இழந்து போனவை



விடிகாலை விண்ணில் கிழக்கிலெழும்

விடிவெள்ளியையும் 

விருச்சிக விண்மீன் கூட்டங்களையும் 

விரும்பிப் பார்க்கவென்று எழுந்ததும் 

பூபாளம் பாடும் புள்ளினங்களும் 

எங்கள் வீட்டுக் கோழிகளும் 

நடாத்தும் இசைக் கச்சேரியைக் கேட்டு 

இன்புற்று விடியலை எதிர்கொண்டதும் 

மழை பொழியும் கார்த்திகையில் 

நிலந்தெரியாத இருளினுள் 

இலாம்புடன் அசைந்துவரும் 

குழைவண்டில்களை பார்த்து மகிழ்ந்ததும் 

மாசி மாதத்து பனிமூட்டத்தினுள்ளே 

தூரத்துப் பனைமரத்தினூடு எழுகின்ற 

சூரியக் கதிர்களின் வரவுக்காக 

வெற்றுடம்புடன் வெடவெடுத்துக் காத்திருந்ததும் 

கொட்டும் மழைக்காலத்தில் 

திரண்டோடும் வெள்ளத்தினுள் 

காகிதக் கப்பல்கள் விட்டுப் 

பின்னால் ஓடியதும் 

காவிளாய்ச் செடிகள்மீது உட்காரும் 

வண்ணத்துப் பூச்சிகளையும் தும்பிகளையும் 

நூல்தடம் கொண்டு 

விரட்டிப் பிடிக்க அலைந்ததும் 

முயல் உடும்பு வேட்டைக்கெனச் சென்று 

பற்றைகளையும் தோட்டங்களையும் 

உழக்கி அணில்களையும் ஓணான்களையும் 

அடித்துக் கொன்றதும் 

நீந்தி பழகவென கீரிமலை 

வட்டப்பாறை, தொண்டமனாறுபோய்

உப்புநீரின் அடர்த்தியைக் 

குடித்து அறிந்ததும் 

வயதுக்கு வந்துவிட்டோம் 

என்ற உணர்வில் 

கடைக்கண் பார்வைக்கும் 

ஒரு கீற்றுப் புன்னகைக்கும் 

கால்கடுக்கக் காத்திருந்ததும் 

தறித்துப் போட்ட பனைக்குற்றிகளிலும் 

வீதியோர மதவுகளிலும் குந்தியிருந்து 

நாட்டின் அரசியல் முதல் 

பருவச்சிட்டுக்கள் வரை 

வம்பளந்து மகிழ்ந்ததும் 

உக்கிரம் தணிந்த மாலையில் 

வல்லை வெளியில் தனிமையையும் 

தென்றலையும் தேடி ஒடியதும் 

மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய் 

மறைந்துபோக 

நானோ 

ஐரோப்பிய முதலாளியின் அடுப்பங்கரையில் 

மனிதத்தை இழந்து இயந்திரமானேன்.

Comments

Anonymous said…
எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com

நினைவுகளின் தடங்கள் என்றும் நீண்டவை. காலம் கடந்து அடிக்கடி ஞாபகம் கொள்ளும் இனியசுகானுபவங்கள். கிருபனுக்கு வாழ்த்துக்கள்.
யதார்த்தமான எண்ணங்கள் சிதறாமல் பதிவாகியுள்ளது.

அன்புடன் சாந்தி

22.38 21.7.2006
Anonymous said…
னன்ட்ரக இருந்தது
Anonymous said…
எழுதிக்கொள்வது: INDRAN ( COLOMBO)

ARUMAIYANA KAVITHAI , KEEP IT UP.

22.1 13.11.2006
Anonymous said…
எழுதிக்கொள்வது: வன்னி மைந்தன் -

ஆகா..ஆருமைய ஜயா..அருமை.....உண்மையில் ரெம்ப நல்லாய் இருக்கு....

எனக்கு அந்த கால ஞாபகம் வந்தது..இதில் பாதி எனது கதையும் போல் உள்ளது...

நன்றி
வன்னி மைந்தன் -

19.56 19.11.2006
Anonymous said…
அண்ணா கிருபனே அசத்துகிறீர்கள்.

யாழ்(பழைய) ஊமை
வாழ்த்துக்கள்/பாராட்டுக்களுக்கு நன்றிகள்.. நேரம் கிடைத்தால் மேலும் பதிய முயற்சிக்கின்றேன்..
நன்றாக இருக்கிறது, யதார்த்தமாக பழைய நினைவுகள் வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்.
Anonymous said…
எழுதிக்கொள்வது: shan

க்ரெஅட் Kஇருபன்

18.8 27.1.2007
Anonymous said…
எழுதிக்கொள்வது: N.Ranjan

நன்றாக இருக்கிறது சந்தோஷ நன்றி

23.28 25.2.2007
Shanthi said…
Really Nice Para... I didn't know you write so well in Tamil... impressed...

Shanthi
sukan said…
அருமையான ஒரு கவிதை. கண்முன்னே காட்சியை கொண்டுவந்து இறுதியில் இங்கே எங்கள் நிலமையையும் சொல்லிவிட்டுகின்றது.

பிரசித்த பதிவுகள்