் மனிதர்களுக்கு பொதுவானது.
இதெல்லாம் ஹார்மோன் செய்யும் அடாவடிகள்.

அந்த தமிழ் மாற்றுப் பெட்டியில் அடித்து கருத்தை பதிவு செய் என்றால் பிழைச்செய்தி வருகிறது,பாருங்கள்.
பிழைச் செய்தியை சுட்டிக் காட்டியமைக்கு வடுவூர் குமாரிற்கு நன்றிகள். பிழைச் செய்தியை நீக்கமுடியவில்லை. எனவே பின்னூட்டங்களைப் பதிவு செய்ய பழைய முறையையே பாவிக்க வேண்டியுள்ளது.
Anonymous said…
அண்ணா நீங்கள் யாழ் இணையத்தளத்தில் என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்தமைக்கு எனது நன்றிகள்...

நவன்

http://panithulligal.blogspot.com/
Anonymous said…
கிருபன் அவர்களே
தமிழில் எழுதும் widget html codeயை தந்து உதவமுடியுமா?

பிரசித்த பதிவுகள்