நண்பன் ஒருவனின் பிரசுரிக்காத கவிதைகள்
வறுமை என்னுடன் 
உறவாடியது
அது வரவு செலவு பார்க்கும்
பகட்டு உறவல்ல 
மிகக் கெட்டிய 
வலுவான உறவு 
இது வேண்டா உறவு 
விட்டு விடு என்றேன் 
கை காட்ட முயன்றேன் 
அது கணக்கில் 
வரவு வை என்று
சொல்லி 
நொடிப் பொழுதில் 
ஒரு பெண்ணின் சிரிப்போடு 
என் பக்கம் வந்தது. 
விரட்ட முயன்றேன் 
முடியவில்லை. 
அது போனது 
தனியாக
வந்தது 
புடை சூழ. 
வள்ளிப் பெண்ணின் 
அழகது கண்டு 
அது நாணமுற்று 
நின்ற வேளை 
என் கற்பனை ஊற்றில் 
கணிசமாய் ஒரு விக்கல் 
பெண்ணவள் சொல்லில்
பேய்தனும் இரங்கும் 
இவ்வறுமை 
நின் விதிவிலக்கோ? 
திட்டமிட்டேன் 
முடியவில்லை 
முடித்துக் கொள்கிறேன் 
என்னை அல்ல. 
-----
வறுமை + தாய்மை 
கூரையின் ஓட்டையில் 
வீழ்ந்த மழைத்துளி 
வீழ்ந்திடா வண்ணம் 
தன் மகனைக் காத்திட்ட
தாய் 
கண்ணிடை
மல்கிய நீரில் 
நனைந்தது குழந்தை. 
-----
 பட்டை தீட்டாத உண்மைகள்
என்னால் பகட்டான விடயங்களை 
கற்பனையிலோ கவிதையிலோ 
எழுத முடியவில்லை. 
பகட்டு விடயங்களை 
எழுதும் நோக்குடன் 
நான் என் சொற்களுக்கும் 
சந்தங்களுக்கும் 
சலங்கை கட்டநினைத்தேன் 
தோன்றியது
ஓர் நிசப்தம்.

Comments
வலைபதிவிலும் சந்திப்பதில் மகிழ்ச்சி. யாரந்த நண்பன்?
வலைப்பதிவிலும் சற்று ஈடுபடலாம் என்று யோசித்தேன். நேரம் குதிரைக் கொம்பாக உள்ளதால் அதிகம் பதிய முடியவில்லை. என்னைப் போலவே வேலை வேலையென்று அலையும் ஒரு நண்பன் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதைகள் இவை.
நன்றி.
வீழ்ந்த மழைத்துளி
வீழ்ந்திடா வண்ணம்
தன் மகனைக் காத்திட்ட
தாய் கண்ணிடை
மல்கிய நீரில்
நனைந்தது குழந்தை.//
என்னவென்று சொல்வது ! கனமாக உள்ளது. அருமை. நண்பரின் கவிதையை அறியத் தந்தமைக்கு நன்றிகள்